நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 3 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை ஐந்து மணிக்கே எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு சுவாமி அலமாரியில் விளக்கேற்றி விட்டு குமுட்டி அடுப்பைப் பற்ற வைத்து காபி டிகாஷனுக்காக பாத்திரத்தில் தண்ணீர் வைத்துவிட்டு மர அலமாரியில் பொருத்தப்பட்டிருந்த காபிகொட்டை அரைக்கும் மெஷினில் வறுத்த காபிக்கொட்டையைத் தேவையான அளவு போட்டு எல்-வடிவ கைப்பிடியைச் சுழற்றினார் நாற்பத்தெட்டு வயது பார்வதி மாமி.

‘கரகர’வென்ற சப்தத்தோடு காபிக்கொட்டை அரைபட்டு காபிப் பொடி மெஷினின் கீழே வைக்கப்பட்டிருந்த விளிம்போடு கூடிய சிறிய தட்டில் கொட்டியது. காபிப் பொடியின் வாசம் வீட்டையே நிறைத்தது.

காபி ஃபில்டரில் காபிப் பொடியைப் போட்டு லேசாய் விரலால் அழுத்திவிட்டு குமுட்டி அடுப்பில் தளைத்துக் கொண்டிருந்த வெந்நீரை ஃபில்டரில் ஊற்றி கனமான டபரா ஒன்றால் ஃபில்டரை மூடினார் மாமி.

‘டிக் டிக்’ என்ற சப்தத்தோடு சொட்டு சொட்டாய் ஃபில்டரின் அடிப்பாத்திரத்தில் இறங்க ஆரம்பித்தது டிகாக்ஷன்.

“அப்பனே நமசிவாயா” என்றபடி சாணம் தெளித்து பெருக்கி வைக்கப்பட்டிருந்த வாசலில் சின்னதாய்க் கட்டைக்கோலம் போட்டுச் செம்மண் இட்டார்.

சுவாமி அலமாரிக்கு முன்பும் கோலமிட்டு செம்மண் இட்டவர், உட்காரும் மனைப் பலகையொன்றில் கோலமிட்டு கூடத்தில் கொண்டு வைத்தபோது, “அம்மா.. பால்..” என்ற பாண்டியின் குரல் கேட்டது.

“தோ..வரேன்..” என்றபடி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார்.

“பால்காரரே! அரை ஆழாக்கு பால் அதிகமா வேணும்..”

“வாங்கிக்கங்கம்மா! நேத்தைக்குதா அய்யிருங்கள்ளாம் பூணூல் போட்டுக்குற, என்னமோ சொல்லுவாங்களே! என்ன சொல்லுவாங்க?”

“ஆவணியாவிட்டம்”

“ஓ! ஆமா ஆமா, அதுக்குதா நேத்து பெரிசா கோலம் போட்டு செம்மண் இட்ருந்தீங்க இன்னிக்கு என்னம்மா?”

“காயத்ரி ஜெபம்”

“ஓ!” என்றபடி ஏதோ புரிந்தவன் போல் தலையாட்டிவிட்டுச் சென்றான் பாண்டி.

குமுட்டி அடுப்பைக் குனிந்து ஊதினார் மாமி. நீருபூத்த நெருப்பாய் ஓரிரெண்டு தணல், சாம்பல் அகன்று தகதகத்தன.

அதோடு கொஞ்சம் கரித்துண்டுகளை அள்ளிப் போட்டு கைவிசிறியால் அடுப்பின் வாயில் விசிற ‘படபட’வென பொறி பறந்து புதிதாய்ப் போட்ட கரித்துண்டுகளும் பற்றிக்கொண்டு நிறைய தணல் தகதகத்தன.

பால் காய்ச்சும் பாத்திரத்தில் பாலை ஊற்றி குமுட்டியில் வைத்துவிட்டு கூடத்தில் மாட்டியிருந்த சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார் மாமி. மணி ஆறரை.

‘இவன எழுப்பணும்! குளிச்சி கிளிச்சிட்டு வந்து காபி குடிச்சிட்டு ஏழரமணிக்காவது காயத்ரி ஜெபம் பண்ண ஒக்காந்தான்னா ஒருமணி நேரமாவது ஆகும். ஆயிரத்தெட்டு காயத்ரியாவது பண்ணனும்’ என்று நினைத்தவாறே பால் பொங்கும் பாத்திரத்தைக் கீழே
இறக்கி வைத்து மூடி வைத்தார்.

