பாலைவனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பாலைவனம் என்றதுமே கொடுமையான வெயில், பரந்த மணல்பரப்பு, ஆங்காங்கே உள்ள கள்ளிச்செடிகள் மட்டுமே நம் நினைவிற்கு வரும். ஆனால் இயற்கையானது பாலைவனத்தையும் அற்புதமான வாழிடமாக வடிவமைத்துள்ளது என்பதே உண்மை.

பாலைவனமானது வாழிடமாக மட்டுமில்லாமல் ஏராளமான கனிம மற்றும் கரிமத் தன்மை கொண்ட மனித வளர்ச்சிக்கான வளங்களையும் கொண்டுள்ளது. பாலைவனமானது நில வாழிடத்தின் முக்கியமான ஒன்றாகும்.

ஆண்டிற்கு 25 செமீக்கும் குறைவான மழை பெறும் பகுதி பொதுவாக பாலைவனம் என்றழைக்கப்படுகிறது. மழைப்பொழிவை மட்டும் வைத்து ஓர் இடத்தை பாலைவன‌மென தீர்மானிக்க முடியாது. அவ்விடத்தில் நிகழும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகிய கூறுகளும் பாலைவனத்தை தீர்மானிக்கின்றன.

சுருங்கச் சொன்னால் ஓர் இடத்தில் நிகழும் மழைப்பொழிவு மற்றும் அங்குள்ள நீர்ஆதாரங்கள் ஆகியவற்றைவிட அதிகமாக நீர் வெளியேறும் புவியியல் பிரதேசங்கள் பாலைவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உலகின் நிலப்பரப்பில் 20 சதவீதத்தை பாலைவனம் கொண்டுள்ளது. உலகில் ஐரோப்பாவைத் தவிர ஏனைய கண்டங்களில் பாலைவனமானது காணப்படுகிறது.

பொதுவாக பாலைவனமானது வெப்ப மற்றும் உலர் பாலைவனம், பாதி வறண்ட பாலைவனம், கடற்கரை பாலைவனம், குளிர் பாலைவனம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான காலநிலை, உயிரினங்கள், வளங்களைக் கொண்டுள்ளன. இனி அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 

வெப்ப மற்றும் உலர் பாலைவனம்

 

வெப்ப மற்றும் உலர் பாலைவனம்
வெப்ப மற்றும் உலர் பாலைவனம்

 

இவை பெரும்பாலும் கடகரேகை மற்றும் மகரரேகைப் பகுதிகளை ஒட்டிக் காணப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய வெப்ப மற்றும் உலர் பாலைவனம் ஆப்பிரிக்காவின் சகாரா ஆகும்.

வடஅமெரிக்காவின் சிஹுஹுவான், மோஜவே, சொனோரான், அர்ஜெண்டினாவின் மான்டே, ஆப்பிரிக்காவின் சகாரா, கலாஹரி, இந்தியாவின் தார், சௌதிஅரேபியா, ஆஸ்திரேலியாவின் கிரேட்சாண்டி, விக்டோரியா, சிம்ப்சன், கிப்சன், ஸ்டார்டெஸ்டெர்ட்ஸ் இவ்வகையைச் சார்ந்தவை.

இங்கு காலநிலையானது ஆண்டு முழுவதும் வெப்பமாகவே உள்ளது. கோடையில் வெப்பம் மிகஅதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் இங்கு மழைப்பொழிவு சிறிதளவு இருக்கும்.

இவ்வாழிடத்தில் உள்ள மண்ணின் மேற்பரப்பானது உலகின் உள்ள ஏனைய இடங்களைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான வெப்பத்தினைப் பெறுகிறது. அதே போல் இரவில் இரண்டு மடங்கு வெப்பத்தினை இழக்கிறது.

இவ்வாழிடத்தில் ஆண்டின் சராசரி வெப்பநிலை 20-25 டிகிரி செல்சியஸாக உள்ளது. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 43-49 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை – 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கிறது.

