பகவான் கிருஷ்ணன் மிகவும் அன்பானவர். அவர் மாடுகள், ஆடுகள், செடிகள், கொடிகள், மரங்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களையும் மிகவும் நேசித்தார்.
கிருஷ்ணர் எப்போதும் கையில் புல்லாங்குழல் வைத்திருப்பார் என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்.
அந்த புல்லாங்குழல் எப்போதும் கிருஷ்ணரின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெற்றது என்பதை ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்னும் இதனைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கிருஷ்ணர் தான் வளர்த்து வந்த தோட்டத்திற்கு தினமும் சென்று எல்லா மரம் செடி கொடிகளிடமும் “நான் உங்களை நேசிக்கிறேன்” என்று கூறுவார்.
தோட்டத்தில் இருந்த அனைத்து தாவரங்களும் “கிருஷ்ணா நாங்களும் உம்மை நேசிக்கின்றோம்” என்று பதில் கூறும்.
ஒருநாள் கிருஷ்ணர் தோட்டத்திற்கு அவசரமாகச் சென்றார். அங்கிருந்த மூங்கில் புதரின் அருகில் சென்று பதட்டமாக நின்றார்.
வழக்கமாக வரும் கிருஷ்ணரின் முகம் மிகவும் மகிழ்ச்சியுடனும் பரவசத்துடன் இருக்கும். ஆனால் இன்று அவரின் முகத்தில் சோகம் கலந்த பதட்டம் தென்பட்டதைக் கண்ட மூங்கில் அவரைப் பார்த்து “கிருஷ்ணா என்ன நேர்ந்தது?” என்று கவலையுடன் கேட்டது.
“ஒன்றும் இல்லை. உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். ஆனால் அது மிகவும் சிரமமானது” என்றார்.
“சொல்லுங்கள். என்னால் முடிந்தால் நான் அதனை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றது மூங்கில்.
“எனக்கு நீ வேண்டும். அதற்கு நான் உன்னை வெட்ட வேண்டும்” என்றார்.
கிருஷ்ணரின் பதிலைக் கேட்டதும் மூங்கில் சற்று நேரம் யோசித்துவிட்டு “வேறு வழியே இல்லையா? நீங்கள் வேறொன்றும் செய்ய முடியாதா?” என்று கேட்டது.
“இல்லை வேறு வழி இல்லை” என்று கிருஷ்ணர் கூறினார்.
“சரி என்னை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தன்னை அர்ப்பணித்தது.
அதன்பின் கிருஷ்ணர் மூங்கிலை வெட்டி அதில் துவாரங்கள் இட்டார். துவாரம் இடும் ஒவ்வொரு முறையும், மூங்கில் வலி தாங்க முடியாமல் கதறியது.
கிருஷ்ணர் அம்மூங்கிலிருந்து அழகான குழலைச் செய்தார். அக்குழல் எல்லா நேரங்களிலும் அவருடனேயே இருந்தது.
கிருஷ்ணரின் கையில் எப்போதும் இருக்கும் குழலைக் கண்டு கோபியர்கள் உட்பட எல்லோரும் பொறாமை கொண்டனர்.
“கிருஷ்ணர் எங்களுடைய தேவராவார். இருந்தும் நாங்கள் குறைந்த அளவு நேரமே அவருடன் இருக்கின்றோம். ஆனால் அவர் உன்னுடையே தூங்கி உன்னுடையே கண் விழிக்கிறார். நீ மட்டுமே எப்போதும் அவருடன் இருக்கிறாய்” என மூங்கிலிடம் கோபியர்கள் தங்களுடைய மனக்குறையை வெளியிட்டனர்.
“உன்னை எப்போதும் கிருஷ்ணர் தன்னுடன் வைத்திருக்கும் இரகசியத்தை என்னவென எங்களுக்குக் கூறு. உன்னை ஏன் பிரபு தன்னுடைய பெரும் பொக்கிஷமாக் கருதுகின்றார்?” என மூங்கிலிடம் கோபியர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மூங்கில் “நான் முழுவதுமாக கிருஷ்ணரைச் சரணடைந்து விட்டேன் என்பதே இரகசியம். அவர் என்னைக் குழலாக மாற்ற சிலவேலைகளைச் செய்தார். அவை எனக்கு அதிக வேதனையை தந்த போதிலும் அதனைத் தாங்கிக் கொண்டு என்னை முழுமையாக அர்பணித்துவிட்டதால் எப்போதும் அவருடன் இருக்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றேன்” என்று பதிலளித்தது.
மூங்கிலின் முழுமையான சரணடைதலே எப்போதும் அவருடன் இருக்கும் பெரும் பாக்கியத்திற்குக் காரணமாயிற்று.
கடவுள் தாம் விரும்பியதையும் விரும்பிய நேரத்திலும் நமக்குச் செய்கிறார். அவரை முழுமையாக நம்புங்கள். அவரிடம் உறுதியான நம்பிக்கை வைத்திருங்கள். எப்போதும் அவரது கரங்களில் ‘நாம் இருக்கின்றோம்’ என நினையுங்கள். முற்றாக அவரிடம் சரணடைந்து விடுங்கள். நிலையான பேரின்பத்தை அடையுங்கள்.
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா! உன்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!!