பாவ் பாஜி மசாலா பொடி செய்வது எப்படி?

பாவ் பாஜி மசாலா பொடி தரமாக இருந்தால் பாவ் பாஜியின் சுவை மிக நன்றாக இருக்கும்.

பாவ் பாஜி மும்பையின் புகழ்பெற்ற சைவ வகை உணவு ஆகும். மில் தொழிலாளர்களால் விரும்பப்பட்ட இவ்வுணவு, தற்போது மும்பையின் தெருமுனைகளிலும் விற்பனை செய்யப்படும் அளவுக்கு பிரபலமானது.

‘பாவ்’ என்றால் ‘ரொட்டி’ என்பதும் ‘பாஜி’ என்றால் ‘காய்கறி’ என்பதும் பொருளாகும்.

பாவ் பாஜி தயார் செய்யத் தேவையான மசாலா பொடியை நாம் வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம்.

வீட்டிலேயே தயார் செய்வதால் இதனுடைய சுவை அதிகரிப்பதோடு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

இப்பொடியை தயார் செய்ய புதிதாக உள்ள மூலப்பொருட்களைப் பயன்படுத்துதல் அவசியம்.

மூலப்பொருட்களை வெயிலில் காய வைத்தோ வறுத்தோ பயன்படுத்தலாம்.

வெயிலில் காய வைப்பதாக இருந்தால் 10-15 மணி நேரம் வெயிலில் காய வைப்பது அவசியம்.

இனி சுவையான பாவ் பாஜி மசாலா பொடி தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கொத்த மல்லி விதை – 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்

குறு மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 4 எண்ணம் (பெரியது)

கிராம்பு – 4 எண்ணம்

ஏலக்காய் – 3 எண்ணம்

பட்டை – சுண்டு விரல் அளவு

பிரிஞ்சு இலை – 2 எண்ணம் (மிகச்சிறியது)

மஞ்சள் பொடி – 2 ஸ்பூன்

ஆமச்சூர் பொடி – 2 டேபிள் ஸ்பூன்

பாவ் பாஜி மசாலா பொடி செய்முறை

மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொத்த மல்லி விதை, சீரகம் மற்றும் காம்பு நீக்கிய மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

மல்லி, சீரகம் மற்றும் வற்றலை வறுக்கும் போது

அடுப்பினை சிம்மில் வைத்து வாசனை வரும் வரை வறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

அதே வாணலியில் பெருஞ்சீரகம், குறுமிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் பிரிஞ்சு இலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து, மல்லி விதைக் கலவை வைத்த பாத்திரத்தில் சேர்த்து ஆற விடவும்.

சோம்பு, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சு இலை, கிராம்பு மற்றும் மிளகு வறுக்கும் போது
வறுத்த பொருட்களை ஆறவிடும் போது

வறுத்த எல்லா பொருட்களும் மிதமான சூட்டில் இருக்கும்போது, மிக்ஸியில் சேர்த்து அதனுடன் ஆமஞ்சூர் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து பொடியாக அரைக்கவும்.

மிக்சியில் சேர்த்ததும்

சுவையான பாவ் பாஜி மசாலா பொடி தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மேற்காணும் அளவுள்ள பொருளுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் சுக்கு பொடி சேர்த்து பொடி தயார் செய்யலாம்.

வெயிலில் காய வைத்து பொடி தயார் செய்ய ஆமஞ்சூர் பொடி மற்றும் மஞ்சள் பொடி தவிர ஏனைய மூலப்பொருட்களை காய வைத்து பொடி தயார் செய்யலாம்.

காஷ்மீரி மிளகாய் வற்றலைச் சேர்த்து இப்பொடியைத் தயார் செய்யும்போது பொடி சிவப்பு நிறத்தில் கிடைக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.