மக்காச்சோள இட்லி செய்வது எப்படி?

மக்காச்சோள இட்லி என்பது சத்துமிக்க ஆரோக்கியமான இட்லி ஆகும். இதனை நாட்டு மக்காச்சோளத்தில் தயார் செய்வதால் இதனுடைய சுவை மிகும்.

சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் நன்கு காய்ந்த மக்காச்சோளமே இட்லி தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

மக்காச்சோளத்தில் நார்ச்சத்து மிகுதி ஆதலால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து உண்ணலாம்.

அரிசியில் செய்யப்படும் இட்லிக்கு மாற்றாக இதனை தயார் செய்து உண்ணலாம்.

இனி சுவையான மக்காச்சோள இட்லி செய்யும்முறை பற்றிப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

காய்ந்த மக்காச் சோளம் – 400 கிராம் (ஒரு பங்கு)

இட்லி அரிசி – 400 கிராம் (ஒரு பங்கு)

உளுந்தம் பருப்பு – 200 கிராம் (அரை பங்கு)

வெந்தயம் – 2 ஸ்பூன்

கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை

காய்ந்த மக்காச்சோளத்தை முதலில் அலசி, அது முழுவதும் மூழ்குமாறு, சுமார் 12மணி நேரம் ஊற வைக்கவும்.

 

மக்காச்சோளம் ஊறும்போது
மக்காச்சோளம் ஊறும்போது

 

 

ஊறிய மக்காச்சோளம்
ஊறிய மக்காச்சோளம்

 

இட்லி அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் மூன்றையும் நன்கு அலசி சுமார் 3மணி நேரம் ஊற வைக்கவும்.

 

அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம்
அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம்

 

முதலில் மக்காச்சோளத்தை கிரைண்டரில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்ததும், அரிசி, உளுந்தும் பருப்பு, வெந்தய கலவையை போட்டு நைசாக இட்லி மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும்.

 

மாவினை அரைக்கும் போது
மாவினை அரைக்கும் போது

 

தேவையான உப்பினை, மாவினை தோண்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர், மாவில் சேர்த்து ஒருசேர அரைத்ததும் தோண்டவும்.

 

தோண்டிய மாவு
தோண்டிய மாவு

 

பின்னர் இம்மாவினை, ஐந்து முதல் ஆறுமணி நேரம் புளிக்க வைத்துக் கொள்ளவும்.

 

மாவு புளித்ததும்
மாவு புளித்ததும்

 

புளித்த மாவினை இட்லிப் பானையில் இட்லிகளாக ஊற்றி, அவித்து எடுக்கவும்.

 

மாவினை இட்லிகளாக ஊற்றியதும்
மாவினை இட்லிகளாக ஊற்றியதும்

 

மஞ்சள் நிறத்தில் சுவையான மக்காச்சோள இட்லி தயார்.

 

சுவையான மக்காச்சோள இட்லி
சுவையான மக்காச்சோள இட்லி

 

இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் உள்ளிட்டவைகள் பொருத்தமாக இருக்கும். இதனை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்பர்.

குறிப்பு

மக்காச்சோளம் நனைந்ததை உறுதிப்படுத்த, அதனுடைய மேல்தோலை நகத்தால் அழுத்தினால் எளிதாக இருக்கும்; அல்லது வாயில் போட்டு மெல்லும் போது எளிதாக மெல்ல வரும்.

அரிசி மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை ஊற வைத்த தண்ணீரைப் பயன்படுத்தி, மாவினை அரைக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.