நீரின் நிறம் – ‍நீருடன் ஓர் உரையாடல் 26

மாடியில் இருக்கும் நீர்த் தொட்டியை சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். குளியலறையில் இருக்கும் குழாயை திறக்க, கருமை நிறத்தில் நீர் பீறிட்டு வந்தது.

நீர்த் தொட்டியில் இருந்த மாசுக்கள் எல்லாம் குழாய் வழியாக வெளியேறும்படி குழாயை திறந்தே வைத்தேன்.

சில நிமிடங்களுக்கு பிறகு குழாயின் வழியே ஊற்றிய நீரின் கருமைத் தன்மை குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், நீர் சுத்தமாக இருந்தது.

நீரில் மாசுத் துகள்கள் இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

உடனே, சமையலைறைக்குச் சென்று அங்கிருந்த குழாயை திறந்து, நீரை ஒரு கண்ணாடி லோட்டாவில் பிடித்துப் பார்க்க, நீர் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.

சில நொடிகளில் கண்ணாடி லோட்டாவின் அடிப்பகுதியில் இருந்த நீர்ப்பகுதி தெளிவானது. அதனையடுத்து, மேற்பரப்பிலும் வெள்ளை நிறம் மறைந்து, லோட்டாவில் இருக்கும் நீர் முழுவதுமாக தெளிவாக இருந்தது.

இந்நிகழ்விற்கு காரணம், ‘நீரிலிருந்து காற்று வெளியேருவது தான்’ என்பது என் நினைவிற்கு வந்தது.

அதாவது, குழாயைத் திறக்கும் பொழுது, நீருடன் சேர்ந்திருக்கும் காற்றும் லோட்டாவில் கொட்டும் நீரும் காற்றும் சேர்ந்த கலவையே வெள்ளை நிறத்திற்கு காரணம்.

எனினும், உடனே நீரில் இருக்கும் காற்று லோட்டாவின் அடிப்பகுதியிலிருந்து மேலெழ, நீர் நிறமற்றதாக தோற்றம் அளிக்கிறது. இயற்கையான இந்த நிகழ்வை எண்ணி மகிழ்ந்து கொண்டேன்.

அப்பொழுது, ‘தூய நீரின் நிறம்’ பற்றி அண்மையில் படித்த செய்திகள் என் நினைவிற்கு வந்தன.

“என்ன சார் யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டது நீர்.

“அட! நீயா? உன்ன பத்திதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.”

“என்னபத்தியா! அப்படி என்ன விஷயம்?”

“உன்னோட நிறத்தப் பத்திதான்.”

“நிறமா?”

“ஆமாம், உன்னோட நிறத்தப் பத்திய அறிவியல் தகவல்களைத் தான் நினைச்சேன்.”

“சார் நான் நிறமற்றவன் தானே?”

“உனக்கு நிறமில்ல. ஆன எப்போ தெரியுமா?”

“என்ன சார் புதிர் போடுறீங்க. எப்பவுமே நான் நிறமற்றவன் தானே!”

“இல்ல”

“இல்லையா? என்ன சொல்றீங்க?”

தூய நீரின் நிறம்

“சிறிய அளவுல பார்க்கும்பொழுது நீர் நிறமற்றதாகத் தான் தெரியும். ஆனா உண்மையில தூய நீர் சற்றே நீல (turquoise blue) நிறத்தைக் பெற்றிருக்கும்.”

“அப்படியா! புதுசா இருக்கே?

“புதுசுலாம் இல்ல”

“சரி எதுனால நான் நீல நிறத்துல இருக்கேன்?”

“காரணம் இருக்கு. நீர் மூலக்கூறுகள், கண்ணுரு ஒளி நிறமாலையின் சிவப்பு ஒளியை உறிஞ்சும் பொழுது, சற்றே நீல நிறத்துல காட்சியளிக்கும்.”

“நான் எப்படி ஒளிய உறிஞ்சுறேன்?”

