இருவரும், வெளியே கிளம்பிக் கொண்டிருந்த சமயம் செல்பேசி சிணுங்கியது.
மலர் கடுப்பானாள்.
“முதல்ல செல்பேசியை அணைத்து வைங்க” எனச் சீறினாள்.
எதிர் முனையில் பழனி, மோகனின் நண்பன்.
“என்னப்பா?” என மோகன் ஆரம்பிக்க…
மலர் கண்களில் கோபம் தாண்டவமாடியது.
எதிலோ ஆரம்பித்து, எங்கேயோ போய் முடிவின்றி வெட்டிப் பேச்சு நடந்து கொண்டிருந்தது.
மோகன் முன் நிற்கப் பிடிக்காமல் வீட்டை விட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
“சரிப்பா, முக்கிய வேலையாய் வெளியே கிளம்பிக்கிட்டிருக்கேன் அப்புறமாய் பேசு” வலுக்கட்டாயமாகப் பேச்சைத் துண்டித்தான்.
அவசர அவசரமாய் வெளிக்கதவைப் பூட்டிக் கொண்டு, தெருவில் இறங்கி ஓட்டமும் நடையுமாக மலரைப் பின் தொடர்ந்தான் மோகன்.
அன்று அவர்களின் திருமண நாள். அன்று முழுவதும், வெளியில் சாப்பிடுவது, சுற்றுவது என தீர்மானித்திருந்தார்கள்.
நகரிலிருந்த மிகப்பெரிய உணவகத்துக்கு சென்றார்கள்.
உணவகத்துக்குள் நுழைந்து தனிமையான ஓரிடத்தைப் பிடித்து, சாப்பிட வேண்டிய உணவைத் தேர்வு செய்யும்வரை மலர் பேசவே இல்லை.
இப்போது மலர் பேச ஆரம்பித்தாள்.
“நாள் முழுக்க அலுவலகத்தில் பேசியது போதாதென்று விடுமுறை நாட்களிலும் உங்க நண்பர் வீட்டுக்கு வந்து எந்த ஒரு வேலையையும் செய்யவிடாமல் கழுத்தறுப்பது போதாதா? அப்படி என்னதான் பேசுவீங்க?
உயிர் நண்பராய் இருந்தாலும் ஒரு வரைமுறை வச்சுக்கணும். ஊர் வம்பு, வெட்டிப் பேச்சையெல்லாம் நிறுத்துங்க. உங்க பேச்சை எல்லாம் அலுவலகத்தோடு வச்சிக்குங்க. வீடு வரை வேண்டாம்.
உங்களுக்கு எவ்வளவு சொல்லியிருக்கேன்? எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குதான். நீங்க எதுவும் செய்ய முடியாதுன்னா, நான் இதற்கு ஒருமுடிவு கட்டறேன்.
ஏதோ ஒரு முக்கிய வேலை, அவசர ஆபத்துன்னா வரவேண்டியதுதான். இப்படி அடிக்கடி வீட்டுக்கு வந்து வீண் பேச்சு பேசிக்கிட்டு நம் தனிமையையும் கெடுத்துக்கிட்டிருந்தா எப்படி?..”
“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் அவன் இல்ல மலர். மிக நல்லவன். ஏதோ கூடப்பிறந்தவன் மாதிரி பழகறான். நீதான் அவனைப் பற்றி ஆயிரம் கற்பனைகளோடு இருக்கே..”
மோகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மலர் இடைமறித்தாள்.
“…எந்தப் புற்றுல எந்தப் பாம்பு இருக்குமோ? உங்க உயிர் நண்பனையெல்லாம் அலுவலகத்தோடு நிறுத்திக்குங்க. நீங்க இப்படித்தான் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போறீங்களா?”
மோகனுக்கு ரொம்பவும் சங்கடமாக இருந்தது. ‘முகத்திலடித்தாற் போல் வீட்டுக்கெல்லாம் வராதேன்னு எப்படி சொல்வது?’ மனம் குழம்பிக் கொண்டிருந்தான்.
இருவரது மனங்களும் வெவ்வேறு மாதிரி சஞ்சலமடைந்து கொண்டிருக்க, ஏனோ தானோவென்று வெளியே பொழுதைக் கழித்துவிட்டு வீடு திரும்பினர்.
வெளியே சுற்றிய களைப்பிலும், அசதியிலும் மோகன் வீடு வந்து சேர்ந்ததும் கட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் உறங்கிப் போனான்.
மலர் வீட்டின் பின்புறம் சென்றாள். மோகனின் செல்பேசியில், பழனியின் எண்ணைத் தேடி அவனை தொடர்பு கொண்டாள்.
“என்ன மோகன், எங்கே போயிருந்தே? எத்தனை முறை கூப்பிடறது. செல்பேசியை அணைத்துவிட்டு இவ்வளவு நேரமாய் என்ன பண்ணிக்கிட்டிருந்தே?”
மலர் எனத் தெரியாமல் பழனி பேச ஆரம்பிக்க, மலர் தொடர்ந்தாள்.
“ஐயா, நான் மோகனோட மனைவி பேசறேன்” என்றதும்,
“சொல்லுங்கம்மா, என்ன திடீர்னு நீங்க பேசறீங்க? மோகன் இல்லையா? என்னம்மா செய்தி?” பழனி பதட்டமானான்.
“ஒன்னுமில்லே, ஒரு சின்ன உதவி. என் தங்கச்சிக்கு வரன் அமையற மாதிரி இருக்கு, என்னோட அப்பா எங்க மூலமாய் ஒரு லட்சரூபாய் கடனாக கேட்கிறார்.
திடீர்னு ஒரு லட்ச ரூபாய்க்கு எங்கே போறது? இந்த ஊருக்கு மாறுதல்ல வந்து, ஓராண்டு தான் ஆகுது. உங்களைத் தவிர எங்களுக்கு வேறு யாரைத் தெரியும்?
நீங்கதான் அவருக்கு ரொம்பப் பழக்கம். தம்பி மாதிரின்னு அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாரு. இந்த இக்கட்டான நிலையிலும் கூட உங்களிடம் வெளிப்படையாகக் கேட்க கூச்சப்படறார்.
நீங்கதான் எப்படியாவது உதவணும். அப்பாவிடம் இருந்து பணம் வந்ததும் திருப்பித் தந்துவிடுகிறோம். உங்களைத்தான் நம்பியிருக்கோம்.”
மலர் இப்படிக் கூறியதும் பழனியால் மேற்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் தடுமாறினான்.
“அம்மா! தப்பா நினைக்காதீங்க, நானும் உங்கள மாதிரிதான் இவ்வளவு பெரிய தொகையைத் தரும் அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை. உதவக் கூடியவர்களுக்கும் யாருமில்லை. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை” எனத் தட்டுத் தடுமாறி வார்த்தைகளை உதிர்த்தான்.
மறுநாள், அலுவலகம் சென்ற மோகன், பழனியைத் தேடி அவனது இருக்கைக்குச் சென்றபோது அவன் இல்லை.
விசாரித்ததில் ஊரில் அவனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனப் பதினைந்து நாட்கள் விடுமுறையில் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
பதினைந்து நாட்களுக்குப் பின் வேலைக்குத் திரும்பிய பழனி மோகனைக் கண்டும் காணாதது போல் இருக்க ஆரம்பித்தான்.
மோகன் பேச வரும் சமயம் ஏதாவது சாக்கு சொல்லி அவனிடமிருந்து விலக ஆரம்பித்தான்.
மோகனுக்கு பழனியின் இந்த திடீர் மாற்றம் ஏன் எனப் புரியவில்லை.
இப்பொழுதெல்லாம் பழனி, மோகனைத் தேடி வீடு வருவதில்லை. அலுவலகத்திலும் முகம் கொடுத்து சரியாகப் பேசுவதில்லை. வெளியே எங்கேயாவது பார்த்தால்கூட மோகனைத் தவிர்க்கும் வகையில் நடந்து கொள்கிறான்.
மலரிடம் இது குறித்துப் பேச பயம். பழனியின், நட்பு முறிவுக்கான காரணம் புரியாமல் மோகன் குழம்பிக் கொண்டிருக்கையில், உறவையும் நட்பையும் கூட முறிக்கும் சக்தி ‘பணம் பத்தும் செய்யும்‘ என்பதில் அடங்கியிருப்பதை எண்ணி மலர் மட்டும் வியப்புடன் நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தாள்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!