இங்கு மழைப்பொழிவானது நீண்டநாட்களுக்குப் பிறகு மிகக்குறைந்தளவே இருக்கும். இங்கு மழையின் அளவினைவிட ஆவியாதலின் அளவு அதிகமாக உள்ளது. இவ்வாழிடத்தில் சிலநேரங்களில் மழையானது பூமியை அடையும் முன்பே ஆவியாகி விடுகிறது.

சகாராவின் உட்பகுதியில் மழையானது 1.5 செமீக்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க பாலைவனங்களில் மழைப்பொழிவு ஆண்டிற்கு 25 செமீராக உள்ளது.

இங்கு மண்ணானது கடினமானதாகவும், பாறைகளைக் கொண்டும், சரளையாகவும் நல்ல வடிகால் தன்மையுடனும் நிலத்தடி நீர் இல்லாமலும் இருக்கிறது. இங்கு எடை இல்லாத தூசு, மண் போன்றவை எங்கும் பறந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாழிடத்தில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இங்குள்ள உயிரிகள் தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. இங்கு தாவரங்கள் தரையை ஒட்டியும், புதராகவும், குறுமரங்களாகவும் காணப்படுகின்றன.

சில தாவரங்கள் முட்களுடன், சதைப்பற்று கொண்ட தண்டுகளைக் கொண்டும், வேகமாக தண்ணீரை உறிஞ்சும் பொருட்டு அகலமான வேர்களையும், தண்ணீரை சேமிக்கும் பொருட்டு மேற்பரப்பு மெழுகுப்பூச்சினைக் கொண்டுள்ளன.

 

ப்ரிக்லி பியர்ஸ்
ப்ரிக்லி பியர்ஸ்

 

யூக்காஸ், ஒக்கோடில்லோ, டர்பெண்டைன் புஷ், ப்ரிக்லி பியர்ஸ், பொய்யான மெஸ்குட், சோடோல், எபெதராஸ், ஆகாவ்ஸ் மற்றும் பிரிலிபுஷ் ஆகியவை இங்கு காணப்படும் தாவர வகைகள் ஆகும்.

இங்கு பெரும்பாலும் சிறுவிலங்குகளே காணப்படுகின்றன. இங்குள்ள விலங்குகள் பகலில் வளையைத் தோண்டியும், தாவரங்களில் ஒளிந்து கொண்டும் வாழ்கின்றன. இரவில் இவை வெளியேவந்து இரையைத் தேடுகின்றன.

 

கங்காரு எலி
கங்காரு எலி

 

கங்காரு எலி, கிட் நரிகள், கயோட்டி ஓநாய்கள், பருந்துகள், பாம்புகள், பல்லிகள், பாலைவனப் பறவைகள் ஆகியவை காணப்படுகின்றன.

பாதி வறண்ட பாலைவனம்

 

பாதி வறண்ட பாலைவனம்
பாதி வறண்ட பாலைவனம்

 

வடஅமெரிக்கா, நியூஃபவுண்ட்லேண்ட், கிரீன்லாந்து, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் வடஆசியா ஆகிய இடங்களில் இவ்வகைப் பாலைவனம் காணப்படுகிறது.

இங்கு நீண்ட வறண்ட கோடைகாலமும், மழையுடன் கூடிய குறுகிய குளிர்காலமும் காணப்படுகிறது. இங்கு கோடையில் வெப்பநிலை 21-27 டிகிரி செல்சியஸாக உள்ளது. பகலில் இவ்விடத்தின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், இரவில் 10 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.

குளிர்ந்த இரவானது இங்குள்ள உயிரினங்களுக்கு சுவாசம், வேர்த்தல், நீராவிப்போக்கு ஆகியவற்றால் ஏற்படும் தண்ணீர் இழப்பினை தவிர்க்கிறது.

