கொஞ்சம் தயக்கதோடவே வாசல்படியில் நின்றார் ரத்தினவேல்.
“அடடே, ஏன் அங்கயே நிக்கிறீங்க? உள்ள வாங்க ரத்தினவேல்” ஊஞ்சலில் அமர்ந்திருந்த கதிரேசன் ஒரு மரியாதைக்குக்கூட எழுந்து வரவேற்காமல் உட்கார்ந்தபடியே ரத்தினவேலை வரவேற்றார்.
“அய்யா வணக்கம்!” கைகூப்பி கதிரேசனை வணங்கினார் ரத்தினவேல்.
பதிலுக்கு வணக்கம் சொல்லாத கதிரேசன் “ம்..ம்..ஒக்காருங்க.. ஒக்காருங்க” என்று தனக்கு இடதுபக்கம் கொண்டு வந்து போடப்பட்டிருந்த நாற்காலியில் ரத்தினவேலை அமரச் சொல்ல தயங்கினார் ரத்தினவேல்.
“அட! ஒக்காருங்க கணக்கு புள்ள, என்ன தயக்கம்? நாம சொந்தக்காரவுங்கதானே என்ன அவ்வளவு நெருக்கமான ஒறவு இல்ல, தூரத்து ஒறவு. அதுனால என்ன? நெருக்கமா ஆக்கிக்கிட்டா போச்சு”
புரியாமல் விழித்த ரத்தினவேலை “அட ஒக்காருங்க! வெவரமா பேசலாம்” என்றார் கதிரேசன்.
தயங்கியவாறே நாற்காலியில் உட்கார்ந்தார் ரத்தினவேல்.
சில வினாடிகள் மௌனமாய்க் கரைந்தன.
“க்கும்..க்கும்..” குரலைச் சரிபடுத்தக் கனைத்துக் கொண்டார் கதிரேசன்.
“கணக்குப்புள்ள”
“சொல்லுங்கையா”
“இனிமே அய்யா கிய்யான்னு என்ன கூப்புடாதிங்க கணக்குப்புள்ள”
“பின்ன எப்பிடிங்கையா ஒங்கள கூப்புடறது அண்ணேன்னு கூப்புடுலாங்களா?” என்று கேட்டார் கொஞ்சம் தயக்கத்தை விலக்கி.
“அண்ணேன்னு கூப்புட்டா நீங்க. எனக்குத் தம்பின்னுல்ல ஆவும். எங்கியாச்சும் சம்பந்திங்க அண்ணந்தம்பியா ஆவ முடியுமா?
புரியாமல் விழித்தார் ரத்தினவேல்.
“நா ஒருத்தன் விஷயத்த தெளிவா சொல்லாம கொழப்புறேன். கணக்குபுள்ள ரத்தினவேலு. நீங்களும் நானும் சம்பந்தியாகப் போவுறோம்”
ஒன்றும் விளங்காமல் விழித்தார் ரத்தினவேல்.
“ரத்னவேலு நேரிடையா விஷயத்துக்கு வறேன். ஒங்க பொண்ணு பேரென்ன? இந்து! இந்து! இந்துதானே!”
“ஆமாங்கையா, இந்துமதி!”
“ஆங்! இந்துமதி! இந்துமதி! பேரே இம்புட்டு அழக்குன்னா. பொண்ணும் அழகுதா! பாத்ருக்கேன் பாத்ருக்கேன். இல்லாட்டி எம் புள்ள மயங்கிருப்பானா? கட்னா ஒங்க பொணத்தா கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நின்னுகிட்டு அடமில்ல புடிக்கிறான்”
தூக்கி வாரிப் போட்டது ரத்தினவேலுக்கு. தலை சுற்றுவதுபோல் இருந்தது. நெஞ்சு படபடத்தது.
“பாருங்க ரத்னவேலு. பெரும் பெரும் பணக்காரணுங்கள்லாம் நா பொண்ணுதரேன், நா பொண்ணுதரேன்னு வரிசேல நிக்கிறானுவ. ஒங்க பொண்ணுக்கு அடிச்சிருக்குற அதிஷ்டத்தப் பாருங்க. எம் புள்ள ஒங்க பொண்ணு மேலல்ல ஆசப்பட்டுட்டா. பத்துதலமொற சொத்துக்கும் அவன்தா ஒரே வாரிசு. பணமா முக்கியம்? மவனோட ஆசதானே முக்கியம். அதுனால ஒங்க பொண்ண எம்புள்ள நாகராசுக்கு கேக்குறேன்.”
தலையில் இடி இறங்கியது போல் இருந்தது ரத்னவேலுக்கு. உடலில் ரத்தம் வற்றி மயக்கம் வருவதுபோல் இருந்தது.
‘எம் பொண்ண மொடாக் குடிகாரன், பொம்பள பொறுக்கி, அடாவடிப் பேர்வழி. எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் மொத்த குத்தகைக்காரன் அந்த கேடு கெட்ட நாகராஜுக்கா கட்டிக் குடுக்கறது.’ உடம்பு நடுங்கியது ரத்தினவேலுக்கு.
“என்ன ரத்னவேலு அமைதியாயிட்டீங்க. நம்ம பொண்ணுக்கு இத்தனை பெரிய அதிஷ்டமான்னு தெகச்சுப் போயிட்டீங்களா? பேச்சே வல்லியா? அதிஷ்ட லட்சுமி ஒங்க வீட்டுக் கதவ தானால்ல வந்து தட்டுறா. பேச்சு எழுமா என்ன?” ‘கெக்..கெக்..கே.. ‘என்று தங்கப்பல் தெரிய சிரித்தார் கதிரேசன்.
“அய்யா..” மேற்கொண்டு வார்த்தை வராமல் திணறினார். நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது ரத்தினவேலுக்கு.
“பத்தியா..பத்தியா..மறுபடியும் அய்யான்றீங்களே..சம்பந்தின்னு கூப்டுங்க ரத்னவேல்” சிரித்தார் கதிரேசன்.
“இல்லீங்க..” என்றார் ரத்தினவேல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
“என்ன இல்லீங்க?” கதிரேசனின் சிரிப்பு நின்றது.
“மன்னிக்கனும்..எம் பொண்ணு காலேஜு படிக்கிறா. பிஎஸ்ஸி படிக்குது. சீக்கிரமே பட்டம் வாங்கப் போவுறா. அடுத்தாப்புல அவ என்ன செய்ய விரும்புறாளோ அவ விருப்பப்படி தானுங்க செய்வேன். எம் பொண்ணு படிச்ச பொண்ணுங்க.”
“அப்ப எம்புள்ளைய படிக்காதவன்னு சொல்ல வர்றியா?”
“அய்யோ! நா அப்பிடி சொல்லவல்லீங்க”
“அப்ப ஒம் பொண்ண எம் புள்ளைக்குக் கட்டித் தருவியா? மாட்டியா?” நீங்க என்ற மரியாதை போய் நீ என்று மாறியது.
“எம் பொண்ணோட சம்மதத்தக் கேக்காம நா எதும் சொல்லறத்துக்கு இல்லீங்க”
“அப்ப மாட்ட”
“நா..கெளம்புறேங்க” எழுந்து கைகூப்பி வணங்கிவிட்டு வாசல் நோக்கி நடந்தார்
ரத்தினவேல்.
(நேசம் வளரும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
மறுமொழி இடவும்