நீர் ‍- நேற்றும் இன்றும்

வேண்டும் போது பொருள் தேடலாம்; இடம் தேடலாம்; பணம் தேடலாம்; ஆனால் ஒன்றை மட்டும் கிடைக்கும் போது பெற்றுச் சேமிக்கவில்லை என்றால், தேவைக்குக் கிடைக்காது.

அது நீர்.

அந்நீரை மழையின் மூலம் பெறுகின்றோம். இயற்கை நமக்களித்த கொடை மழை. திருவள்ளுவர் “நீரின்று அமையாது உலகு” என்று மழையின் முக்கியத்துவத்தைக் கூறுகின்றார்.

முன்பு கிராமம் தோறும் பெரிய ஏரி, சித்தேரி, தாங்கல் என ஏரிகள் இருக்கும். ஏரியின் மதகுகளுக்கு ஏற்ப வாய்க்கால்கள் இருக்கும். பாசனத்திற்கு உகந்த முறையில் வயல்கள் அமைந்திருக்கும்.

ஊருக்கு இரண்டு மூன்று குளங்கள் இருக்கும். ஆடுமாடுகள் மேய்வதற்குப் பொது இடங்கள் இருக்கும். இவையெல்லாம் நாளடைவில் சுருங்கி விட்டன.சில காணாமலும் போயின.

இயற்கையை ஒட்டிய விவசாயம் இருந்த வரையில் நீரின் அவசியம் உணர்ந்து நீர் சேமிப்பிற்கு முக்கியத்துவம் இருந்தது. மெல்ல மெல்ல நீர் நிலைகள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாயின. அரசியல் நிலைப்பாட்டால், அவற்றைத் தடுக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.

நீர் சேமித்தல் குறைந்தது; கிணறு தோண்டினோம். இயந்திரங்கள் வரவால் ஆழ்துளை கிணறு அமைத்தோம். நீர் இறைக்க நவீன மோட்டார்களைப் புகுத்தினோம்.

நிலத்தடி நீரை கட்டுப்பாடின்றி உறிஞ்சி விட்டோம். நீரின் தன்மை மாறியது. உவர் நீர் உட்புகுந்தது.

ஆற்று நீரைத் தடுத்து அணைகள் கட்டினோம். ஆறுகள் வறண்டன. ஆற்றுக் கால்வாய்கள் தூர்ந்து போயின.

ஆற்று நீரைத் தடுக்காமல் ஆறு போகும் வழியெங்கும் உள்ள ஏரி, குளங்களை நிரப்பி வந்திருந்தால், நிலத்தடி நீர் நன்றாக இருந்திருக்கும். மன்னர்கள் காலத்தில் அதனால்தான் ஏரி குளங்களை அமைத்துக் கிராமங்களை வளப்படுத்தினர்.

இனிவரும் காலங்களில் இவற்றையெல்லாம் வரலாறாகத்தான் பார்க்க முடியும்.

புறநானூறு

“ நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தோடு நீரே

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே

வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்

வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்

இறைவன் தாட்கு உதவாதே அதனால்

அடு போர் செழிய விகழாது வல்லே

நிலன் நெளி மருங்கின் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம இவண் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே”

என்ற புறநானூற்றுப் பாடலில்,

நீரைச் சேமிக்க வழி செய்தவர் எல்லாச் செல்வமும் தம் பெயருடன் கூட்டியவர் ஆவார். அப்படி நீரைச் சேமிக்க, வழிசெய்யாதவர் இவ்வுலகில் தம் பெயரை நிலை நிறுத்தாதவராவார். ஆகவே மன்னனே நீயும் நீர்நிலைகளைப் பெருகச் செய் என்று குடபுலவியனார் கூறுகின்றார்.

நீர் சேமித்தலின் அவசியத்தை நாம் உணர வேண்டும்.

மழையானது சுழற்சி முறையில் பருவகாலத்தில் பொழியும். ஆகவேதான் பருவமழை என்று சொல்லுகின்றோம்.

வெயில் காலத்தில் வெயிலும் பனிக்காலத்தில் பனிப்பொழிதலும், குளிர்காலத்தில் குளிரும், மழைக்காலத்தில் மழையும் சுழற்சியாக நடைபெறும். இது இயற்கை நியதி.

மழை நமக்கு அமுதம் போன்றது எனத் திருவள்ளுவர்,

    வான் நின்று உலகம் வழங்கி வருதலால்

    தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று என்று போற்றுகின்றார்.

இதில் வேறுபாடு உண்டானால் அது இயற்கைப் பேரிடராகும். அவசியமானது மழை. அதுவே அதிகமானால், பெரும் இடர்பாடும் உண்டாகும்.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 94444104

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.