தாமரை

புதிர் கணக்கு – 09

“எல்லோரும் சற்று அமைதியாக கேளுங்கள். இப்பொழுது ஒன்பதாவது புதிரை கூறப் போகின்றேன்.” வழக்கமான பீடிகையுடன் மந்திரியார் ஆரம்பித்தார்.

“நமது காட்டிலுள்ள தாமரை குளத்தில் தாமரை மலர்கள் நிறைய இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்”

“நான் அங்கு தானே தினமும் குளிக்கிறேன்.” என்றது யானை.

“அந்த தடாகத்தில் உள்ள தாமரை மலர்களில் சில வண்டுகள் அமர்ந்திருந்தன.

ஒரு மலருக்கு ஒரு வண்டு வீதத்தில் அமர்ந்தால் ஒரு வண்டு அமர பூ இருக்காது.

பூவுக்கு இரண்டு வண்டுகள் வீதம் அமர்ந்தால் ஒரு பூ மீதம் வருகின்றது என்றால் அங்குள்ள தாமரை மலர்கள் எத்தனை? அங்கு வந்த வண்டுகள் எத்தனை? என்பதுதான் இன்றைய கேள்வி. வழக்கம் போல நாளை மாலை பதிலுடன் வாருங்கள்” என்று கூறிவிட்டு மந்திரியார் எழுந்தார்.

அப்போது அங்கு வந்த பருந்து பஞ்சமனைக் கண்டதும் தனது ஆசனத்திலேயே அமர்ந்தது நரியார். அவர்கள் இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை சற்று தொலைவில் உயரமான இடத்தில் இருந்து காக்கை சின்னக் காளியும் பார்த்துக் கொண்டிருந்தது.

“என்ன சீனியப்பா பஞ்சமன் பருந்து உன் தந்தையிடம் வந்து மணிக்கணக்காக பேசுவதைப் பார்த்தால் நமது திட்டத்தை பற்றித்தான் கூறுகின்றாரோ?

ஏற்கனவே நான் எலிக்கண்ணனின் பின்னால் சென்றதை நேரில் பருந்து பஞ்சமன் பார்த்து விட்டதல்லவா? அது பற்றி கூறுகின்றதா?” என காகம் சின்னக்காளி கேட்டது.

“எப்படியிருந்தாலும் சரி நாம் இனியும் காலம் தாழ்த்துவது சரியல்ல” என்று சின்ன நரி சீனியப்பன் பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ வருவது போல இருந்ததால் அவசரமாக இருவரும் பிரிந்து சென்றனர்.

இதுபற்றி ஏதும் அறியாத அப்பாவியாக குட்டி எலி எலிக்கண்ணன் மிக அவசரமாக பாடிக் கொண்டே தனது வளையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

“இன்று மந்திரியார் கூறிய புதிர் மிகவும் சுலபமானதே. நம்மை விட யார் பதில் கூறப் போகிறார்கள்” என்ற எண்ணம் மனதில் விழ சற்ற மமதையுடன் ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் வந்து கொண்டிருந்தது.

திடீரென தன்னை யாரோ பின் தொடருவதை உணர்ந்த எலிக்கண்ணன் சற்று பயத்துடன் விறுவிறுவென நடந்து அருகிலிருந்த யானையாரின் வீட்டுக் கதவைத் தட்டியது.

தனுத நண்பனான எலிக்கண்ணன் தன் வீட்டு வாசலில் நிற்பதை கண்டதும் மனம் மகிழ்ந்தவாறே “வருக வருக கணக்கு மேதையே வருக” என்று வரவேற்றது.

“என்ன அண்ணா நீங்கள் கூட கேலி செய்கிறீர்கள்” என்று யானையிடம் கோபித்துக் கொண்ட எலிக்கண்ணன் தான் நடந்து வரும்போது யாரோ தன்னைப் பின்தொடர்ந்து வருவது போல இருப்பதை யானையாரிடம் சற்று பயத்துடன் கூறியது.

“சரி சரி யாரென்று பார்ப்போம். இப்பொழுது சற்று ஓய்வெடு” என்று கூறியவாறே எலிக்கண்ணன் தின்பதற்கு உணவினை அளித்தது. அதை தின்று முடித்ததும் கூட எலிக்கண்ணனுக்கு பயம் போகவில்லை. அது வாசலைப் பார்த்து பார்த்து பயந்தது.

“ரொம்ப பயப்படுற மாதிரி தெரியுது. சரி பயப்படாதே. நானே உன்னை உன் வீட்டுல கொண்டு போயி விட்டுறேன்” என்று தைரியம் அளித்த யானை எலிக்கண்ணனை தனது முதுகில் ஏற்றிக் கொண்டு எலிக்கண்ணனின் வீடு நோக்கி மெதுவாக நகர்ந்தது. அதன் வளை வந்ததும் இறக்கிவிட்டு எலிக்கண்ணனுக்கு விடை கொடுத்து விட்டு தனது வீடு நோக்கி திரும்பியது.

