தன்னானானே தன்னானானே நானும் தோட்டம் அமைக்கப் போறேன் வாங்க! தன்னானானே தன்னானானே நானும் தோட்டம் அமைக்கும் கதையை கேளுங்க! (தன்னானானே)
மண்ணைக் கிளறி சீரு செஞ்சு பக்கமெல்லாம் வேலி போட்டு விவசாயப் பண்ணையில விதையும் வாங்கிவிளைய இயற்கை உரமும் வாங்கி (தன்னானானே)
கத்தரி, வெண்டை, பாகலுடன்
கண்ணைக் காக்கும் கீரை விதைகளும்
வாங்கி வந்து, பாத்தி கட்டி
விதைச்ச விதைக்கு நீரும் விட்டு (தன்னானானே)
கருத்தாக கவனிப்பேனே!
கொடிக்கு நல்ல பந்தலிட்டு
இயற்கை உரத்தின் நேர்த்தியாலே
செழித்து வளருமே செடிகளெல்லாம் (தன்னானானே)
காற்று, நீர், சூரியஒளியாலே, மண்ணின்
வளமும் சேர்ந்ததாலே
பூத்துக் காய்த்து குலுங்கியதே
பசுமையான தோட்டமெல்லாம் (தன்னானானே)
நானும் தோட்டம் அமைச்சதை பார்க்க வாங்க!
உயிர்ச்சத்து, தாதுஉப்பு நிறைந்த காய்கள் கீரையெல்லாம்
நம் உடலைப் பாதுகாக்குமே (தன்னானானே)
இயற்கை உரத்தால் உருவாகிய
காய்கள் கீரைகள் எல்லாமுமே
பார்க்க பார்க்க ஆசை வருமே (தன்னானானே)
இதனை நாமும் உண்டு வரவே
நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைத்திடுமே (தன்னானானே)
தேவையானதை வச்சுகிட்டு
உழவர் சந்தையிலே விற்கலாமே!
உழைப்புக்கு உரிய பணமும் பெற்று வாழ்வில்
நாமும் உயர்ந்திடலாமே! (தன்னானானே)
விவசாயத்தாலே மேன்மை பெற
விழிப்புடன் நாமும் இருக்கலாமே!
கையளவு நிலத்திலும் தான் கருத்தாய் தோட்டம் அமைக்கலாமே
குழுவாய் நாமும் உழைக்கலாமே (தன்னானானே)
வருவதை பகிர்ந்து உண்ணலாமே
வருமானத்தையும் பார்க்கலாமே
உங்களுக்கும் ஆசை வருதா
உடனே சொல்லுங்க உதவ வாரேன் (தன்னானானே)