சிறிய சைஸ் மாக்கல் சட்டியொன்றை குமுட்டியில் வைத்துத் தண்ணீர் ஊற்றி ஒரு சின்னக் கிண்ணத்தில் துவரம் பருப்பை நிரப்பி கழுவி மாக்கல் சட்டியில் கொதிக்க ஆரம்பித்திருந்த தண்ணீரில் கொட்டிவிட்டு ஒருசிட்டிகை மஞ்சள்தூள் போட்டு ஒரு ஸ்பூன் நல்லெண்ணை விட்டு கரண்டியால் வேக ஆரம்பித்திருந்த பருப்பை ஒரு கிளறு கிளறிவிட்டு “வெந்துண்ரு வரேன்” என்று பருப்பிடம் சொல்லிவிட்டு மகன் தூங்கும் அறையின்முன் வந்து நின்றார் மாமி.

“ராகவ்! ராகவ் குட்டி!

” எஞ்செல்லக் கண்ணா, எழுந்துக்கிறயாடா செல்லம். இன்னிக்கி காயத்ரி ஜெபம். மணி ஏழாகப் போறுது. எட்டு மணிக்காவது ஜெபம் பண்ண ஆரம்பிச்சியான்னாதான் ஒம்பதரைக்குள்ள முடிப்ப! ஏந்ரு கண்ணு!”

“ம்.. ம்.. அம்மா! இன்னும் சித்த நேரம் தூங்றேம்மா”

“எங்கண்ணுல்ல, எழுந்திருப்பியாம்”

“சரிம்மா” ராகவ் போத்தியிருந்த போர்வையைத் தள்ளிவிட்டு எழுந்தான். இரு உள்ளங்கைகளையும் சேர்த்துப் ‘பரபர’வென்றுத் தேய்த்துவிட்டு உள்ளங்கைகளை அருகருகே வைத்துப் பார்த்துவிட்டுக் கட்டிலை விட்டு இறங்கி அறையிலிருந்து வெளியே வந்தான்.

ராகவ் இருபத்தி நான்கு வயது இளம் காளை. அந்த நடிகர் போல், இந்த நடிகர் போல் இருப்பதாகவெல்லாம் சொல்வது கூடாது. பெரும்பாலும் பல நடிகர்கள் மேக்கப் போட்டு அழகாகத் தெரிவர். எந்த மேக்கப்பும் போடாமலேயே ராகவ் அசத்தும் அழகன்.

பி.எஸ்ஸி அக்ரி. தந்தை சர்வீஸில் இருந்தபோது காலமானதால் கருணை அடிப்படையில் விவசாய இலாகாவில் புதுக்கோட்டையில் வேலை கிடைக்க, தற்போது மாற்றலாகி கும்பகோணத்தில்.

“ராகவ் பல் தேச்சிட்டு வா காபி தறேன்” சமையலறையிலிருந்து அம்மா சொன்னதைக் கேட்ட ராகவ் “இல்லம்மா ஒருதரியா குளிச்சிட்டு வந்துடறேம்மா, அப்றமா காபி குடிக்கிறேன்” அம்மாவுக்கு பதில் சொன்னபடியே கொல்லைப்புறம் கிணற்றடிக்குச் சென்று குளித்துவிட்டு கூடத்துக்கு வரும்போது மணி ஏழே முக்கால் ஆகியிருந்தது.

விபூதியைக் குழைத்து நெற்றி, மார்பு, தோள்கள், மணிக்கட்டு, கழுத்தின் பின்பகுதி, வயிறு என ‘சரக் சரக்’கென்று பூசிக் கொண்டுவிட்டு வெண்பட்டு வேஷ்டியும், அங்கவஸ்த்ரமும் அணிந்து சுவாமி அலமாரிக்கு முன் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்துவிட்டு அம்மா கோலம் போட்டு வைத்திருந்த ஆசனப் பலகையில் அமர யத்தனித்தபோது “ராகவ்! காபிய குடிச்சிட்டு ஜெபத்த ஆரம்பியேன்” என்றபடி சூடாய் காபியை நீட்டினார் மாமி.

“அம்மா! நீ குடிச்சியாம்மா” என்றபடி காபியை வாங்கிக் கொண்டான்.