“நீர் மூலக்கூறுகள் அதிர்வுறும் போது, வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட ஒளியை உறிஞ்சும்.”

“ஆமா….ம். இப்ப நியாபகம் வந்துடுச்சு”

“என்ன?”

“கடல்ல நான் நீல நிறத்துல தானே இருக்கேன்?”

“சிறப்பு. ஆனா, கடல் நீரின் நீல நிறத்துக்கு உன்னோட ஒளி உறிஞ்சும் பண்பு மட்டும் காரணம் இல்ல. அது தவிர, நீரின் மேற்பரப்பு வானத்தின் நிறத்தை பிரதிபலிப்பதும் காரணமா இருக்கு.”

“சார், எனக்கு ஒரு சந்தேகம்?”

“என்னது? கேளு”

“நீர்நிலைகள்ல நான் பச்சை நிறத்திலும் இருக்கேன். இன்னும் சில இடங்கள்ல சிவப்பு நிறத்துலேயும் இருக்கேன். ஏன் கருப்பு நிறத்துல கூட இருக்கேன். இதுக்கெல்லாம் என்ன காரணம்?”

“ஆம். நீ சொன்னதுக்கெல்லாம் காரணம் ‘நீ’ இல்ல.”

“புரியல சார்!”

“சொல்றேன். சுற்றுப்புறச் சூழ்நிலைக்கேற்ப நீரின் நிறம் மாறுபடும். அதாவது, நீரில் கரைந்திருக்கும் சேர்மங்கள் மற்றும் மிதக்கும் துகள்களைப் பொருத்து நீரின் நிறம் அமையுது.”

“ஓ!…ஓ!…”

“இலைகள், வேர்கள் மற்றும் தாவரத்தின் பிற பாகங்களில் இருந்து வெளியேறும் கரிமப் பொருட்கள் நீரில் கரைஞ்சு நிறத்த தரும். உதாரணத்துக்கு டானின் (tannin) சேர்மம் நீரில் கரைஞ்சிருந்தா, அந்த நீர் வெளிர் மஞ்சள் அல்லது அடர் பழுப்பு நிறத்துல இருக்கும்.”

“ஆமாம்”

“இம்… மிதக்கும் மண்துகள் வகையைப் பொருத்தும், நீர் மஞ்சள், சிவப்பு, பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் தோற்றமளிக்கும். குறிப்பா சொல்லனும்னா, பாசி போன்றவை இருக்கும் பொழுது, நீர் பச்சை நிறத்துல இருக்கும். இரும்புச் சேர்மம் அல்லது பாக்டீரியாவால நீர் சிவப்பு நிறத்திலையும் இருக்கும்.”

“அப்படியா!”

“இன்னொரு தகவலும் சொல்லனும். நீர் அடர் நிறத்துல இருப்பதால, நீர்வாழ் தாவரங்களின் வளர்ச்சியில குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படும்.”

“எதனால் சார்?”

“நீர்வாழ் தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம். வண்ண நீருல சூரிய ஒளியின் ஊடுறுவல் கணிசமாக குறையும். இதனால தாவரங்களுக்கு போதுமான சூரிய ஒளி கிடைக்காது. அப்போ, தாவரங்கள்ல நிகழும் ஒளிச்சேர்க்கை வினை பாதிக்கப்பட்டு, அவற்றின் வளர்ச்சியும் பெருமளவு பாதிக்கும். தாவரங்கள் சரியா வளரலைன்னா, நீருல இருக்கும் மற்ற உயிரினங்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.”

“அடடே!”

“சரி. எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு.”

உடனே, “சரி சார். நாம் அப்புறம் பேசுவோம்” என்று கூறி நீர் புறப்பட்டது.

நான் எனது வேலைகளை பார்க்கச் சென்றேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீரின் நிறம் – ‍நீருடன் ஓர் உரையாடல் 26

நிலத்தடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 25

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.