மருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் நீங்கள் வர வேண்டாம் என்பதே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நம்மிடம் விடுக்கும் அன்புக் கட்டளை.
மருந்து இல்லாத நோயான கொரோனாவிற்குப் பயந்து, நாமெல்லாம் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கின்றோம்.
ஆனால் நம்முடன் வாழும் தெய்வங்களான மருத்துவர்களும் செவிலியர்களும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நம்மைக் காக்கப் போராடுகின்றார்கள்.
நமக்காக அவர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் போது, நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் போராட்டம் எப்படிப் பட்டது?
நமது அரசு மருத்துவமனைகளைப் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அடிப்படை வசதிகள் கூட இல்லாதவை அவை.
நம்மிடம் போதுமான படுக்கைகள் உள்ளனவா?
போதுமான மருத்துவ உபகரணங்கள் உள்ளனவா?
மிக முக்கியமாக, மருத்துவர்களும் செவிலியர்களும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு உடைகள், நம்மிடம் போதுமான அளவு உள்ளதா?
என்ற கேள்விகள் எல்லாம் முக்கியமானவை.
மிகக் குறைவான வசதிகளை வைத்துக் கொண்டுதான், மருத்துவர்களும் செவிலியர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
சொந்த வீட்டிற்குள்ளேயே, ஆரோக்கியமாக இருக்கும் ஒரே குடும்பத்தினர், ஒரு மீட்டர் தூரம் தள்ளிப் பழக வேண்டும் என்று சொல்கிறோம்.
கொரோனா நோய் இருக்கின்றது என்று தெரிந்த ஒரு நோயாளியிடம், நேரடியாகப் பழகும் சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்.
நமக்கும் நோய் தொற்றி விடுமோ என்ற பயம் எப்படி இருக்கும்?
கொரோனாவிற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பாதுகாப்பு உடை அணிந்தால், தொடர்ந்து பன்னிரண்டு மணி நேரம் வரை கூட, வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அவர்களால் அந்த நேரத்தில் உணவருந்த முடியாது; தண்ணீர் குடிக்க முடியாது; இயற்கை உபாதைகளுக்காகக் கழிப்பறைக்கு செல்வது கூட இயலாது.
அவர்கள் தொடர்ந்து ஒரு வார காலம் அளவு கூட உழைக்க வேண்டி உள்ளது. அவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் சோர்வுற்று விடுகின்றார்கள்.
மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நம்மைப் போலவே குடும்பம் உண்டு; சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்களும் உண்டு.
ஒரு வார காலம் மருத்துவமனையில் வேலை பார்த்து விட்டு, அவர்களால் வீட்டிற்கு செல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் இரண்டு வார காலம், தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
தங்கள் குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா நோய்த் தொற்று வந்து விடக் கூடாது என்று, அவர்கள் தங்களைத் தாங்களாகவே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்.
மணிக்கணக்கில் பொழுது போகாமல், வெட்டி அரட்டை அடிக்கின்றோம் நாம்.
மரணத்தோடு நேருக்கு நேராக நின்று, போராடிக் கொண்டிருக்கின்றார்கள் நமக்காக வாழும் கடவுள்கள்.
அவர்கள் வேண்டுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான்.
“நமது நாட்டின் மருத்துவமனைகள் தாங்க முடியாத அளவுக்கு, நோயை ஒரே நேரத்தில் அதிகமாக பரப்பி விடாதீர்கள்” என்பதே அது.
நமக்காக, நம் நாட்டுக்காக, மனித குலத்துக்காகப் போர்முனையில் நிற்கும் அவர்களுக்கு, நாம் செய்யும் ஒரே உதவி, நாம் விழிப்புணர்வோடு இருப்பதுதான்.
நாட்டைக் காக்கப் போர்முனைக்குச் செல்லும் வாய்ப்பு, நம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
ஆனால் வீட்டையும் நாட்டையும் காக்க, நமக்கு ஒரு வாய்ப்பு இப்போது உள்ளது.
நாம் சுத்தமாக ஆரோக்கியமாக இருந்து, மருத்துவர்கள், அரசு மற்றும் காவலர்கள் சொல்லும் வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்போம்.
மருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் நீங்கள் வர வேண்டாம் என்ற அன்புக் கட்டளையை செயலாக்க, நாம் அனைவரும் சமூக விலகலைக் கடை பிடிப்போம்.
கொரோனாவை வெல்வோம்!