நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 6 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

ஆறி சில்லிட்டுப் போன வெந்நீரை நான்கு விரல்களால் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள் இந்து. வேறு வழியில்லை ஊற்றிக் குளித்துதான் ஆகவேண்டும்.

கண்களை மூடிக்கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டு சட்டென ஒருசொம்பு ஜில்லிட்ட நீரை மொண்டு மேலே ஊற்றிக் கொண்டாள். முதலில் வெடவெடத்தது. மொண்டு மொண்டு ஊற்றிக் கொள்ள குளிர் விட்டுப்போனது.

“அம்மா! நா கிடுகிடுன்னு ரெடியாகி வந்துடறேன். சாப்பாடு எடுத்து வையி. லேட்டானா எட்டு அம்பது பஸ் போயிடும்” சமயலறையில் இருந்த தாயின் காதுகளில் விழும் அளவுக்குச் சப்தமாய்க் கத்தியபடி தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் இந்து.

“க்கூம், இவள யாரு காலேல எழுந்து கொய்யாபழம் பறிக்கச் சொன்னா? நேத்தே பறிச்சி வச்சிருக்கலாமில்ல. அமக்களம் பண்றத பாரு. படிச்சு அப்டியே கலெக்டர் ஆவப் போறா!” முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டார் செண்பகத்தம்மா..

“அம்மா! அம்மா!” வாசலில் யாரோ அழைக்கும் சப்தம்.

“யாரு?” கேட்டபடியே வாசலுக்கு வந்த செண்பத்தம்மாவை பின்தொடர்ந்தார் சுந்தரி.

மணி கொத்தனார்.

“கொத்தனாரே! என்ன விஷயம்? அய்யா வரச் சொன்னாரா?”

“இல்லீங்கம்மா! அய்யாவ தாலுகா ஆபீஸு ப்யூன் வீட்டுக் கல்யாணத்துல பாத்தேன். இன்னைக்கு பாப்பாவ காலேசு அனுப்ப வேண்டாம். நேத்து மூச்சூடும் பேஞ்ச மழையால சேரும் சதியுமா பாத ரொம்ப மோசமா இருக்கு. ஒரே வழுக்கலா வழுக்குது. செருப்பே சேத்துல மாட்டிக்கிது. வய வேலைக்கு டிராக்டர் போயி போயி பாதை அப்பிடியே உழுது போட்டாப்ல இருக்கு. அதுனால பாப்பாவ அனுப்ப வேண்டாம். பாத கொஞ்சம் காயட்டும் நாளைக்கு காலேசுக்கு போவலாம்னு நா சொன்னதா சொல்லிட்டு வான்னு சொல்லி அனுப்புனாருங்க. அய்யா சொல்றது சரிதானுங்க பாத ரொம்பவே மோசமாதாங்க இருக்கு. பாருங்க கால்லாம் எப்பிடி சேறாயிட்டுனு. சைக்கிளு டயரப் பாருங்க ஒரே சேறு. கால வெச்சால வழுக்குதுங்க.பாத்துகுங்க. அய்யா வர கொஞ்சம் லேட்டாகும்னு சொல்லச் சொன்னாரு.” சொல்லிவிட்டுப் போய்விட்டார் கொத்தனார் மணி.

சின்ன டேபிள் மீது அம்மா வைத்துவிட்டுச் சென்றிருந்த மூன்று இட்டிலியில் ஒன்றை மட்டும் தின்றுவிட்டு, ஒருநோட்டு அதன் மீது ஏதோ ஒரு பாடப் புத்தகத்தை வைத்து அவற்றை மார்போடு அணைத்து இடையே டிஃபன் பாக்ஸை வைத்துக் கொண்டு தோழிகளுக்காகப் பறித்தக் கொய்யாப் பழங்களை நூலால் தயாரிக்கப்பட்ட தோளில் மாட்டினால் இடுப்புவரை வந்து தொங்கும் ‘ஜோல்னா பை’ எனும் மாட்டிக்கிற பையில் போட்டு கனக்கும் பையை வலது தோளில் மாட்டிக்கொண்டு இந்து வெளியே வர ஆயத்தமானபோது சுந்தரியும் செண்பகத்தம்மாளும் உள்ளே வந்தார்கள்.

“இந்தூ! பஸ்ஸேர மெயின் ரோடுக்கு நடந்து போவீல்ல, அந்த பாத நேத்தய மழேல ரொம்ப மோசமா இருக்கு. ரொம்ப வழுக்குது. ‘இந்து இன்னிக்கி காலேஜு போவேண்டாம்னு’ அப்பா கொத்தனார் மணிகிட்ட சொல்லியனுப்பிருக்காரு. அப்பா சொன்னா சரியாதான் இருக்கும். நாளைக்குப் போய்க்கலாம். இன்னிக்குப் போவேண்டாம்.” அம்மா சுந்தரி சொல்லவும் ஆமோதித்தார் செண்பகத்தம்மா.

