பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் உணவின்றி வருந்திய பன்றிக் குட்டிகளுக்கு தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டியதைக் குறிப்பிடுகிறது.

சுகலனின் புதல்வர்கள் பெற்ற சாபம், சாபம் பெற்றவர்கள் பன்றிக்குட்டிகளாக மாறுதல், பன்றிக்குட்டிகள் உணவின்றி வருந்துதல், சொக்கநாதர் பன்றிக்குட்டிகளின் சாபத்தை நீக்கியது ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி ஐந்தாவது படலமாக அமைந்துள்ளது.

சாபத்தினால் பன்றிக்குட்டிகள் உருவாதல்

ராசராச பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் மதுரை நகரில் வைகை ஆற்றின் கரைக்குத் தெற்கே குருவிருந்த துறை என்ற ஊர் ஒன்று இருந்தது.

தற்போது அவ்வூர் குருவித்துறை என்றழைக்கப்படுகிறது. அவ்வூரில் சுகலன் என்ற ஒரு வேளாளன் வசித்து வந்தான். அவனுடைய மனைவி சுகலை ஆவாள்.

அவர்கள் பொருட்செல்வமும், மக்கள் செல்வமும் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். அதாவது அத்தம்பதியினருக்கு பன்னிரெண்டு ஆண்மக்கள் இருந்தனர்.

சில ஆண்டுகளில் சுகலன் இறந்து விட்டான். தந்தையை இழந்த சுகலனின் ஆண்மக்கள் உணவிற்காக வேடர்களோடு இணைந்து காட்டிற்கு சென்று வேட்டையாடி வந்தனர்.

அப்போது ஒருசமயம் காட்டில் தவம் செய்து கொண்டிருந்த தேவர்களின் குருவான வியாழ பகவானைக் கண்டனர்.

அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த வியாழ பகவானை கேலி செய்தனர். பின்னர் அவர் மேல் கல்லையும், மண்ணையும் வாரி இறைத்தனர்.

இதனால் கோபம் கொண்ட தேவகுரு அவர்களை பன்றிக்குட்டிகளாகப் பிறந்து தாய்தந்தையரை இழந்து உணவுக்காக அலைவீர்கள்” என்று சாபம் இட்டார்.

தேவகுருவின் சாபத்தால் அதிர்ச்சியடைந்த சுகலனின் பிள்ளைகள் “எங்கள் சாபம் நீங்க வழி கூறுங்கள்” என்று கதறினர்.

அவர்களிடம் இரக்கம் கொண்ட தேவகுரு “மதுரைச் சொக்கநாதர் உங்களுக்கு தாயாய் வந்து பாலூட்டி உங்களின் பசித்துன்பத்தைப் போக்குவார்.

பின்னர் அவர் பாண்டியனுக்கு உங்களை மந்திரியாக்கி இறுதியில் உங்களுக்கு முக்தியையும் கொடுப்பார்” என்று கூறினார்.

சுகலனின் பிள்ளைகள் அக்காட்டில் இருந்த அரசபன்றிக்கு மகன்களாக அரசிபன்றியின் வயிற்றில் தோன்றினர்.

சொக்கநாதர் பன்றிக்குட்டிகளுக்கு பாலூட்டல்

அச்சமயம் ராசராச பாண்டியன் காட்டிற்கு பெரும் படையுடன் வந்து தொல்லை தந்த விலங்குகளை வேட்டையாட எண்ணினான்.

அதன்படி காட்டிற்கு சிறந்த வேட்டையாடுபவர்களுடன் வந்தான். இராசராச பாண்டியனின் வருகையை அரசபன்றி ஒற்றர் பன்றி மூலம் அறிந்தது.

பின்னர் அரசிபன்றியிடம் “நீ இங்கேயே பத்திரமாக நம் குழந்தைகளை கவனித்துக் கொண்டிரு. நான் பாண்டியனை எதிர்த்து போராடச் செல்கிறேன். 

நான் உயிருடன் திரும்பி வருவேனா? இல்லை மடிவேனா? என்று தெரியவில்லை” என்றது.

அதனைக் கேட்ட அரசிபன்றி “நானும் உங்களுடன் வந்து பாண்டியனை எதிர்ப்பேன். வெற்றி பெற்றால் நாம் மீள்வோம். இல்லையேல் நாம் அங்கேயே மடிவோம்” என்று கூறியது.

பன்றிகள் பாண்டியனை எதிர்த்து போரிடப் புறப்பட்டன. இதனால் பன்றிக்குட்டிகள் தனிமை அடைந்தன.

அரசபன்றி இராசராச பாண்டியனை எதிர்த்து போரிட்டு மடிந்தது. அரசிபன்றி சருச்சான் என்பவனுடன் போரிட்டு மடிந்தது.

பன்றிகள் மடிந்த இடம் இன்றும் பன்றிமலை என்று அழைக்கப்படுகிறது. அம்மலையில் சித்தர் மற்றும் யோகிகள் வீடுபேற்றிற்காக தவம் செய்வதாக கருதப்படுகிறது.

ரங்க வித்யாதாரன் என்னும் இயக்கன் புலத்தியரின் தவத்திற்கு இடையூராக யாழிசைத்து பாடினான். இதனால் புலத்தியர் கோபத்தில் பன்றியாகப் போகும்படி சபித்தார்.

வருந்திய அவ்வியக்கனுக்கு இராசராச பாண்டியனுடனான போரின் போது மடிந்து மீண்டும் பழைய நிலையை அடைவாய் என்று புலத்தியர் சாபம் நிவர்த்தி கூறினார்.

அச்சாபத்தினால் ரங்க வித்யாதரன் அரசபன்றியாய் பிறந்தான். இராசராச பாண்டியனால் கொல்லப்பட்டு பழைய வடிவம் அடைந்தான்.

சாபத்தினால் பன்றிஉருவம் பெற்ற இயக்கனின் உடல் இருந்த இடம் ஆதலால் பன்றி மலை தவம் மேற்கொள்ள சிறந்த இடம் ஆகும்.

பன்றிக்குட்டிகள் தாயையும், தந்தையையும் இழந்து உணவிற்காக அலைந்து திரிந்தன.

பன்றிக்குட்டிகளிடம் இரக்கம் கொண்ட சொக்கநாதர் தாய் பன்றியாக உருமாறி பன்றிக்குட்டிகளின் முன் தோன்றினார். தம் தாயைக் கண்ட பன்றிக்குட்டிகள் ஆவலாய் தாயிடம் சென்றன.

சொக்கநாதர் பன்றிக்குட்டிகளுக்கு பாலூட்டினார். சொக்கநாதரின் பாலை உண்ட பன்றிக்குட்டிகள் வலிமையையும், வெற்றியையும், ஞானத்தையும், நற்குணங்களையும் பெற்றன.

பின்னர் இறைவனார் அக்குட்டிகளுக்கு முகத்தை மட்டும் பன்றியாக வைத்து உடலினை மனித வடிவமாக மாற்றினார்.

பின்னர் சொக்கநாதர் அங்கிருந்து மறைந்து அருளினார். இவ்வாறு எவ்வுயிருக்கும் தாயும் தந்தையுமாக இருந்து காப்பவ‌ர் இறைவனே அன்றி ஒருவரும் இல்லை.

இப்படலம் கூறும் கருத்து

பொரியோர்களை கேலி செய்தால் சுகலனின் பிள்ளைகளுக்கு உண்டான இழிவான நிலையே ஏற்படும்.

இழிந்த நிலை உயிரினங்களையும் இறைவன் காப்பார் ஆகியவை இப்படலம் கூறும் கருத்தாகும்.

–வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் இசைவாது வென்ற படலம்

 

அடுத்த படலம் பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: