நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 19

“மோர் சாதம் சாப்டல. அதுக்குள்ள எழுந்துகற, ஏன் ஒழுங்காவே சாப்ட மாட்டேங்ற?” பார்வதி மாமி கேட்டார்.

“இன்னும் எப்டி சாப்டறது? நா என்ன குண்டோதரனா?” அம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டே கையலம்ப கிணற்றடிக்குச் சென்றான் ராகவ்.

கூடத்தில் ரேடியோவில் அந்தாக்ஷரி ஓடிக் கொண்டிருந்தது.

கையலம்பி விட்டுத் தன் அறைக்குள் செல்ல இருந்தவனை, “ராகவ் நில்லு!” என்றார் மாமி.

“என்னம்மா? கொஞ்சம் டயர்டா இருக்குனு படுக்கலாமேன்னு..” ராகவ் எதையோ சொல்லி நழுவப் பார்ப்பதாய்த் தோன்றியது மாமிக்கு.

“காலேல ஆபீஸ் போயிடற. சாயந்ரம் லேட்டா வர. ராத்திரி டயர்டுன்னு படுக்கப் போயிடற. ஞாயித்துக் கெழம ஆபீஸ்ல முக்கிய வேலன்னு கெளம்பிடற. அப்றம்
எப்பதான் ஒங்கிட்ட பேசுறது. அம்மாட்ட எதாவது கோபமா? முன்மாதிரி எங்கிட்ட பேசமாட்டேங்கிற” தொண்டை அடைத்தது மாமிக்கு.

சட்டென கலங்கிப் போனான் ராகவ்.

“அம்மா! என்னம்மா இது? ஒங்கிட்டப்போய் எனக்குக் கோவமா!” திரும்பி வந்து அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டான். தாயைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

நிம்மதியாயிற்று மாமிக்கு.

“சரிடா கண்ணு போய்ப் படுத்துக்கோ. சூடா பால்னா கொண்டு தரவா?”

“வேண்டாம்மா. தூங்கினா சரியாயிடும்”

பாயை விரித்துக் கூடத்திலேயே படுத்துக் கொண்டார் மாமி. தூக்கம் வரவில்லை. ‘திடீர்னு அண்ணா ஊர்லேந்து வந்து பத்து நாளுக்கு மேல ஆச்சே! பார்வதி! ஒம்புள்ள என்ன சொன்னான்னு கேட்டா என்னத்த பதில் சொல்றது? நாத்தனார் கோமதியே கேட்டாலும் சரி, என்னன்னு சொல்வேன். இந்தப் புள்ளையா பதிலே சொல்ல மாட்டேங்கறது. நானும், தானா சொல்லுவான், தானா சொல்லுவான்னு இருக்கேன். வாயே தொறக்க மாட்டேங்கறானே’ புரண்டு புரண்டு படுத்தார் மாமி.

காலை ராகவ் ஆபீஸ் போயாகி விட்டது. ரவாவை வறுத்து தாம்பாளத்தில் கொட்டியபோது கதவு தட்டப்படும் சப்தம்.

“யாரு?” கேட்டபடியே கதவைத் திறந்த மாமிக்கு ‘திகீரெ’ன்றது.

“அண்ணா! வாங்கோண்ணா!”

“என்ன பார்வதி, ரவா வறுத்தியா என்ன? வாசனையா இருக்கு. ரவாவ வறுக்கும்போது வர வாசனையே தனி”

“ஆமா”

“உஸ்! அப்பாடா, என்னமா வெயிலடிக்கிறது. சித்தர, வைகாசி வெய்யலாட்டம்”

“ஆமாண்ணா, தூத்தம் கொண்டு வரேன்”

“அப்பா, காவேரித் தண்ணி யோனோ. என்னமா திதிக்கிறது பாரேன். திவ்யமா
இருக்கு”

“காபி குடிக்கிறேளா? சாப்ட வரேளா?”

“காபி குடு பார்வதி. கும்மோணம் வந்துட்டு காபி வேண்டாம்பாளா யாராவது? கும்மோணம் டிகிரி காபி, அடி நாக்குல டேஸ்ட் அஞ்சுமணி நேரம் அப்டியே இருக்குமே”

‘அண்ணா கல்யாண விஷயம் பற்றி எப்போது ஆரம்பிப்பாரோ?’ என்று நினைத்தபோது அடிவயிற்றைக் கலக்கியது மாமிக்கு.

“ம்..அப்றம், புள்ளையாண்டன் கல்யாண விஷயமா என்ன சொன்னான்? பத்து நாள்னு சொல்லிட்டுப் போனேன். இன்னிக்கி இருவது நாள் ஆயிடுத்து”

“இல்லண்ணா! அவ கோயாமுத்தூருக்குப் பதினஞ்சு நாள் ட்ரெயினிங் போயிட்டான் அதான்!”

“போனா என்ன? கும்மோணத்துல யோசிக்காட்ட கோயமுத்தூர்ல யோசிக்க முடியாதா என்ன?”

“இல்லண்ணா அது..”

“தோ, பாரு! எம்பொண்ணு மீனாட்சிய பண்ணிக்க இஷ்டமில்லேன்னா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பட்னு சொல்லிடனும். நாம் பாட்டுக்கு வேற எடம் பாப்பேன். எம் பொண்ணுக்கு வேற மாப்ளயே கெடைக்க மாட்டானா என்ன? ரொம்பத்தான், சொந்தம் விட்ரக் கூடாது, கண்ணுக்கு நேரா வளந்த புள்ளன்னு பாத்தா, புள்ளையன்னா பெத்ருக்கோம்னு உச்சாணிக் கொம்புலன்னா ஏறி ஒக்காந்ருக்க. டேய்! மாமாக்கு பதில் சொல்லனும், என்னடா சொல்றன்னு புள்ளைய கேக்க மாட்ட”

மாமிக்கு லேசாய்க் கோபம் எட்டிப் பார்த்தது.

“அதெப்டிண்ணா? தலைக்கொசந்த புள்ள, என்னடா சொல்ற? என்னடா சொல்றன்னு ‘நய்யிநய்யினு’ கேட்டுண்டா இருக்க முடியும்?”

“பார்வதி! நா சொல்றேன்னு நெனைக்காத. பாத்துண்டே இரு, இப்டி கமுக்கமா இருந்துண்டு ஒருநாள் ஒந்தலேல கல்லத் தூக்கிப் போடப் போறான். மண்ணள்ளி
போடப் போறான். இடிய எறக்கப் போறான். எவளயாவது இழுத்துண்டு வந்து அஷ்ஷத போடச் சொல்லப் போறான்” இப்படியேல்லாம் நடக்க வேண்டுமென்று சாபம் குடுப்பவரைப் போல் பேசினார் சுப்புணி.

“அண்ணா! போதுண்ணா! பேசிண்டே போகாதேள்..”

“உள்ளத தானே சொல்றேன். ஒருவேளை ஒன் நாத்தனார் பொண்ண அவுனுக்குப் புடிச்சிருக்கோ என்னவோ? அது மட்டும் நடந்தா இந்த கூடப் பொறந்தவன நீ மறந்துட வேண்டீதுதான்”

“ஏண்ணா? இப்பிடிப் பேசறேள். யாருக்கும் யாருக்கும் முடிச்சிப் போட்ருக்கோ அதானே நடக்கும். நாம என்னத்த சொல்றது?”

“அப்ப, ஒன் நாத்தனார் பொண்ணோடதான் நடக்கும்கிற”

“நா அப்பிடி சொல்லல்ல!”

“நா.. கெளம்பறேன்”

சாப்பிடக்கூட இல்லாமல் கோபப்பட்டுக் கொண்டு கிளம்பிப் போனார் சுப்புணி.

‘என்ன மனுஷா இவாள்ளாம்! ஆன வயசுக்கு அடையாளமில்லாத பேசற பேச்சப் பாரு! பனமட்டேல மூத்ரம் போறாப்ல ‘படபட’ன்னு. இவாளுக்காக எம்புள்ளைய அவசரப்படுத்தி தொந்தரவு பண்ண மாட்டேன். அவ சொல்லும்போது சொல்லட்டும்’ என்ற முடிவுக்கு வந்தார் மாமி.

ராகவ் கல்யாண விஷயத்திலிருந்து தற்காலிகமாக மீண்டான்.

அடுத்து வந்த ஒருமாதமும் எந்த பிரச்சனையுமின்றி ராகவும் இந்துவும் நிறைய பேசினார்கள்; நிறைய பாடினார்கள்; நிறைய சிரித்தார்கள்.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.