“ம்கூம்..ம்கூம்..அதெல்லாம் முடியாது. இன்னிக்கு முக்கியமான க்ளாஸ் இருக்கு. நடத்தும் போது கவனிக்காட்டி அப்றம் புரியாது. நா எப்டியாவது பாத்து ஜாக்ரதையா போய்டுவேன்.” சொல்லிக்கொண்டே கால்களில் செருப்பை மாட்டிக் கொண்டாள் இந்து.

அம்மாவும் அப்பத்தாவும் மாற்றி மாற்றி “அப்பா பேச்ச கேக்க மாட்டியா?” என்று கேட்டும், விடாப்பிடியாக கிளம்பி வீதியில் இறங்கினாள் இந்து.

இதுவரை எது ஒன்றுக்கும் அப்பா பேச்சை தட்டாதவள் இன்று தந்தையின் வார்த்தையைப் புறக்கணித்து விட்டு செல்லுவதற்கு வீதியில் இறங்கி நாலடி நடந்தவளின் பின்னே அவள் காலடி பற்றி நடக்கும் விதிதான் காரணமோ?.


கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி பட்டுக்கோட்டை செல்லும் ஹைவேஸில் ஏழாவது மைலில் அமைந்திருந்தது சரவூர்க் கிராமம்.

ஹைவேஸின் இருபுறமும் எதிரும் புதிருமாய் அகலமும் உயரமுமாய் புளியமரங்கள் கப்பும் கிளையுமாய் படர்ந்து ஒரு கீற்று வெயில் கூட தரையில் படாதவாறு நிழலையும் குளிர்ச்சியையும் பரப்பிக் கொண்டிருந்தன.

அதிக வாகனப் போக்குவரத்து இல்லை. சாலையின் இருபுறமும் பச்சைப் பசேலென்று நெற்கதிர்கள் காற்றில் ஆடி அசைந்து கொண்டிருந்தன.

அவ்வப்போது ஓரிரு டவுன் பஸ்களும் ரூட் பஸ்களும் சென்று வந்து கொண்டிருக்க, பெரும்பாலும் ஜனங்கள் சைக்கிளிலோ, மாட்டு வண்டிகளிலோ, நடந்தோதான் சென்று வந்து கொண்டிருந்தனர்.

குளிர்ச்சியான மரங்களடந்த அந்த சாலையில் ராகவின் ராஜ்தூத் நுழைந்தபோது ஜில்லென காற்று அவன் உடலைத் தழுவிச் சென்றது.

மரங்களின் நிழலும் அது தந்த குளிர்ச்சியும் கண்ணுக்கு விருந்தாக, அங்கிருந்த பசுமையும் அவனை அந்தச் சூழலை வெகுவாக ரசிக்கச் செய்தது.

அவனையறியாமலேயே அவன் உதடுகள் “ஆஹா! ஜில்லுனு ஜம்முனு அருமையா இருக்கு” என்றன.

டவுன் பஸ் ஒன்று அவனைக் கடந்து சென்றது. காளியம்மன் கோயில் பஸ் நிறுத்தம். ஆனாலும் இறங்குவோர், ஏறுவோர் இல்லையோ என்னவோ பஸ் நிற்காமல் சென்றது.

ராகவின் ராஜ்தூத் காளியம்மன் கோயில் ஸ்டாப்பிங்கைத் தொட்டபோது லேசாய்த் தூரல் போட ஆரம்பித்தது.

காளியம்மன் கோயில் ஸ்டாப்பிங்கிலிருந்து இருபதடி தூரத்தில் வலது பக்கம் பிரியும் ஒற்றையடிப் பாதையில் சரவூர் என்ற பலகையோடு கூடிய கம்பம் நின்றிருந்தது.

வண்டியை மெயின் ரோடிலிருந்து ஒற்றையடிப் பாதைக்குத் திருப்பியவன் சட்டென ‘ப்ரேக்’ அடித்து வண்டியை நிறுத்தினான்.

பாதையின் இடப்பக்கம் கிழக்கு மேற்காக குடமுருட்டியாறு புதுவெள்ளம் போல் சுழித்து ஓடிக் கொண்டிருக்க, வலது பக்கம் வானுயர வளர்ந்து நிற்கும் சவுக்கு மரங்களடர்ந்த தோப்பு.

‘அய்யோ! இதென்ன இது சேறும் சகதியுமா கொத கொத கொதன்னு பாதையா இது? உழுது போட்ட வயல் மாரினா இருக்கு. நொழஞ்சா வண்டியோடவே வழுக்கி விழ வேண்டியதுதான் போலருக்கு.

சரவூர் சமுதாயக்கூடத்தில் நடக்கவிருக்கும் நவீன நெல்சாகுபடி பயிற்சி வகுப்பில் பயிற்சியாளராய்க் கலந்து கொள்ள வந்த நான் தாமதமாகச் சென்றால் அழகாகுமா?’ என்ற தவிப்போடு வண்டியைப் பத்தடி செலுத்தினாண்.

அதன்பின் ‘இதற்கு மேலும் செல்ல முடியுமா?’ என்ற சந்தேகத்தில் வண்டியை நிறுத்தி இரு கால்களையும் சேற்றில் ஊன்றி தயக்கத்தோடு நின்றவனின் பார்வை பாதையின் கோடிவரை சென்றது.

