பக்கவாதம் என்னும் பாரிசவாதம்

பக்கவாதம் என்பது உடலின் குறிப்பிட்ட பகுதியின் இயக்கங்கள் பாதிக்கப்படும் பிரச்சினை ஆகும்.

நம் உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது மூளையே. அந்த மூளையில் ஒருபகுதி பாதிப்படைவதால், உடலின் ஒரு பக்க உறுப்புக்கள் செயலிழந்து உடலின் இயக்கமானது பாதிக்கப்படுகிறது.

மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கமும், மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் இடது பக்கமும் செயலிழந்து போகிறது.

பக்கவாதம் பாதிப்பிற்கான காரணங்கள்

உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட அல்லது கவனிக்கப்படாத நீரிழிவு நோய்.

உடலில் அதிகப்படியான கொழுப்பு சேருதல், புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம்.

மது அருந்துதல், இதயநோய்கள், இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல்.

அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், நாள்பட்ட மனஅழுத்தம், தொற்று நோய்கள்.
சரியான உடற்பயிற்சியின்மை.

மேற்கூறிய காரணங்களால் பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது.

பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப பக்கவாதமானது மருத்துவ உலகில் மூன்று வகைகளாகப் பிரித்து அறியப்படுகிறது.

இரத்த ஓட்டக்குறைபாடு (ISCHEMIC)

மூளைக்குச் செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுதல் அல்லது இரத்த உறைவு ஏற்படுதல் ஆகியவற்றால் சரியான முறையில் ஆக்ஸிஜன் மற்றும் குளுக்கோஸ் மூளைக்கு கிடைப்பதில்லை. எனவே மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு பக்கவாதம் உண்டாகிறது.

இரத்தக் கசிவு (HEMORRHAGIC)

மூளைக்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் நோய்த்தொற்றோ அல்லது உயர் இரத்த அழுத்தம் காரணமாக இரத்தக்குழாய்களில் விரிசலோ அல்லது சிறுவெடிப்போ உண்டாகி இரத்தக்கசிவு ஏற்படுவதால் பக்கவாதம் உண்டாகிறது.

நிலையற்ற இரத்த உறைவு (RESILIENT ISCHEMIC ATTACK –TIA)

இரத்த உறைவு ஏற்பட்டு மிகச்சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், சாதாரண மருத்துவச் சிகிச்சையிலேயே ஓரளவு சரிசெய்ய இயலும்.

பக்கவாதத்திற்கான அறிகுறிகள்

இந்நோய்க்கு முதல்நிலை அறிகுறிகளாக தலைவலி, வாந்தி, சுயநினைவற்ற நிலை, நடுக்கம், நெஞ்சுப் படபடப்பு, மயக்கம் ஆகியவை ஏற்படும்.

இரண்டாம்நிலை அறிகுறிகளாக உடலின் ஒருபக்கம் செயலிழந்து போகும், வாய் கோணியிருத்தல், முகவாதம், பேச்சுக்குழறல்.
கைகால் செயலிழத்தல், பாதிக்கப்பட்ட உடல் பகுதி மரத்துப்போதல், தலைசுற்றல், உடல் தடுமாற்றம்.

உடல் தோரணையில் மாற்றம், ஒருபக்கம் சாய்ந்த நடை, காலைத் தூக்கி வைத்து நடக்க முடியாமல் தரையில் காலை இழுத்தவாறு நடப்பது.

தசைகள் இறுக்கமாதல், உணவு அருந்தும் போதும் நீர் அருந்தும் போதும் புரை ஏறுதல், கோபம், எரிச்சல், கிரகிக்க முடியாமை, பயம், தாழ்வு மனப்பான்மை.

தோள் மூட்டு விலக்கம் அல்லது இறக்கம், மலச்சிக்கல், பாதிக்கப்பட்ட பகுதியில் சிலநேரங்களில் வலி, உட்கார, நடக்க படுக்கையிலிருந்து எழ சிரமம், பொருட்களைப் பற்றிக் தூக்குவதில் சிரமம்.

மூளை நரம்புகள் அதிகம் பாதிப்படைவதால் நுகர்தல், சுவைத்தல், காது கேட்பது, பார்வை ஆகியவை பாதிப்படையும்.