சில பாதி வறண்ட பாலைவனங்களில் இரவின் குளிர்ச்சியால் ஏற்படும் பனிப்பொழிவானது பெய்யும் மழைக்கு சமமாகவோ, அதிகமாகவோ இருக்கிறது. இவ்விடத்தில் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 2-4 செமீ-ராக உள்ளது.

இங்கு மண்ணானது மணல், பாறைகள், சரளை என பலவடிவங்களில் காணப்படுகிறது. இங்கு பெரும்பாலான இடங்களில் மண்ணானது நல்ல வடிகால் திறனைப் பெற்றுள்ளது. இவ்விடத்தில் மண்ணின் உப்புத்தன்மை குறைந்து இருக்கிறது.

இங்குள்ள தாவரங்கள் முட்களுடனோ, முடிபோன்ற இலைகளுடனோ காணப்படுகிறது. இலைகள் பளபளப்பாக ஒளியை எதிரொளிக்கும் பண்பினைக் கொண்டுள்ளன.

 

King_Clone SAD

கிரோசோட் புஷ், புர்ஜ் சாக், வெள்ளை முள், பூனைக்கூம்பு, மெஸ்குட், லைசிம்ஸ் மற்றும் இலந்தை போன்ற தாவங்கள் இங்கு காணப்படுகின்றன.

 

குழி ஆந்தை
குழி ஆந்தை

 

கங்காரு எலிகள், முயல்கள், வெட்டுக்கிளிகள், எறும்புகள், பல்லிகள், பாம்புகள், குழி ஆந்தைகள், கலிபோர்னியா புல்லர் ஆகிய விலங்குகள் காணப்படுகின்றன.

கடற்கரை பாலைவனம்

 

கடற்கரை பாலைவனம்
கடற்கரை பாலைவனம்

 

சிலியில் உள்ள அடகாமா பாலைவனம் கடற்கரை பாலவனத்திற்கு சிறந்த உதாரணமாகும். உலகின் மிகவும் உலர்ந்த பாலைவனம் அடகாமா ஆகும்.

இவை வெப்பமானது முதல் மிதமான குளிர்ச்சியான காலநிலையைப் பெற்றுள்ளது. இங்கு நீண்ட வெப்பமான கோடைகாலமும், குளிர்ச்சியான குளிர்காலமும் காணப்படுகிறது.

இவ்விடத்தில் வெப்பநிலை கோடைகாலத்தில் 13-24 டிகிரி செல்சியஸாகவும், குளிர்காலத்தில் வெப்பநிலை 5 டிகிரிக்கும் குறைவாக உள்ளது. இவ்விடத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை -4 டிகிரி செல்சியஸாகவும் இருக்கிறது.

இங்கு ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 8-13 செமீ-ராக உள்ளது. இவ்விடத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு 37 செமீராகவும் குறைந்தபட்ச மழைப்பொழிவு 5செமீராகவும் இருக்கிறது.

இங்கு மண்ணானது லேசான உப்புத்தன்மையுடன் கடினமானதாகவும், நல்ல வடிகால் தன்மையுடனும் நுண்ணியதாவும் உள்ளது.

இங்குள்ள சிலதாவரங்கள் பரந்த மேற்புறமான வேர்களை மழைநீரினைப் பெறும் பொருட்டு இருக்கிறது. தாவர இலைகள் தடித்து சதைப்பற்றுடனும், நீரினை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் வகையிலும் காணப்படுகின்றன.

உப்பு புல், பக்வீட் புல், கருப்பு புல், அரிசி புல், புர்ஜ் சாக் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன.

இங்குள்ள விலங்குகள் தண்ணீர் பற்றாக்குறை, வெப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ற தகவமைப்பினைக் கொண்டுள்ளன.
சிலதவளைகள் குழிதோண்டி எச்சிலால் தன்னைச் சுற்றிலும் மூடிக்கொண்டு மழைகாலத்தை எதிர்நோக்கி இருக்கின்றன.சிலபூச்சிகளின் முட்டைகள் மண்ணில் புதைந்து தக்ககாலத்தில் பொரித்து குஞ்சாக வெளிவருகின்றன.

