மனிதனைக் காக்கும் மகத்தான உப்பு

சோடியம் உப்பு

 

மனித உடலைக் காக்கும் மகத்தான பணியை சாதாரண உப்பு செய்கிறது. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி, உப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது.

உப்பில்லாத பண்டத்தை குப்பையிலே போட்டால், நாம் உண்பதற்கு என்ன செய்வது? உணவு உண்டால் தானே, உடலிற்கு ஆற்றல் கிடைக்கும்.

ஆரோக்கியம் தரும் இன்றியமையாத உணவையே, உண்ண முடியாத நிலைக்கு தள்ளும் தன்மை உப்பிற்கு உண்டு என்பதையே, இப்பழமொழி காட்டுகிறது அல்லவா?

எதுவாயினும், உணவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், உப்பிற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், எதற்கும் ஒரு அளவு உண்டு! இதன் அடிப்படையில் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கும் அளவு உண்டு. எனவே, அளவோடு உப்பு சேர்க்கப்பட்ட உணவே சிறந்தது.

சரி, உப்பிற்கான முக்கியத்துவத்திற்கு காரணம் என்ன? உப்பானது சுவைக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறதா? வாருங்கள், இகேள்விக்கான விடையை இக்கட்டுரையில் பார்போம்.

 

சமையலில் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பின் வேதியியல் வாய்பாடு ‘NaCl’ (சோடியம் குளோரைடு) ஆகும்.

கரிப்பு சுவை கொண்ட இந்நிறமற்ற (வெண்மை) உப்பு படிகம் நீரில் எளிதில் கரையும் இயல்பு உடையது.பொதுவாக, உணவில் சேர்க்கப்படும் இவ்வுப்பின் தேவை பற்றி இனி காண்போம்.

 

உடலில் உப்பின் சமநிலை

நமது உடலானது, எண்ணற்ற செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. சவ்வினால் சூழப்பட்டிருக்கும் ஒவ்வொரு செல்லும், மரபு பொருளான டி.என்.ஏ, செல் உறுப்புகள், வேதிபொருட்கள் (சோடியம் அயனிகள் முதலியன) மற்றும் நீர் முதலிய பகுதி பொருட்களை இயற்கையாகவே பெற்றுள்ளது.

செல்லின் சீரான செயல்பாட்டிற்கு உப்பு அவசியமானது. ஒருவேளை செல்லினுள், உப்பின் அளவு (தேவையை விட) அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ, செல்லிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

குறிப்பாக, (செல்லினுள்) சோடியம் அயனிகளின் குறைபாட்டால் நீரிழப்பு ஏற்பட்டு, இரத்த அழுத்தம் குறையும் அபாயம் உண்டு.

(செல்லினுள்) மிகமிக அதிகப்படியான உப்பினால், செல் வீக்கம் அடைந்து பின் அச்செல் வெடிக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே, உடலில் (செல்லினுள்) உப்பின் அளவு சரிவிகித்தில் இருப்பது அவசியம்.

 

இயற்கையாகவே, உடலில் உப்பு இருப்பதை நாம் அறிந்தோம். ஆனால், நமது உடலில் உப்பு இருப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இதற்கான விடையை தற்போது காணலாம்.

 

உடல் செயல்பட

உடல் செயல்பாட்டிற்கு உப்பானது உதவுகிறது. உப்பின் மின்கடத்தும் திறனே இதற்கு காரணம். வாருங்கள், இது பற்றி மேலும் காண்போம்.

உப்பு ஒரு மின்பகுளி ஆகும். அதாவது, உப்பை நீரில் கரைக்க, அது சோடியம் (நேர்மின்) அயனியாகவும், குளோரைடு (எதிர்மின்) அயனியாகவும் பிரிகை அடையும். இவ்வயனிகள் மின்சாரத்தை கடத்தும் இயல்பு உடையவை.

நமது உடலில் உள்ள உள் உறுப்புகள், பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மின்சமிங்ஞை மூலமாகவே தொடர்பு கொள்கின்றன.

