தரணீஸ்வரன் வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
தாமரை அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு காப்பியை போட்டு எடுத்துக் கொண்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தன் கணவருக்கு எடுத்து வந்தாள்.
காலடி சத்தம் கேட்டு திரும்பிய தரணீஸ்வரன் தாமரையை கண்டு முகம் மலர்ந்தார்.
“வா தாமரை வந்து இப்படி உட்காரு” என்று சொல்லிக்கொண்டே காப்பி டம்ளரை கையில் வாங்கிக் கொண்டார்.
“என்ன தாமரை! முகம் எல்லாம் இப்படி வேர்த்து இருக்குது? அடுப்படியில அதிகமான வேலையா? ஏன் உடம்பை போட்டு இப்படி அலட்டிக்கிற?
இருக்கிறது நாம ரெண்டு பேர் தானே. யார் நம்மள என்ன கேட்கப் போறா? நம்மள சாப்பிட்டியானு கேட்கிறதுக்கோ, நல்லா இருக்கியான்னு பாக்குறதுக்கோ இப்போ யாரு இருக்கா?
உனக்கு நானும் எனக்கு நீயும் தானே! நம்ம யாருக்கு பதில் சொல்ல போறோம். நம்ம வீட்டு வேலையை எப்போ பார்த்தாலும் நாம பார்க்கத்தானே போறோம்” என்றார்.
“அதுக்காக நம்ம வீட்டு வேலைய அப்படி அப்படியே போட்டுட்டு உட்கார்ந்து இருக்க முடியுமா? நான் அப்படி ஒன்னும் அதிகமான வேலையை பார்த்துப்புடல. உங்களுக்கு காப்பியை தானே கலந்து எடுத்துட்டு வந்தேன். அதுக்கு போய் இப்படி பேசுறீங்களே?”
“இருந்தாலும் உன் சுறுசுறுப்பையும் வேகத்தையும் பார்க்கும் பொழுது நீ அப்போ உள்ள மாதிரியே தான் இப்போதும் இருக்க” என்று தரணீஸ்வரன் சொல்லி முடிப்பதற்குள்.
“…ம் ..ம்…ம்.. போதும் ஆரம்பிச்சிட்டீங்களா? காலையிலேயே உங்க கேள்வியும் கிண்டலும்.”
“அப்படியெல்லாம் இல்லை. வர வர உன் அழகு கூடிட்டே போகுதுன்னு சொல்ல வந்தேன்.”
“இப்போ நம்மளுக்கு ரெண்டு தலைக்கு உசந்த புள்ளைங்க இருக்காங்க ஞாபகம் இருக்குதா?”
“அதனால என்ன? அவங்க ரெண்டு பேரும் தான் நல்லபடியா படிப்ப முடிச்சுட்டு ஃபாரின்ல போய் செட்டில் ஆயிட்டாங்கல்ல… எனக்கு என்னமோ நாம இன்னும் குழந்தையா தான் இருக்கிறோம்னு தோணுது.
உன்னை இப்பொழுதெல்லாம் நான் பாக்குறப்போ நாம ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துல படிச்ச ஞாபகம் தான் வருது.
நாம படிச்சது. நான் சேட்டை பண்ணிட்டு வாத்தியாரிடம் அடி வாங்கியது. நீ எனக்கு ஆறுதல் சொன்னது. நம்ப நட்பு காலேஜ் வரை தொடர்ந்தது.
நம் இருவருடைய நட்பும் காதலாய் கசிந்தது. நாம் இரண்டு பேரும் வாழ்க்கையில் ஒன்று சேர்வதற்காக போராடியது என்று ஒன்றன் பின் ஒன்றாக என் கண் முன்னே படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.”
“ஆமாங்க அது ஒரு கனாக்காலம். இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு சிரிப்பாக தான் வருது.
ஆனா உங்கள அப்போ பார்க்கும் பொழுது என்ன ஒரு வீரநடை! என்ன ஒரு வேகம்! என்ன ஒரு கம்பீரமான உடல் கட்டு! நல்ல ஒரு அழகு தான் நீங்க!”
“என்ன அழகுன்னு மட்டும் சொல்லாதே. அழகுக்கு பெயர் போனவள் நீதான். உன் அழகுக்கு முன்னால நான் ஒரு குழந்தை. உன் பாசத்துக்கு முன்னால நான் எப்போதும் ஒரு அடிமை தான்.”
“ஆமா ஆமா இப்படியே பேசிக்கிட்டு இருந்தா உங்களுக்கு நேரம் போறதே தெரியாது. ஆள விடுங்க எனக்கு சமைக்கிற வேலை இருக்குது” என்று எழுந்தவளை இழுத்து மறுபடியும் உட்கார வைத்தார் தரணீஸ்வரன்.
“தாமரை! தாமரை! எனக்கு என்னமோ தெரியல இப்போதெல்லாம் உன்னைய பார்த்துக்கிட்டே இருக்கணும் போல தோணுது.”
“இப்பயும் பார்த்துகிட்டு தானே இருக்கீங்க.”
“அட அது இல்லம்மா … ஒருவேளை உனக்கு முன்னால எனக்கு ஏதாச்சும் ஆயிட்டா.”
தாமரை “என்னங்க” சட்டென்று எழுந்து தரணீஸ்வரனின் வாயை பொத்தினாள்.
“இப்போ என்ன உங்களுக்கு… எப்போதும் என்ன பாத்துகிட்டே இருக்கணும். ரெண்டு பேருமே ….கண் தானம்….. செய்வோம். அப்ப காலமெல்லாம் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டே இருக்கலாம்ல” என்றாள் தாமரை.
மண்ணில் மக்கும் விழிகளை
மனிதனுள் விதைப்போம்.
மனித நேயத்துடன் வாழ்வோம் …