பறக்கும் வீதிகள் ஒற்றைப் பூக்கள்- நூல் விமர்சனம்

வாழ்க்கையில் எழுதுவது எப்படியெனக் கேட்டால் எழுத்தாளர் மரியம் தெரசா அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

எழுத்து என்னும் ‘பாண்டித்தியம்’ அவர் கையில் தாண்டவம் ஆடும். அந்த அளவிற்குப் புதுப்புது விதமான யாப்புப் புதுமைகளையும் கவிதை வடிவத்தினையும் புதிதாகத் தந்து கொண்டிருக்கிறவர் மரியம் தெரசா அவர்கள் ஆவார்கள்.

எழுத்து என்ற வரம் அவர்களுக்குப் பூரணமாய் கைக்கூடி இருக்கிறது. கற்பனையின் ஓட்டத்தில் வார்த்தைகள் வந்து குவிகின்றன. எங்கு பார்த்தாலும் கவிஞருக்கு, அவை நூல்களுக்கான கருப்பொருள்களாகவே தென்படுகின்றன.

எனவே, பார்க்கின்ற யாவற்றையும் தன் உள்ளக் கிடக்கையில் நிறுத்தி அவற்றுக்குத் தன் கற்பனாசக்தியால் மாய வடிவங்களைத் தந்து ஒரு கவிதை சாம்ராஜ்யத்தையே தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ஒற்றைப் பூக்கள் என்கிற இந்த நூல் வெளிவர இருக்கின்றது. சாத்தியமற்ற சாத்தியங்கள் உலகில் ஜொலிக்காமல் போய்விடலாம். ஆனால், சாத்தியமான சாத்தியமற்றவைகள் இந்த உலகில் சரித்திரம் படைக்காமல் போவதில்லை.

அந்த வகையில் அம்மையார் அவர்களின் புதிய புதிய முயற்சிகள், ஒரு பெரும் சாதனையை நிகழ்த்த இருக்கின்றன எனலாம். ஒற்றை வரியில் கற்பனைகளின் வடிவங்கள் காட்சிப் பிம்பங்களாகப் பிரிந்து விரிந்து படிக்கின்ற வாசகனை அந்தக் கற்பனை உலகத்திற்குள் அழைத்துச் செல்லுகின்ற பெரும் நடப்பை இக்கவிதைகள் செய்து கொண்டிருக்கின்றன.

கவிதை என்று கூறுவதா

கற்பனையின் வரிகள் என்று சொல்வதா

எண்ணங்களின் வெளிப்பாடு என்று சொல்வதா

சிந்தனைகளின் மறுபக்கம் என்று சொல்வதா

வார்த்தை விளையாட்டு என்று சொல்வதா

இது வையகத்தில் புதிது என்று சொல்வதா

அறிவு அறிவு என்று கூப்பாடு போட்டுக் கத்துவதா

என்ன செய்வதென்று தெரியவில்லை.

அத்தனை அழகாக வடிவமைத்திருக்கிறார்.

கருத்துக்களால் புனைந்து இருக்கிறார்.

இந்த நூலில் ஆசிரியர் மரியம் தெரசா அவர்கள் இதயத்தைக் கூறுகிற பொழுது, அந்த இதயம் கனவுகளைச் சுமந்து கொண்டு, மிக எளிதாகப் பறந்து போய் விடுகிறது என்கிறார்.

‘மேகத்தை’ச் சொல்லுகிற பொழுது ‘மழையைப் பிடித்து வைத்திருக்கும் கோணிப்பை‘ என்கிறார்.

‘கவிதை’ என்பது ‘கற்பனை நதியில் படகுப் பயணம்‘ என்கிறார்.

இப்படி ஒவ்வொன்றையும் நாம் பார்க்கிறபொழுது, அவைகள் நமக்கு ஒரு முழு நீளக் கவிதையின் தரத்தை, உணர்வை, இக்கவிதைகள் தந்து விடுகின்றன.

‘அலை’ என்கிறபொழுது ‘நீரில் முடைந்த ஓலை‘ என்கிறார்.

‘இசை’யைப் ‘புல்லாங்குழல் பதுங்கு குழியில் வாழும்’ என்று சொல்லுகிறார்.. ஒரு இசைக்கருவியைப் போர்க்களத்தில் காணப்படும் பதுங்கு குழி என்று வர்ணிப்பது சிறப்பு.

‘இரவு’ என்பதனைச் சொல்லுகிறபொழுது ‘தரணி தன் இமையை மூடிக் கொள்கிறது’ என்று ஒரு காலத்தை ஒரு மனிதனுக்கு மனிதனின் செயலுக்கு ஒப்புமைப்படுத்தி எழுதியிருக்கிறார்.

இவ்வாறு செம்மார்ந்த கற்பனை நயமும் அதில் ஒழுங்கும் சிறந்த வெளிப்பாட்டு நிலையும், சரித்திரத்தை எழுதி இருக்கின்றன என்று சொல்லலாம்.

இக்கவிதைகள் கட்டாயம் சிறுவர்களையும் பெரியவர்களையும் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. கவிதைக்கு எளிமை தான் வடிவம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

ஆசிரியர் இது போன்ற இன்னும் பல நூறு நூல்களை, கவிதைகளை, தமிழ் உலகத்திற்குத் தர வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான நிலையில் வேண்டுதல் செய்கிறேன்.

அவர் தமிழ்ப் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்!

பா. பாரதி M.A., M.Phil., B.Ed., Pandit
இளநிலை அலுவலர்
அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகம்