பெரிய மனசு – எம்.மனோஜ் குமார்

தொழிலதிபர் யோகேஷும் அவரது நண்பர் சிவராஜனும், காரில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் டோல் கேட் ஒன்றில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அங்கு ஒரு ஏழை பெண்மணி காட்டன் பட்ஸ் விற்றுக் கொண்டிருந்தாள்.

“அண்ணா! அண்ணா! காட்டன் பட்ஸ் வாங்கிகோங்கண்ணா! நாங்க ரொம்ப ஏழைங்க. கஷ்டப்படுறவங்கணா! இதுல தான் எங்களுக்கு வருமானமே வருது”

தொழிலதிபர் யோகேஷ் அவள் கையில் இருந்த அனைத்து காட்டன் பட்ஸ்களையும் வாங்கினார். அந்த பெண்மணிக்கு முகம் முழுக்க மகிழ்ச்சி வந்திறங்கியது.

“ஏம்பா! இந்த மாதிரி குவாலிட்டி இல்லாத பட்ஸ வாங்குறியே, அதுக்கு பதிலா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல குவாலிட்டி பட்ஸ் குறைவா வாங்கி இருக்கலாமே! விலை குறைவுன்னு எதுக்கு தரம் இல்லாத பட்ஸ் வாங்குறே!” சிவராமன் எரிச்சலாய் கேட்டார். யோகேஷ் புன்னகைத்தபடியே காரை ஓட்டினார்.

அடுத்த டோல் கேட்டில் கார் நிற்க, பிச்சை கேட்கும் பெண்மணி ஒருத்தி கார் கண்ணாடியைத் தட்டி பிச்சை கேட்டாள்.

யோகேஷ் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு “உடம்புல தெம்பு இருக்குறப்போ பிச்சை எடுக்கிறியே, ஏதாச்சும் பிசினஸ் பண்ணி பிழைக்கலாம் இல்ல!” என்று சொன்னார்.

“ஐயா! நான் முதலுக்கு எங்கய்யா போவேன்?” என்று கேட்டாள் அவள்.

சட்டென்று யோகேஷ் முந்தின டோல் கேட்டில் வாங்கிக் கொண்ட மொத்த காட்டன் பட்ஸையும் தூக்கி அவளிடம் கொடுத்துவிட்டு “இதை வித்து, மறுபடியும் காட்டன் பட்ஸ் வாங்கி வித்து பிழைத்துக் கொள். ஆனால் பிச்சை மட்டும் எடுக்காதே!” சொல்லிவிட்டு காரை ஓட்டினார் யோகேஷ்.

“எனக்கு பிச்சை எடுக்கிறது பிடிக்காது. அதனால யார் பிச்சை எடுத்தாலும், அவங்களுக்கு இது மாதிரி ஹெல்ப் பண்றேன். இது என் அம்மா எனக்கு சொல்லித் தந்த விஷயம்.

காரணம், ஒரு காலத்தில அவங்க பிச்சை எடுத்தப்போ இப்படித்தான் ஒருத்தர் பொருள் வாங்கி கொடுத்துட்டு பொழைச்சுக்கோன்னு சொல்லிட்டு போயிட்டாரு. இப்ப நான் தொழிலதிபரா மாறுனதுக்கு அப்புறம், அம்மா சொன்னது மாதிரி பலருக்கு உதவுறேன்” என்றார் யோகேஷ்.

யோகேஷ் கூறியதைக் கேட்டதும் சிவராமன் அவரது பெரிய மனசு பார்த்து மனதிற்குள் பெருமிதம் கொண்டார்.

எம்.மனோஜ் குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.