பிரண்டை துவையல் செய்வது எப்படி?

பிரண்டை துவையல் அதிக சத்துள்ள ஒரு உணவு ஆகும்.

பிரண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமான மூலிகை ஆகும். இதனை பயன்படுத்தி சூப், துவையல், சட்னி, வத்தல் செய்யலாம்.

பிரண்டைச் சாறு உடலில் பட்டால் அரிக்கும். ஆதலால் இதனுடைய தோலைச் நீக்கும் போது கையில் நல்ல எண்ணெயைத் தடவிக் கொண்டு நீக்கினால் அரிப்பினைத் தடுக்கலாம்.

எலும்புகளுக்கு வலுவூட்டி உடலினை உறுதிப்படுத்துவதால் இதற்கு வஜ்ரவல்லி என்ற சிறப்பு பெயர் உண்டு.

இனி சுவையான பிரண்டை துவையல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பிரண்டைத் தண்டு – ஒரு கட்டு

 

பிரண்டை
பிரண்டைத்தண்டு

 

உளுந்தம் பருப்பு – 2½ ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தேங்காய் – ¼ மூடி (நடுத்தர அளவு உடையது)

வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)

இஞ்சி – சுண்டு விரல் அளவு

மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (நடுத்தர அளவு உடையது)

புளி – நெல்லிக்காய் அளவு

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பிரண்டை துவையல் செய்முறை

நல்லெண்ணெய் சிறிதளவு எடுத்து, கை முழுவதும் பூசிக் கொண்டு, பிரண்டையை தோலை உரித்து ,நடுப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு எல்லா பிரண்டைத் தண்டுகளையும் உரித்துக் கொள்ளவும்.

 

தோலுரிக்கப்பட்டு துண்டுகளாக்கப்பட்ட‌ பிரண்டைத்தண்டு
தோலுரிக்கப்பட்டு துண்டுகளாக்கப்பட்ட‌ பிரண்டைத்தண்டு

 

பின்னர் அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும்.

இஞ்சியை சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

மிளகாய் வற்றலை காம்பு கிள்ளிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு, சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும்.

 

தாளிதம் செய்ததும்
தாளிதம் செய்ததும்

 

பருப்பு வெந்து நிறம் மாறத் தொடங்கியதும் சிறுதுண்டுகளாக்கப்பட்ட பிரண்டையைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

 

சிறுதுண்டுகளாக்கப்பட்ட பிரண்டையைச் சேர்த்ததும்
சிறுதுண்டுகளாக்கப்பட்ட பிரண்டையைச் சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் மிளகாய் வற்றல், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, புளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

 

மிளகாய் வற்றல், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, புளி, கறிவேப்பிலை சேர்த்ததும்
மிளகாய் வற்றல், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, புளி, கறிவேப்பிலை சேர்த்ததும்

 

பிரண்டை வெந்ததும் அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.

 

துருவிய தேங்காயைச் சேர்த்ததும்
துருவிய தேங்காயைச் சேர்த்ததும்

 

கலவையை ஆற விடவும்.

 

வதக்கி ஆறவைத்த கலவை
வதக்கி ஆறவைத்த கலவை

 

பின்னர் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து துவையலாக‌ அரைத்துக் கொள்ளவும்.

சுவையான பிரண்டை துவையல் தயார்.

 

சுவையான பிரண்டை துவையல்
சுவையான பிரண்டை துவையல்

குறிப்பு

மிகவும் இளந்தண்டாக இருந்தால் லேசாக தோலை சீவி விட்டு அப்படியே சேர்த்து துவையல் தயார் செய்யலாம்.

நான்குமுகத் தண்டு கொண்ட பிரண்டையை வாங்கி உபயோகிக்கவும்.

இளம்பச்சை நிறத்தில் உள்ள தண்டே இளமையானது. ஆதலால் இளம்பச்சைநிறத் தண்டினை தேர்வு செய்து துவையல் தயார் செய்யவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.