பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி தளத்தட்டுகள் நகர்வதால் பூமியின் மேலேட்டில் அதிர்வுகள் ஏற்படுவதையே நாம் நிலநடுக்கம் என்கிறோம்.
புவித்தட்டு நகர்வுகள், எரிமலை வெடிப்புகள், பருப்பொருள் சிதைவு, நிலச்சரிவுகள் மற்றும் நிலப்பிளவுகள் ஆகிய காரணங்களால் நிலநடுக்கம் ஏற்படுகின்றது.
இயற்கைப்பேரிடர்களில் மிகவும் ஆபத்தானது நிலநடுக்கம். இதனை முன்கூட்டிக் கணிப்பதும், முன்னெச்சரிக்கைப் படுத்துவதும் கடினம்.
பொதுவாக இது திடீரென ஒரு சில விநாடிகள் தோன்றி மிகப் பெரிய அளவிலான பொருள் மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றது. உலகில் 90 சதவீத நிலநடுக்கங்கள் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நிகழ்கின்றன.
நிலநடுக்கத்தினால் தீ விபத்துகள், அணைக்கட்டு உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுதல், நிலச்சரிவுகள் ஆகியவைகள் ஏற்படலாம். மேலும் ஆற்றின் போக்கும் மாறலாம்.
நிலநடுக்கத்தினால் கட்டங்களுக்கு சேதம் மற்றும் கட்டங்கள் இடிந்து விழுகின்றன. சுகாதாரக் கேடு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்துத் தடை ஆகியனவும் ஏற்படலாம். இவைகளைத் தவிர உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.
கடலில் ஓத அலைகளும், ஆழிப்பேரலைகளும் ஏற்படுகின்றன.
நிலநடுக்கத்தை நிலநடுக்க பதிவுக்கருவிகளைக் கொண்டு அளக்கலாம். இது ரிக்டர் அளவீட்டில் குறிப்பிடப்படுகிறது. ரிக்டர் அளவீட்டில் மூன்று வரை உள்ள நிலநடுக்கத்தை உணர முடியாது. ரிக்டர் அளவீட்டில் ஏழு மற்றும் அதற்கும் அதிக அளவு நிலநடுக்கங்கள் பெருத்த சேதத்தினை விளைவிக்கின்றன.
தற்போது அடிக்கடி நிகழும் நிலநடுக்கங்களுக்கு புவி வெப்பமயமாதல் முக்கிய காரணமாகும். புவி வெப்பமயமாதலால் பனிபாறைகள் உருகி கடலின் நீர் மட்டம் உயர்கிறது. இதனால் புவியின் அழுத்தம் அதிகமாகி நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஜனவரி 26, 2001-ல் 51-வது குடியரசு தின விழாவின் போது குஜராத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 மற்றும் 8.1-க்கும் இடைப்பட்ட அளவில் பதிவானது.
நிலநடுக்க அலைகள் 700 கி.மீ தூரம் வரை பரவி 21 மாவட்டங்களைப் பாதித்தது. 6,00,000 மக்கள் வீடுகளை இழந்தனர். 19,727 பேர் உயிர் இழந்தனர். 1,66,001 பேர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர்.
90 சதவீதம் வீடுகள், பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க சுவாமி நாராயணன் கோவில் ஆகியவை சேதமடைந்தன.
பேரிடர் தணித்தல்
நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று அமைதியாக இருப்பது. கட்டிடத்தின் உள்ளே இருந்தால் கதவு நிலைகள் அல்லது மேசைக்கு கீழேயும், சன்னல்கள் அல்லது கண்ணாடி பொருத்தப்பட்ட தளவாடங்களிலிருந்து விலகியும் இருக்க வேண்டும்.
திறந்த வெளிப்பகுதிகள் இருப்பின் மின் கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகளுக்கு அப்பால் இருக்க வேண்டும். மோட்டார் வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருந்தால் சுரங்க பாதைகளையோ அல்லது மேம்பாலங்களையோ விட்டு விலகிப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே செல்வதற்கு மின்தூக்கியை (லிப்ட்) பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.
தீவிபத்தை தவிர்க்க எரிவாயு அடுப்பு, மின்விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் ஏனைய விளக்குகளை அணைக்க வேண்டும்.
காயமடைந்த மக்களுக்கு சரியான நேரத்தில் முதலுதவி செய்ய வேண்டும்.
நிலநடுக்கங்களைத் தாங்கக் கூடிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் மண் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் தரம் குறைந்த மற்றும் மிருதுவான நிலப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக் கூடாது.
பள்ளி மாணவர்களியேயும், பொது மக்களிடையேயும் நிலநடுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!