பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பிள்ளையார் கொழுக்கட்டை என்பது பிள்ளையார் (விநாயகர்) சதுர்த்தி வழிபாட்டின்போது படைக்கப்படும் கொழுக்கட்டை ஆகும். இதற்கு மோதகம் என்ற பெயரும் உண்டு.

இந்த கொழுக்கட்டை சுவையற்ற வெளிப்பகுதியையும் இனிப்பான உட்பகுதியையும் உடையது.

உலக வாழ்க்கைப் பற்றற்றுக் கடந்து சென்றால் இனிப்பான கடவுளை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்குவதற்காக பிள்ளையார் கொழுக்கட்டை சதுர்த்தி வழிபாட்டில் இடம்பெறுகிறது.

இனி வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு இக்கொழுக்கட்டை செய்முறை பற்றிப் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 200 கிராம்

புழுங்கல் அரிசி – 200 கிராம்

மண்டை வெல்லம் – 100 கிராம்

ஏலக்காய் – 3 எண்ணம்

தேங்காய் – ½ மூடி

உப்பு – ¼ டீஸ்பூன்

 

செய்முறை

முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு உலர்ந்த துணியில் போடவும்.

10 நிமிடங்கள் கழித்து எடுத்து மிசினில் கொடுத்து இடித்துக் கொள்ளவும்.

பின் அடிகனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும்.

வறுத்தெடுக்கும் போது மாவானது ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன்  வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.

பின் வறுத்த மாவினை சல்லடையில் போட்டு சலிக்கவும்.

கப்பியை மிக்ஸியில் போட்டு மீண்டும் சலிக்கவும். இப்போது கொழுக்கட்டை தயாரிக்க மாவு தயார்.

இதனை சதுர்த்திக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

 

பூரணக் கலவை செய்யத் தேவையான பொருட்கள்
பூரணக் கலவை செய்யத் தேவையான பொருட்கள்

கொழுக்கட்டை செய்ய விரும்பும் நாளன்று தேங்காயை துருவிக் கொள்ளவும். மண்டை வெல்லத்தை பொடியாக தட்டிக் கொள்ளவும். ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.

பின் தேங்காய் துருவல், மண்டை வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு சேரக் கலக்கவும். பூரணக் கலவை தயார்.

பூரணக் கலவை

பூரணக் கலவை

 

கொழுக்கட்டை மாவில் உப்பினைக் கலந்து கொள்ளவும்.

அடுப்பில் தேவையான அளவு நீரினைக் கொதிக்க வைக்கவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கொழுக்கட்டை மாவில் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறவும். மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும்.

தேவையான பதத்தில் மாவு
தேவையான பதத்தில் மாவு

 

உருட்டிய மாவு

உருட்டிய மாவு

 

அதில் இருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்யவும். அதில் சிறிதளவு பூரணக் கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும்.

கிண்ண வடிவில் மாவு
கிண்ண வடிவில் மாவு

 

பூரணக் கலவை உள்ளே வைத்ததும்
பூரணக் கலவை உள்ளே வைத்ததும்

கொழுக்கட்டைகளை திரட்டும்போது பூரணக் கலவை வெளியே வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். இவ்வாறாக எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக தயார் செய்யவும்.

பின் கொழுக்கட்டைகளை இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அடுப்பில் வேகவைக்கத் தயார் நிலையில்
அடுப்பில் வேகவைக்கத் தயார் நிலையில்

 

சுவையான மணமான பிள்ளையார் கொழுக்கட்டை தயார். இதனை அனைவரும் விரும்பி உண்பர்.

சுவையான பிள்ளையார் கொழுக்கட்டை
சுவையான பிள்ளையார் கொழுக்கட்டை

 

குறிப்பு:

பூரணத்திற்கு கடலைப்பருப்பினை வேக வைத்து மசித்து தேங்காய்துருவல், மண்டை வெல்லம் சேர்த்து விருப்பமுள்ளவர்கள் செய்யலாம்.

கொழுக்கட்டை மாவினை மேற்கூறிய முறையில் தயார் செய்து ஆறு மாத காலம் வரை பயன்படுத்தலாம்.

மேற்கூறிய முறையில் தயார் செய்த கொழுக்கட்டை மாவினைப் பயன்படுத்தி இடியாப்பம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.