சொற்றுணை வேதியன் என்னும் திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம் அச்சங்கள் மற்றும் ஐயங்கள் நீங்கித் தன்னம்பிக்கை வளரப் பாடப்படுகிறது.
சைவ சமயக் குரவர்கள் நால்வரும் சிவபெருமானின் திருவைந்து எழுத்தான நமசிவாயத்தை தனது பாடல்களில் போற்றிப் பாடி அதன் பெருமைகளை விளக்கியுள்ளனர்.
திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம், கல்லில் கட்டி கடலில் நாவுக்கரசரை இட்டபோது சிவபெருமானை நினைத்து அவரால் பாடப்பட்டது.
திருநாவுக்கரசர் முதலில் சமண சமயத்தில் இருந்தார். பின் தீராத வயிற்று வலி ஏற்பட்டபோது சிவபெருமானை வணங்கி அந்நோய் நீக்கப் பெற்று சைவரானார்.
திருநாவுக்கரசர் சைவ சமயத்தை தழுவியதை பிடிக்காத சமணர்கள் மகேந்திரப் பல்லவனிடம் புகார் செய்தனர்.
இதனை அடுத்து திருநாவுக்கரசரை சுண்ணாம்பு காளவாசலில் அடைந்தும், நஞ்சு கலந்த சோற்றை உண்ணச் செய்தும், பட்ட த்து யானையைக் கொண்டு மிதிக்கச் செய்தும் என பலவாறு துன்புறுத்தப்பட்டார்.
இறுதியாக சமணர்களின் சூழ்ச்சியால் கல்லில் திருநாவுக்கரசர் கட்டப்பட்டு கடலில் மன்னால் வீசப்பட்டார்.
அப்போது திருநாவுக்கரசர் நமச்சிவாயப் பதிகத்தைப் பாடினார். இறைவனின் அருளால் கல்லானது தெப்பமாக மாறி திருநாவுக்கரசர் காப்பாற்றப்பட்டார்.
ஒவ்வொரு முறையும் நாவுக்கரசரை கொல்ல முயற்சி செய்து தோல்வியைத் தழுவிய மகேந்திரப் பல்லவன் இறுதியில் சைவ சமயத்தைத் தழுவினான் என்பது வரலாறு.
தற்போது இப்பதிகமானது வழித்துணை நன்றாக அமையப் பாடப்படுகிறது.
திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சி வாயவே. 1
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக்கு அருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே. 2
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின்று அறுப்பது நமச்சி வாயவே. 3
இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. 4
வெந்தநீறு அருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறுஅங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே. 5
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அல்லால்
நலமிலன் நாள்தோறும் நல்கு வான்நலன்
குலமிலர் ஆகினும் குலத்திற்கு ஏற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 6
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 7
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே. 8
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே. 9
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாய பத்தும்
ஏத்தவல் லார்தமக்கு இடுக்கண் இல்லையே. 10
–திருநாவுக்கரசர்
மறுமொழி இடவும்