நெய் பூசணிக்காய்

நெய் பூசணிக்காய் செய்வது எப்படி?

நெய் பூசணிக்காய் நெய் போல வழுக்கிக் கொண்டு செல்லும் அருமையான தொட்டுக்கறி ஆகம். இதனுடைய அசத்தலான சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.

இதனை எளிதாக செய்ய இயலும். மேலும் தற்போது பூசணிக்காய் சீசன் ஆதலால் இதனை அடிக்கடிச் செய்யலாம்.

இதனைச் செய்வதற்கு மஞ்சள் பூசணிக்காயைப் பயன்படுத்தியுள்ளேன். நெய் பூசணிக்காயை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ளலாம்.

இனி சுவையான நெய் பூசணிக்காய் செய்யும் முறை பற்றிப்
பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் பூசணிக்காய் – 1/2 கிலோ கிராம்

பச்சை வேர்க்கடலை – 100 கிராம்

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 6 எண்ணம்

மசாலா பொடி – 1&1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – தேவையான அளவு

சீரகம் – 1/2 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

நெய் பூசணிக்காய் செய்முறை

முதலில் பூசணிக்காயின் மேல் தோலை லேசாக சீவிக் கொள்ளவும்.

அதனை 1 இன்ச் கன அளவு இருக்குமாறு சிறுதுண்டுகளாக நறுக்கவும். (பூசணிக்காயை மிகவும் பொடியாகவோ, மிகவும் பெரிதாகவோ நறுக்க வேண்டும்.)

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

பச்சை வேர்க்கடலையை வாணலியில் சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வறுக்கவும்.

(கடலையின் மேல் தோல் நீங்கி உள்ளே நன்கு வறுபட்டிருக்கும். இதுவே சரியான பதம்.)

கடலையை வறுக்கும்போது
கடலையை வறுக்கும்போது

அடுப்பினை வேகமாக வைத்து வறுக்கும்போது மேல்தோல் கருகி உள்ளே கடலை வறுபடாமல் இருக்கும். எனவே அடுப்பினை மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும்.

கடலையின் மேல் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு நல்ல எண்ணெய் சேர்த்து அதில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றல் சேர்க்கவும்.

தேங்காய், வற்றல், கறிவேப்பிலையைச் சேர்த்ததும்
தேங்காய், வற்றல் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்ததும்

அடுப்பினை சிம்மில் வைத்து தேங்காய் ‘மொறுமொறு’வென வரும்வரை நன்கு வறுத்துக் கொள்ளவும்.

(வறுத்த தேங்காயை தொட்டதும் அது உடைய வேண்டும். அதுவே பதம்.)

தேங்காயை வறுத்ததும்
தேங்காயை வறுத்ததும்

தேங்காய் கலவை ஆறியதும், மிக்ஸியில் தேங்காய் கலவை மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். (இதனை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.)

வாணலியை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும்.

பெரிய வெங்காயம் சேர்த்ததும்
பெரிய வெங்காயம் சேர்த்ததும்

அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பெரிய வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் அதனுடன் நறுக்கிய மஞ்சள் பூசணிக்காய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பூசணிக்காய் சேர்த்ததும்
பூசணிக்காய் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் மசாலாப் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறி விடவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சிறிதளவு தூவி கிளறவும்.

மசாலாப் பொடி, உப்பு சேர்த்ததும்
மசாலாப் பொடி, உப்பு சேர்த்ததும்

அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பூசணிக்காயை வேக விடவும்.

பூசணிக்காய் 85 சதவீதம் வெந்தால் போதுமானது. அதாவது பூசணிக்காயை விரலுக்கிடையில் வைத்து நசுக்கினால் நசுக்குப்பட வேண்டும்.

இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதே வாணலியில் அரைத்த வேர்க்கடலை மற்றும் தேங்காய் மசாலாக் கலவையைச் சேர்க்கவும்.

மசாலாக் கலவையைச்சேர்த்ததும்
மசாலாக் கலவையைச்சேர்த்ததும்

அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, ஒரு டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.

கொத்தமல்லி இலை, கறிவேப்பிலைச் சேர்த்ததும்
கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்ததும்

பின்னர் அரை டம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சற்று இடைவெளி விட்டு சேர்த்து கிளறவும்.

இப்போது மசாலாக் கலவைக்குத் தேவையான உப்பு சேர்த்து மூன்று நிமிடங்கள் கிளறி விடவும்.

உப்பு சேர்த்ததும்
உப்பு சேர்த்ததும்

மசாலா ஒன்று போல் திரண்டு வந்ததும், அதில் வேக வைத்த பூசணிக்காய் சேர்த்து, ஒருசேரக் கிளறி நான்கு நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும்.

பூசணிக்காய் சேர்த்ததும்
பூசணிக்காய் சேர்த்ததும்

இதில் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்துக் கிளறவும்.

சுவையான நெய் பூசணிக்காய் தயார்.

குறிப்பு

நெய் பூசணிக்காய்க்கு புதிதான தண்ணீர் சத்து மிக்க பூசணிக்காயைத் தேர்வு செய்யவும்.

மசாலாப் பொடிக்குப் பதிலாக 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் பொடி, 1 டீஸ்பூன் தனியாப் பொடி சேர்த்து பூசணிக்காய் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.