கண் இமை மூடியிருத்தல் மற்றும் இமை தசைகள் வலுவிழந்து காணப்படுதல்.

உணவினை விழுங்குவதில் சிரமம், முகத்தசைகள் வலுவிழத்தல் மற்றும் முகத்தில் உணர்வற்ற நிலை, சுவாசம் மற்றும் இதயத்துடிப்பில் மாற்றம், நாக்கு குழறல்.

பக்கவாதத்திற்கான பரிசோதனைகள்

இரத்த பரிசோதனை, ECG, EEG

CT ஸ்கேன்

MRI ஸ்கேன்

DOPPLER ULTRASOUND

ARTERIO GRAPHY

பிஸியோதெரபி சிகிச்சையின் அவசியம்

பக்கவாத பாதிப்பிற்குப்பின் ஏற்படும் பல்வேறு வகையான உடலியக்கப் பாதிப்புக்களை சரிசெய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் புனர்வாழ்வு அளிக்க பிஸியோதெரபி சிகிச்சையானது அவசியமாகிறது. மேலும் உடல் தோரணையை சரிசெய்வது (CAIT).

முகவாதத்தைச் சரிசெய்வது, செயலிழந்த கை மற்றும் காலை உடலியக்கப் பயிற்சிகளின் மூலம் இயங்க வைப்பது.

நடையை சரிசெய்வது.

தசை இறுக்கத்தைப் போக்குவது.

தோள், மூட்டு விலகலைச் சரிசெய்வது.

உட்கார, நடக்க, படுக்கையிலிருந்து எழ பயிற்சியளிப்பது.

தசைகள் மற்றும் மூட்டுகளில் உண்டாகும் வலியைக் குறைப்பது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை முடிந்தவரை தாங்களாகவே மேற்கொள்ள பயிற்சியளிப்பது.

நோயின் தாக்கத்தால் மனத்தளர்வுக்கு ஆளாயிருக்கும் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவது.

பிசியோதெரபி சிகிச்சைகள்

தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்கவும், மூட்டுகளின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் மெழுகுச் சிகிச்சை மற்றும் மின்சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முகவாதம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படும் தசை இறுக்கத்தைப் போக்க மசாஜ் சிகிச்சை மற்றும் வெப்பசிகிச்சை (Heat Therapy) மற்றும் உடலியக்கப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

செயலிழந்த கைகால்களுக்கு அளிக்கப்படும் தொடர் உடலியக்கப் பயிற்சிகளின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு செயல்படத் துவங்கும்.

கை மற்றும் விரல்களில் ஏற்படும் பாதிப்புகள், அன்றாட நிகழ்வுகளில் ஏற்படும் பாதிப்புகள் தொழில்முறை சிகிச்சையாளரால் (OCCUPATIONAL THERAPIST) அளிக்கப்படும் சிகிச்சை அவசியமாகிறது.

சரியான முறையில் நிற்க, நடக்க இயன்முறை மருத்துவரால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் இயன்முறை மருத்துவர் அல்லது உதவியாளரின் துணையுடன் எளிய நடைப்பயிற்சி, மண்டியிடுதல், உட்கார்ந்து எழும் பயிற்சி போன்றவற்றை தாங்களாகவே செய்துகொள்ளும் எளிய பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

பயிற்சிகளின்போது தலைசுற்றல், மயக்கம், நெஞ்சுப் படபடப்பு போன்ற உடல்ரீதியான பாதிப்புக்கள் ஏற்பட்டால் பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே மேற்கொள்ள வேண்டும்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பொது மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தங்களது அன்றாட நிகழ்வுகளை மேம்படுத்தவும், மறுவாழ்வு பெறவும் இயன்முறை சிகிச்சையினை தடையின்றி மேற்கொண்டால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல பலனைப் பெறலாம்.

க.கார்த்திகேயன்

க.கார்த்திகேயன் அவர்கள்

க.கார்த்திகேயன்

தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்.

ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர்.

விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர்.

முகவரி :
க.கார்த்திகேயன்
46 ,மேலத்தெரு
வீரான நல்லூர் ,
காட்டுமன்னார் கோயில் -608301
கைபேசி: 9894322065

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.