பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் பதின்மூன்றாவது பாடல் ஆகும்.

சிவந்த மேனியில் வெண்ணீறு அணிந்த இறைவரான சிவபெருமானின் மீது வாதவூரடிகள் எனப்படும் மாணிக்கவாசகரால் திருவெம்பாவை பாடப்பட்டது.

கி.பி.9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற திருவெம்பாவைப் பாடல் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது பாடி வழிப்படப் பெறுகிறது.

பாவை நோன்பு நோற்கும் பெண்கள் அம்மையையும், அப்பனையையும் ஒத்துள்ள குளத்தில் உடல் மற்றும் உள்ள அழுக்குகளை நீக்கி மகிழ்ந்து நீராடுவோம் என கூறுவதாக திருவெம்பாவையின் பதின்மூன்றாவது பாடல் கூறுகிறது.

“ஆணவமான மனத்தின் அழுக்கினை அம்மையும், அப்பனும் போக்க வல்லவர்கள். அவர்களை ஒத்துள்ள இக்குளத்தில் நீராடி மன மற்றும் உடல் அழுக்குகளைப் போக்கி மகிழ்வோம்” என்று பாவை நோன்பிருக்கும் பெண்கள் கூறுகின்றனர்.

நீர்நிலைகள் நம் உடலின் புறஅழுக்குகளை நீக்க வல்லவை. நம் அகமாகிய மனத்தின் குற்றங்களாகிய அழுக்குகள் நீக்க வேண்டுமாயின் இறைவனை சரணடைய வேண்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

இனி திருவெம்பாவை பதின்மூன்றாவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த

பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து நம்

சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

 

விளக்கம்

பாவை நோன்பிருக்கும் பெண்கள் நோன்பிற்காக நீராடும் பொருட்டு குளத்திற்குச் செல்கின்றனர்; குளத்தினைக் காண்கின்றனர்.

அக்குளத்தில் பச்சை நிறம் கொண்ட கருங்குவளையானது கருநீல நிறமுடைய கருங்குவளை மலர்களை நிறையக் கொண்டுள்ளது.  மேலும் அக்குளத்தில் செந்தாமரை மலர்களும் நிறைய மலர்ந்துள்ளன.

நீர்ப்பறவைகள் கூட்டமாக ஒலி எழுப்புகின்றன. பாம்புகள் பின்னித் திரிகின்றன. மக்களும் தங்களின் அழுக்குகளைப் போக்கும் பொருட்டு குளத்தில் நிறைந்துள்ளனர்.

உடனே அவர்களுக்கு உமையம்மையும் சிவபிரானும் நினைவிற்கு வருகின்றனர்.

“குளத்தில் பூத்துள்ள கருங்குவளை மலர்கள் அன்னையின் நிறத்தையும், செந்தாமரைப் பூக்கள் சிவபிரானின் நிறத்தையும் ஒத்துள்ளன.

மேலும் அங்கிருக்கும் பறவையினங்கள் (குருகு என்பதற்கு பறவை, வளையல் என இருவேறு பொருட்கள் உள்ளன.) அன்னையின் கைகளில் இருக்கும் வளையல்களையும், பின்னித் திரியும் பாம்புகள் பெருமானின் உடலோடு பின்னியிருக்கும் பாம்புகளையும் ஒத்துள்ளன.

அம்மையும் அப்பனும் இணைந்து இருப்பது போன்று குளத்தில் உள்ள பொருட்கள் காட்சி தருகின்றன.

மேலும் குளமானது புறஅழுக்குகளை தண்ணீரால் நீக்குகிறது. இறைவர்களான அம்மையும் அப்பனும் தங்களுடைய கருணையினால் அக‌ அழுக்குகளை நீக்குகின்றனர்.

நமது கைகளில் அணிந்துள்ள வளையல்களும், காலில் அணிந்துள்ள சிலம்புகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒலிகளை எழுப்ப, மகிழ்ச்சியால் நெஞ்சானது விம்மிப் புடைக்க, குளத்தில் உள்ள நீரானது மேலே எழுமாறு இத்தாமரைக் குளத்தில் மகிழ்ந்து நீராடுவோம்.” என்று கூறுகின்றனர்.

நம்முடைய புறஅழுக்கை குளத்து நீரானது அகற்றுவது போல மனத்தின் அழுக்கினை ஆவணமற்ற சரணாகதியால் இறைவன் அகற்றுவார் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.