மறுநாள் மாலை பொழுது வந்ததும் அனைத்து விலங்குகளும் வழக்கம் போல வந்து அமர்ந்திருந்தன. மந்திரியார் வந்து தனது ஆசனத்தில் அமர்ந்து வந்திருந்த அனைவரையும் சுற்றும் முற்றும் பார்த்தார்.

“என்ன சீனியப்பா உன் நண்பன் சின்ன காளியைக் காணவில்லை?” என்று கேட்டது மந்திரி நரி.

“நான் என்னத்தக் கண்டேன். எங்காவது வெளியூர் போயிருப்பான்” என்று முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டது சின்னநரி சீனியப்பன்.

“சரி சரி நேற்றைய ஒன்பதாவது புதிருக்கான விடையை தெரிந்தவர்கள் கூறுங்கள்” என்று கூறிவிட்டு அமர்ந்தது மந்திரியான நரி.

“என்ன யானையாரே நீர் குளிக்கும் தடாகத்தை பற்றிய புதிரல்லவா. விடையை உடனே கூறிவிடும்.” என்றது அணில் அன்னாசாமி.

“இல்லையில்லை புதிர் வண்டுகளைப் பற்றியது தானே. அதனால் சில்வண்டு சீனிவாசன் பதில் சொல்லுவான்” என்று பதில் கூறியது யானை.

“எனக்கு பூவுக்குள்ள இருக்கிற தேனைப் பத்தி கேட்டா தெரியும். பூவைப் பத்தி கேட்டா என்னத்தக் கண்டேன்” என்று சில்வண்டு சீனிவாசன் பதில்கூற இடை மறித்த மந்திரியார் நரி “சரி விடையைத் தெரிந்தவர்கள் விடையைக் கூறினால் அனைவரும் சுண்டல் தின்னலாம்” என்றது.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த எலிக்கண்ணன் பதில் கூற எழுந்திருப்பதைக் கண்ட சின்னநரி சீனியப்பன் வேறு புறம் திரும்பிக் கொண்டது.

எலிக்கண்ணன் எழுந்து பதில் கூறியது. “வேறு யாராவது தெரிந்தவர்கள் உள்ளார்களா?” மந்திரியார் மீண்டும் கேட்டார். யாரும் எழுந்திரிக்காமல் இருப்பதைக் கண்டபின் “அனைவரும் சுண்டல் தின்று முடித்தபின் வாருங்கள்” என்று கூறியபடி அனைவருக்கும் சுண்டல் தருமாறு சேவகன் காங்கேயன் கழுதைக்கு சைகையின் மூலம் கட்டளையிட்டது.

சூடான சுண்டல்களை கொறித்தும் தின்றும் வந்த மிருகங்கள் மீண்டும் தமது இடத்தில் வந்து அமர்ந்தன.

“வழக்கம் போல இன்றும் எலிக்கண்ணன் கூறிய பதில் மிகவும் சரியானது தான். வேறு யாரும் அதனுடன் கோட்டியிட்டு வெற்றி பெற முயற்சிக்கவில்லை என்பது மிகவும் வருத்தமான ஒன்று” என்று கூறிவிட்டு “மன்னரின் ஆசை நீங்கள் அனைவருமே இதில் பங்கு கொண்டு பரிசுகள் பெற வேண்டும் என்று தான்.

ஆனால் யாருமே இதில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது. மன்னர் சிங்கமகாராசா அறிந்தாலும் கவலைப்படுவார்” என்று கூறியது மந்திரியான நரி.

ஒன்பதாவது புதிரையும் எலிக்கண்ணனே கூறியது. எனவே அதற்கான விடையை கூறிவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று வெட்டுக்கிளி அறிவித்தது.

எலிக்கண்ணன் தொடர்ந்து “ஐயா ஒன்பதாவது புதிர் குளத்திலுள்ள வண்டுகள் மலர்களில் அமர்வது பற்றியது. அதன்படி ஒன்று ஒன்றாக அமர்ந்தால் 1 வண்டு மீதம் எனவும், இரண்டு இரண்டாக அமர்ந்தால் 1 மலர் மீதம் எனவும் அறிந்தேன்.

அதன்படி வண்டுகள் 4 எனவும், மலர்கள் மூன்று எனவும் கொண்டால் வண்டு ஒன்று ஒன்றாக அமர்ந்தால் 1 வண்டு மீதமாகவும், வண்டுகள் இரண்டு இரண்டாக அமர்ந்தால் 1 மலர் மீதமாகவும் வந்தது.

எனவே மலர்கள் மூன்று, வண்டுகள் நான்கு என்று விடையைக் கூறினேன்” என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கியது எலிக்கண்ணன்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)