இம்மின்சமிங்ஞைகளை உருவாக்க, சோடியம் அயனிகள் அத்தியாவசியமாக விளங்குகின்றன. எனவே தான், இயற்கையாகவே, உடலில் உப்பு இருக்கிறது. இயற்கை எதனையும் காரணமின்றி செய்வதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

 

உடலின் ஆரோக்கியத்திற்கு

உப்பானது உடல் செயல்பாட்டிற்கு உதவுவதோடு, உடலின் ஆரோக்கியத்தை காப்பதிலும் பங்கு கொள்கிறது.

குறிப்பாக, சத்து பொருட்களை உறிஞ்சி உடல் முழுவதும் கடத்துவதிலும், இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும், உடலின் திரவ நிலையை சீராக வைப்பதிலும், தசைகளின் சீரான இயக்கத்திற்கும் உப்பானது உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

போதுமான அளவு உப்பினால், சிறப்பான தூக்கம், ஆரோக்கியமான உடல் எடை, சீரான‌  ஹார்மோன் சமநிலையும் கிடைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

உணவின் சுவையை கூட்ட

உணவில் சேர்க்கப்படும் உப்பானது ‘கரிப்பு’ சுவையுடையது. எனவே உணவிற்கு உப்பானது, கரிப்பு சுவையை மட்டும் தான் தருகிறாதா? என்றால் இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கரிப்பு சுவையுடன், உணவின் சுவையை கூட்டும் தன்மை அது பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது உப்பானது ‘சுவை கூட்டியாக’ செயல்படுகிறது.

உதாரணமாக, வெறும் தர்பூசணி பழத்தை காட்டிலும், அதில் சிறிதளவு உப்பிட்டு சாப்பிடும் போது இனிப்பு சுவை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயத்தில், விரும்பத்தகாத சுவையை அது குறைப்பதாகவும், ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, கசப்பு அல்லது அதீத புளிப்பு சுவை கொண்ட பண்டத்துடன் உப்பினை சேர்க்கும் பொழுது, கசப்பு அல்லது புளிப்பு தன்மை குறைவதுடன், அப்பண்டத்தின் சுவை அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

சிறு வயதில், புளியுடன் உப்பினை சேர்த்து சாப்பிட்ட நினைவுகள், இக்கருத்தினை உறுதி செய்வதாக இருக்கிறது.

 

உணவு பதப்படுத்தியாக

உப்பு ஒரு சிறந்த உணவு பதப்படுத்தியாகும். அதாவது, உணவினை நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.

அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஊறுகாய், மோர் மிளகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் இதற்கு சிறந்த சான்று அல்லவா?

அதிலும், உப்பில் ஊற வைக்கப்பட்ட மாங்காய் நீண்ட நாள் கெடாமல் இருப்பதோடு அதன் சுவையும் கூடுவதை அறியாதவர்கள் உள்ளனரோ?

சரி, உப்பு எப்படி உணவை கெடாமல் பாதுக்கிறது? இதற்கான விளக்கத்தை விஞ்ஞானிகள் இவ்வாறு தருகின்றனர்.

சவ்வூடு பரவல் (செறிவை பொறுத்து நீரின் இயக்கம்) முறையில் உணவில் (நீரின் செறிவு அதிகம்) இருக்கும் நீரை உப்பு (நீரின் செறிவு குறைவு) உறிஞ்சி (நீரின் இயக்கம்) கொள்கிறது.

இதனால், உணவில் நீரின் அளவு குறைந்து, தீங்கு விளைவிக்கும் நுண்ணியிரிகள் வராமல் தடுக்கிறது. அதே சமயத்தில் அதிக அளவு உப்பு தன்மையிலும் நுண்ணியிரிகளால் வாழ முடியாது.

தீங்கற்ற தன்மை, விலை மலிவு உள்ளிட்ட காரணங்களால், தொன்று தொட்டு, உப்பானது பதப்படுத்தியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

மனித உடலைக் காக்கும் மகத்தான பணியைச் செய்யும் உப்பை இனி நீங்கள் சாதாரண உப்பு என்று சொல்ல மாட்டீர்கள்தானே.

 – முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் க‌னிம வேதியியல் துறை
கன்செப்ஷன் ப‌ல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com
கைபேசி: +91 9941633807