தனது வீடிருக்கும் தெருவின் முடிவில் திரும்பி ஒற்றையடிப் பாதையில் கால் வைத்தாள் இந்துமதி.

சேறும் சகதியும் கொதகொதப்புமாய் ஆகாங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பார்க்கவே திகிலை ஏற்படுத்தியது பாதை. கால் வைக்கவே பயமாய் இருந்தது இந்துவுக்கு.

‘திரும்பிப் போயிடலாமா?’ என்று தோன்றியது அவளுக்கு. ஆனாலும் மனதை மீறி சேற்றில் வைத்தன கால்கள்.

வலது கையால் தோளில் மாட்டியிருக்கும் கொய்யாப்பழ ஜோல்னா பையை தோளில் நன்றாக அழுந்த ஏற்றி நிறுத்தினாள்.

அதே வலது கையால் புடவையை சேற்றில் படாதவாறு லேசாக கணுக்காலுக்கு மேலாக தூக்கிப் பிடித்துக் கொண்டாள்.

மிகக் கவனமாக ‘கால் வைக்கப் பாதுகாப்பான இடம் தென்படுகிறாதா?’ என்று பார்த்துப் பார்த்து வைத்து பத்தடி தூரம் கடந்தவளுக்கு ‘கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பாதையைக் கடந்து விடலாமென்று’ நம்பிக்கை வந்தது.

‘இனி மிச்சமிருக்கும் பாதைதான் பிரச்சனையே’ என்று புரியவில்லை அவளுக்கு. நிதானமாய் நின்றாள் இந்து. ‘அடுத்த அடி வைக்க சாதகமான இடம் உள்ளதா?’ என்று பார்த்தவளுக்கு கொதகொதத்து உளையாய்த் தெரிந்த பாதை திகிலைத் தந்து ‘திக்’கென்றது.

‘துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும்’ என்ற வசனம் மனதில் எழுந்து அவளைத் தூண்டி விட்டது. முட்டாள்தனமாய் மூளை வேலை செய்ய நடக்கவிருக்கும் ஆபத்து தெரியாமல் துணிந்து உளையில் கால் வைத்தாள் இந்து.

இரண்டடி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகியது. குறுக்காய் நாய் ஒன்று தேங்கிய தண்ணீரில் நீந்தி மேடு ஏறி ஓடியது. அதன் உடலெங்கும் சேறு.

‘தெரியாம லூஸுத்தனமா வந்துட்டமோ?’ மனம் முதன்முதலாய் யோசிக்க ஆரம்பித்து பயந்தது.

கொஞ்சம் பள்ளமாய் இருந்த அந்த இடத்தில் கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் கால் வைக்காமல் மேற்கொண்டு கடந்து செல்ல முடியாது.

‘அடக்கடவுளே!’ என்று நினைத்தபடி அந்த தேங்கிக் கிடந்த சேற்றுத் தண்ணீரில் கால் வைத்தாள் இந்து. முதன்முறையாக லேசாய் வழுக்க சமாளித்தாள்.

நின்று நிதானித்து அடுத்த அடி வைத்தபோது தோளில் மாட்டியிருந்த கொய்யாப் பழப்பை தோளிலிருந்து லேசாய் சரிந்தது. புடவையைத் தூக்கிப் பிடித்திருந்த வலது கையாலேயே தோளில் மாட்டியிருந்த சரிந்த பையைத் தூக்கி தோளில் சரியாக மாட்டினாள்.

அதே நேரத்தில் இடதுபக்கம் மார்போடு அணைத்திருந்த நோட்டு புத்தகம் டிஃபன் பாக்ஸ் கூட்டணி நழுவ ஆரம்பித்தது.

சட்டென வலதுகையால் கூட்டணியை அட்ஜெஸ் செய்ய முயன்றபோது கவனம் சற்றே பிசக வழுக்குமிடத்தில் காலை எக்குதப்பாய் வைக்க, கொய்யாப்பழ ஜோல்னா பை, புத்தகம், நோட்டு, டிஃபன் பாக்ஸ் சகிதமாய் “அய்யோ” என்ற அலறலுடன் சேற்றில் விழுந்தாள் இந்து.

பையிலிருந்து கொய்யாப் பழங்கள் குதித்து வெளியே வந்து சேற்றில் சிக்கி நின்றன. டிஃபன்பாக்ஸ் திறந்து கொண்டு கீழே விழ ‘வெள்ளை வெளேர்’ இட்லிகள் சேற்றைப் பூசிக் கொண்டு சிரித்தன. நோட்டும் புத்தகமும் பக்கம் பிரிந்து சேற்றில் குப்புற விழுந்தன.

“அய்யோ! அம்மா” என்றபடி சேற்றில் அழுந்தி சிக்கிக் கொண்ட செருப்புகளிலிருந்து கால்களை எடுக்கவோ எழுந்திருக்வோ முடியாமல் விழுந்து கிடந்தாள் இந்து.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.