“இல்லடா, இனிமேதான்”

“அம்மா காபி ரொம்ப நன்னாருக்குமா! கும்மோணம் காபிங்கறது சரியாருக்குல்ல”

“ஆமாம்ப்பா, கும்மோணத்துல எல்லா பொருளுமே நன்னாத்தா இருக்கு. புதுக்கோட்டையிலிருந்து இங்க வந்து ஜாக மாறி ஒரு மாசங்கூட ஆகல ரொம்ப வருஷமா இருக்காப்புல என்னமோ ஒரு நிம்மதி ஒரு சந்தோஷம்.”

“நீயும் புது ஆபீஸ்ல ஜாயின் பண்ணி பதினஞ்சு நாள்தான் ஆறது. ஒனக்கும் புதுஆபீஸ், புதுவேல நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரணும். ஆண்டவன்தான் ஒனக்கு என்னிக்கும் தொண இருக்கனும். சர்வேஸ்வரா!” என்று சொல்லியபடி சுவாமி படங்களைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டார் பார்வதி மாமி.

கண்களை மூடியபடி ஜெபத்தில் லயித்திருந்தான் ராகவ். ஆங்காங்கே பூசியிருந்த ஈரவீபூதி காய்ந்து’ பளீரெ’ன்று வெண்மையாய் தெரிய ஏற்கனவே வசீகரமான ராகவின் முகம் கூடுதல் தேஜஸோடு பிரகாசித்தது.

ஜெபம் செய்யும் மகனைப் பார்த்த பார்வதி மாமியின் மனம் பெருமிதத்தால் பொங்கியது.

‘பாரேன் எம்புள்ளதான் எத்தனை அழகு! எத்தனை தேஜஸ்! எந்தப் பொண்ணு குடுத்து வெச்சிருக்காளோ இவன ஆம்படையானா அடைய. ச்சீ! எங்கண்ணே பட்டுடப் போறுது’ என்று நினைத்து இருந்த இடத்திலிருந்தே பிள்ளைக்கு கைகளால் திருஷ்டி சுற்றிக் கன்னங்களில் இருகை விரல்களையும் அழுத்திச் சொடுக்கி விட்டுச் சிரித்துக் கொண்டார் மாமி.

மணி ஒன்பதரை. சின்னதாய் டிபன் இலையைப் போட்டு ரவா கேசரியை வைத்துவிட்டு இரண்டு இட்லியைப் பரிமாறி தேங்காய்ச் சட்னியை வைத்தார் மாமி.

“என்னம்மா இன்னிக்கு கேசரில்லாம் பண்ணிருக்க” இலை முன்பு அமர்ந்திருந்த ராகவ் கேட்டான்.

“ஒன்னுமில்லடா! சும்மா, இந்தாத்துக்கு வந்து மொத மொதல்ல வர நாளு கெழம அதான்”

“ஹை! அம்மா! அப்டியே வாயில போட்டா கரையறுதும்மா” கேசரியை விழுங்கியபடியே சொன்ன ராகவின் இலையில் இன்னும் கொஞ்சம் கேசரியை வைத்தார் மாமி..

“காவேரி தண்ணிடா! காவேரி தண்ணி! ருசியா இருக்கக் கேக்கனுமா. குமட்டி அடுப்பு காபியும், ஈயச்சொம்பு ரசமும், காவேரி தண்ணி சமையலும் அடிச்சிக்க முடியுமா என்ன?”

“அப்ப ஒனக்கு இந்த கும்பகோணம் புடிச்சி போச்சுன்னு சொல்லு”

“பின்ன? யாருக்குதாண்டா கும்மோணத்து வாழ்க்க புடிக்காம போகும்? எங்க திரும்பினாலும் கோவிலும் கொளமும், சுழிச்சு ஓடற காவேரியும், பச்சு பச்சுன்னு காய்கறியும், கமகமக்கும் காபி பொடியும், வெங்கல பாத்திரமும், வெத்தலயும்”

“அம்மா கொசுவையும் கூடவே சேத்துக்கோம்மா”

ராகவ் சொல்ல இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

மனம் விட்டுச் சிரிக்கும் தாய்க்கும் பிள்ளைக்கும் கும்பகோணம் என்ன செய்யப் போகிறது? எதைத் தரப் போகிறது?

                               (நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.