 

வழுக்கைத்தலை கழுகு
வழுக்கைத்தலை கழுகு

 

பூச்சிகள், கயோட்டிகள், பேட்ஜர், தவளைகள், ஒற்றைக்கொம்பு ஆந்தை, வழுக்கைத்தலை கழுகு, தங்கக்கழுகு, பல்லிகள், பாம்புகள் ஆகியவை காணப்படுகின்றன.

குளிர் பாலைவனம்

 

குளிர் பாலைவனம்
குளிர் பாலைவனம்

 

இவை அன்டார்டிக்கா, கிரீன்லாந்து, ஆர்டிக் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இவை நீண்ட மிகவும் குளிரான குளிர்காலத்தையும், மழை மற்றும் பனிப்பொழிவினை உடைய குறுகிய கோடைகாலத்தினையும் கொண்டுள்ளன.

இங்கு சராசரி வெப்பநிலை குளிர்காலத்தில் -2 முதல் 4 டிகிரி செல்சியஸாகவும், கோடையில் 21-24 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது. இங்கு மழைப்பொழிவு 15-26 செமீராக உள்ளது.

இங்கு மண்ணானது கனமானதாகவும், உப்பாகவும் நல்ல வடிகால் அமைப்புடனும் உள்ளது. இங்குள்ள தாவரங்கள் 15-120 செமீ உயரத்தில் காணப்படுகின்றன. இவை கூரிய முட்போன்ற இலைகளைக் கொண்டுள்ளன.

 

Sagebrush

 

இங்கு சேக்புஷ், ஸேட்ஸ்கேல் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன.

 

ஜாக் முயல்
ஜாக் முயல்

 

ஜாக்முயல்கள், கங்காரு எலிகள், வெட்டுக்கிளிகள், நிலத்தடி அணில், ப்ராக்கோன்மான்கள், கயோட்டி ஓநாய்கள், கிட்நரிகள், பல்லிகள் ஆகியவை காணப்படுகின்றன.

பாலைவனங்களின் முக்கியத்துவம்

பாலைவனங்கள் உலகில் உள்ள 6-ல் 1 பங்கு உயிரினங்களுக்கு வாழிடமாக உள்ளது. இவ்வாழிடத்தில் காணப்படும் உயிரினங்கள் மனிதர்களுக்கு பெரும் பயன்பாட்டினை அளிக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒட்டகங்கள் மற்றும் பேரீச்சம் பழத்தினைக் கூறலாம்.

பாலைவனங்கள் கனிமப்பொருட்களான போரேட், ஜிப்சம், நைட்ரேட், பொட்டாசியம் ஆகியவை அதிகளவு கொண்டுள்ளது. உலகில் உள்ள கரிமஎரிபொருளான பெட்ரோலியத்தின் 75 சதவீதத்தை பாலைவனங்கள் கொண்டுள்ளன.

பாலைவனங்களில் காணப்படும் தாவரங்கள் அங்கு நிலவும் சூழலை சமாளிக்க தேவையானவற்றை மனிதனுக்கு கற்பிக்கின்றன. மேலும் இங்குள்ள தாவரங்கள் மருத்துவப்பண்புகளைக் கொண்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக இஸ்ரேல் பாலைவனத்தாவரம் மலேரியா நோயினை குணப்படுத்தும் மருந்தினைக் கொண்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள கலாஹரி பாலைவன மண்ணில் உள்ள பாக்டீரியாவானது வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை மண்ணில் சேகரிக்கும் பண்பினைக் கொண்டுள்ளது. எனவே இவை கார்பன் தொட்டிகளாகவும் செயல்படுகின்றன.

பாலைவனமும் பூமியின் முக்கிய வாழிடம் ஆகும். மனிதன் பாலைவன வளங்களை எடுக்க தனது செயல்பாடுகளால் பாலைவனத்தினை சிதைக்கக்கூடாது.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.