பொய் முகம்! – எஸ்.மகேஷ்

நீள் முகமாய்
உருண்டையாய் சில நேரம்
நிறங்கள் தெரியும்
மாறி மாறி!

சிவந்த கண்கள்
கலைந்த தலை
எண்ணைய் வழிதலில்
தொடங்கி
முடி நரைத்துப்போன
வழுக்கைத் தலை வரை
தொடர்கிறது பிம்பம்!

உடல் பெருத்து
இளைத்து
எடை
கூடியதா இறங்கியதாவெனும்
ஆராய்ச்சிக்களம்!

மகிழ்ந்து சிரித்தல்
துக்க அழுகை
மற்றும்
கோபதாப முகங்களும்
தப்பவில்லை!

வெவ்வேறு இடங்களில்
வெவ்வேறு கோணங்களில்
அதே முகத்தை
ஏதேதோ முகம்போல்
தோற்றுவிக்கிறது!

உற்றுப் பார்த்து
உடைகளோடு தன்னையும்
ரசித்துக்கொள்ளுதல்
தினம் தினம்
தலையாய கடமையாகிறது!

பலமுறை பார்த்து
பரவசப்பட்டாலும்
வெளி அழகின்
ஒப்பனை லயிப்பில்
நிற்க
நிஜமான
உள் முகம் காட்டாது
கண்ணாடி!

எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com

எஸ்.மகேஷ் அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: