பொறுமை வெற்றி தரும்

பொறுமை என்பது வெற்றியைப் பெற்றுத்தரும் முக்கியமான குணம் ஆகும். ஒருவருக்கு எல்லாத் திறமைகளும் இருந்து, பொறுமை இல்லாவிட்டால் அவர் வெற்றி பெறுவது கடினம்.

நம்முடைய எல்லா முயற்சிகளுக்கும் உடனே பலன் கிடைத்து விடுவதில்லை. பலன் கிடைக்கும் வரைக் காத்திருப்பதே பொறுமை ஆகும்.

நாம் விதையை விதைத்த உடனே நமக்குப் பழங்கள் கிடைத்து விடுவதில்லை. விதை முளைத்து மரமாகிப் பூத்துக் குலுங்கிப் பின்தான் பழங்கள் தருகின்றன.

ஒரு விதை மரமாகிப் பயன் கொடுக்கப் பல மாதங்கள் ஆகலாம். ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு காத்திருப்பவனுக்குத்தான் கனிகள் கிடைக்கும்.

 

நம்முடைய இலக்கு நோக்கிய பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்ததும், வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகக் கூடாது. பொறுமையுடன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கைப் பயணம் என்பது 100 கி.மீ வேகத்தில் செல்லும் நெடுஞ்சாலைப் பயணமாக மட்டும் இருக்காது.
சில சமயங்களில் மேடுபள்ளங்கள் நிறைந்த, 10 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லக் கூடிய பாதையாகவும் இருக்கலாம்.

நமது வாகனம் 100 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கலாம். நாமும் திறமையான வாகன ஓட்டியாக இருக்கலாம். ஆனாலும் பாதை நம்மை 10 கி.மீ வேகத்தைவிடக் கூட்டமுடியாமல் செய்து விடும். அப்போது நமக்குத் தேவை பொறுமை.

இந்தப் பாதையை நாம் மெதுவாகதான் கடந்தாக வேண்டும் என்ற பொறுமையும், சற்றுத் தூரத்தில் இந்தப் பாதை நெடுஞ்சாலையுடன் சேர்ந்துவிடும் என்ற புரிதலும்தான் நம்மை வெற்றியாளராக மாற்றும்.

 

பாதை கடினமானதாக இருக்கின்றது என்று பயணத்தில் இருந்து விலகுபவர்கள், இலக்கை அடைய முடியாது.

நிறையப் பேருக்குத் தம்முடைய முயற்சியைக் கைவிடும்போது, வெற்றி இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பது தெரியாமல் போய்விடுகின்றது.

பொறுமை இல்லாத காரணத்தால் நிறையப்பேர், இலக்கிற்கு மிக அருகில் வந்தும் இலக்கை அடையாமல் போகிறோம்.

ஓட்டப்பந்தயத்தில் இலக்கிற்கு அருகில் இருக்கும்போதுதான், நமக்கு மிகவும் களைப்பாகவும், வலிப்பதுமாகவும் நமது ஓட்டம் இருக்கும்.

நம் மனதை இலக்கின்மீது வைக்க வேண்டும். வலியின் மீதுஅல்ல.

வாழ்க்கைப் பயணம் என்பது நேர்கோட்டுப் பாதையில் செல்லும் பயணம் அல்ல. அது நிறைய திருப்பங்கள் நிறைந்த பயணம்.

 

நாம் நீண்ட தூரம் பயணம் செய்து களைப்படைந்து இருக்கலாம். கூடவே நமது வெற்றி, மிகஅருகில் அடுத்த திருப்பத்தில் காத்திருக்கலாம்.

எனவே பொறுமையுடன் பயணம் செய்வோம்; வெற்றியை அடைந்தே தீருவோம்.

 

நம்முடைய முயற்சியில் மட்டுமல்ல; பிறருடன் பழகும்போதும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

நமது குடும்பம், நண்பர்கள் மற்றும் உடன் வேலை பார்ப்போர் என அனைவரிடமும், அவர்களது சிறுசிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் அவைகளைப் பொறுத்துக் கொண்டால், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ஐந்து விரல்களில் ஒன்றுகூட மற்றொன்றைப் போல் இருப்பதில்லை. மனிதர்களும் அப்படித்தான்; ஒவ்வொருவரும் ஒருவிதம். இதைப்புரிந்து கொண்டு, பொறுமையுடன் ஒவ்வொருவரையும் அணுகினால், அனைவரும் நம் வெற்றிக்குத் துணை புரிவார்கள்.

நம் மனதில் அமைதி, நம் செயல்களின் விளைவுகளைப் பொறுமையுடன் கண்காணித்தல், மற்றவர்களுடன் நிதானமாகப் பழகுதல் ஆகியவை நம்மிடமிருந்தால், வெற்றி நிச்சயம் நம்மைத் தேடி ஓடிவரும்.

வ.முனீஸ்வரன்

 

One Reply to “பொறுமை வெற்றி தரும்”

Comments are closed.