தாய் எழுப்பிவிட, கண் விழித்த இந்துமதி அறையைவிட்டு வெளியே வந்து “அப்பா!” என்று லேசாய்க் குரலை உயர்த்தி அழைத்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்த தந்தைக்குப் பின்புறமாய் சென்று அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
“அப்பா என்ன விட்டுட்டு காபி குடிச்சிட்டீங்களாப்பா?”
“இல்ல இந்துக் கண்ணு. நீ வராம நா என்னிக்குமா காபி குடிச்சிருக்கேன்”
“என் செல்ல அப்பா!” அப்பாவின் தோளில் தன் முகத்தைப் பதித்தாள் இந்து.
“ஏய் வம்புகாரி! பல்லுகூட வெளக்காம ஊத்த வாயோட அப்பாவ கொஞ்சுற. பாப்பான்னு நெனப்பா? மூணு கழுத வயசாச்சு”
“அம்மா! ஏம்மா கொழுந்தையே இப்பதான் தூங்கி எழுந்து வரா. அவகூட காலங்கார்த்தாலயே ஆரம்பிச்சிட்டியா?” ரத்தினவேல் தாயைக் கடிந்து கொண்டார்.
“பொண்ணச் சொன்னா வந்துடுமே மூக்குக்கு மேல கோவம். வயசு பதினெட்டாச்சு கொஞ்சமாவது ஒரு இது வேண்டாம்”
“அதென்ன? ஒரு இது? இதுன்னா என்ன அப்பத்தா? சொல்றத சரியா அர்த்தமா சொல்லனும்”
“காலேஜுக்குப் போய் படிக்கிறியோ இல்லையோ! நல்லா வாயாட கத்துக்கிட்ட”
“ஆமா! வாயாட கத்துக்கிட்டேன். வெவ்வெவ்வே…” என்று அப்பத்தாவுக்கு வாயைக் கோணி அழகு காண்பித்து விட்டு கிணற்றடி நோக்கி நடந்தாள் இந்து.
வாய்விட்டுச் சிரித்தார் ரத்தினவேல்.
மழை விட்ட பாடில்லை.
மகளோடு சேர்ந்து இட்லி சாப்பிட்டு, கருப்பட்டி சேர்த்த விரைக்காபி குடித்துவிட்டு வாசல் திண்ணையில் தரையில் அமர்ந்து கணக்கு வழக்குகள் எழுதும் சின்ன சைஸ் டெஸ்க் முன்னால் வந்து அமர்ந்து கொண்டார் ரத்தினவேல்.
ஏற்கனவே சிட்டா பட்டா கேட்டு வந்தவர்களுக்கு இன்று தருவதாகச் சொன்ன விபரங்களைத் தயார் செய்து கொண்டிருந்தார்.
சைக்கிளை ஸ்டேண்ட் போடும் சப்தம்.
குனிந்து ஏதோவொரு விண்ணப்பமொன்றைப் படித்துக் கொண்டிருந்த ரத்தினவேல் தலைநிமிர்ந்து பார்த்தார்.
தலையாரி வையாபுரி.
“என்ன வையா? மொகத்துல பரபரப்பு தெரியுது. என்னாச்சு?”
“ஐயா! காலேலேந்து கொட்டுற மழையில கெழக்கு வளைவு வாசல்ல அக்கம்மா கெளவி சொவரு இடிஞ்சி வுளுந்து செத்திடுச்சையா. நீங்க வந்தீங்கனா ஆரை ஐயாட்ட சொல்லிறலாம்”
“வந்துட்டேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று சட்டையை மாட்டிக் கொண்டவர். “இந்துமா! இந்து குட்டீ” சப்தமாய் கூப்பிட்டார்.
“அப்பா! என்னங்கப்பா!” எனக் கேட்டுக் கொண்டே கொல்லைப் புறத்திலிருந்து மான் குட்டியெனத் துள்ளி ஓடி வந்தாள் இந்து.
‘மகள் ஓடிவரும் வேகத்தில் எதிலாவது மோதிக் கொண்டு விடுவாளோ?’ என்ற தவிப்பில் “இந்தும்மா பாத்து பாத்து! எதிலாவது இடிச்சுறாத மெதுவா கண்ணு. மெதுவா வா” என்றார் அதீத பாசத்துடன்.
ஒரு தந்தை தன் மகள் மீது அளவற்ற பாசத்தை வைத்திருப்பது அதிசயமில்லைதான். இதே தந்தை உயிருக்குயிரான அந்த மகளின் வாழ்க்கைக்கே வில்லனாக மாறப் போவது விதியாடப் போகும் விளையாட்டோ?
மறுநாள் முதல் தான் ஆடப்போகும் ஆட்டதை நினைத்து மெல்லச் சிரித்தது விதி. அதன் சிரிப்பு அங்கிருந்த யார் காதிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை.
சிரிக்கும் அந்த விதி, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தன்னை வைத்து விளையாடப் போவது அறியாமல் தான் எடுத்த வாந்தியில் முகம் பதித்து அருகே சாராய பாட்டில் உருண்டு கிடக்க, வேட்டி அவிழ்ந்து, நகர்ந்து பட்டாபட்டி, அரை டிராயர் வெளியே தெரிய நாய்கள் சுற்றி நிற்கும் குப்பைத் தொட்டிக்கருகே சாராய போதையில் விழுந்து கிடந்தான் கூடாத பழக்கங்கள் என்று சொல்லப்படும் அத்தனை கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகியிருந்த தனசேகரன்.
(நேசம் வளரும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்