மண்வளம் காக்கத் தேவையான சட்டம் ஒன்றை அரசு உடனே இயற்ற வேண்டும்.
ஓர் எளிய சட்டத்தின் மூலம் நம்மால் மண் வளத்தைக் காக்க முடியும். நாமும் நமது அரசும் மனது வைத்தால் நம்மால் மண்ணைக் காக்க முடியும்.
இன்று மண்வளத்தைப் பற்றி அதிகம் பேசுகின்றோம். இவற்றை இரண்டு வகையாகப் பார்க்கவேண்டும். ஒன்று மண் தன் வளத்தை இழப்பது. மற்றது மண்ணையே இழப்பது.
மண் தன் வளத்தை இழப்பது
இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை கட்டுப்பாடின்றி உபயோகிப்பதாலும், இயற்கை உரங்களை இடாமல் இருப்பதாலும், மண் அரிப்புகளாலும் மண் வளத்தை இழக்கச் செய்கின்றோம்.
மரங்களை வரைமுறையின்றி அழிப்பதால், தழைகள் கொட்டி மக்கி உரமாவதைத் தடுப்பதால் மண்வளத்தை இழக்கின்றோம்.
ஏரிகளை அழித்ததால் வண்டல் மண்ணை இழக்கின்றோம். அவற்றில் தேங்கிய நீரை பாய்ச்சி பயிருக்கு வேண்டிய சத்தை வழங்காமலும், அதன் அருமையை போற்றாமலும் உள்ளோம்.
மண் தன் வளத்தை ஏன் இழக்கின்றது எனப் பார்த்தோம். இனி மண்ணையே இழக்கக் காரணம் என்ன என்றும் அதை எப்படித் தவிர்ப்பது என்றும் பார்ப்போம்.
உயரத்தைக் கூட்டாமல் சாலை அமைக்கும் சட்டம்
அரசாங்கம் சாலைகளை அமைக்கும் போது அதன் உயரத்தைக் கூட்டாமல் சாலை அமைக்கும் முறை இருந்தால், வீடு கட்டுவோர் வீட்டு மனையை மேடாக்க மாட்டார்கள். மேடாக்க மண் எங்கு கிடைக்கும் என்று தேடும் நிலை ஏற்படாது.

ஆகவே அரசாங்கம் சாலை அமைப்பதை மேடாக்காமல் அமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதனால் வீடு கட்டுவோர்க்கு பொருளாதார இழப்பு மிஞ்சும். நிலத்தின் சமன்பாடு மாறாதிருக்கும்.
அமெரிக்க நாட்டில் நிலத்தை இருக்கும் நிலையில்தான் வீடுகட்ட உபயோகிக்க வேண்டும். இது அங்கு சட்டமாக உள்ளது.
நிலத்தை மேடாக்குவதோ பள்ளமாக்குவதோ செய்தல் கூடாது. அங்கு சாலைகள் அடிக்கடி போடப்பட்டு மேடாக்கப்படுவதில்லை.
இப்படி நாமும் செய்தால் பொருளாதாரம் மேம்படும். சாலை மேடானால் வீடு பள்ளமாகும்.
பள்ளமானால் தண்ணீர் உட்புகும். அதற்கு நிவாரணம் தேட வேண்டும். இல்லையேல் மேடாக்கி புது வீடு கட்டவேண்டும்.
மேடாக்க மண்ணைத் தேடிக் கொண்டு வந்து நிரப்பவேண்டும். இதனால் ஏரிகள் கெடும். கேட்பாரில்லையானால் தனியார் நிலங்களும் கெடும்.
ஆறுகள் பள்ளமாகும். கடல் நீர் உட்புகும். ஏரிகளின் தன்மை மாறி வண்டல் மண் இல்லாமல் நீரை தேக்கி வைக்கும் நிலை இழக்கும். நீரின்றி ஏரிகள் வறண்டு விடும்.
இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு சாலைகள் இருக்கும் உயரம் மாறாமல் போட வேண்டும்.
இவ்வொரு சட்டத்தால், ஏரிகள், ஆறுகள், குட்டைகள், தனியார் நிலங்கள் என அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்; மணல் கொள்ளை இருக்காது.
மேலே கூறப்பட்ட சட்டத்தைத் தவிர்த்தால் எவ்வகையிலும் மண்வளத்தைக் காப்பாற்ற முடியாது. எந்த சட்டமும் பயனளிக்காது.
விவசாயத்தில் இரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்பை பேசினால் மட்டும் பயனில்லை. மண்ணே இல்லாமல் போகும் நிலையை எண்ணிப் பாருங்கள். வருங்கால சமுதாயம் என்னவாகும் சிந்தியுங்கள்.
உதாரணமாக என் சிறுவயதில் தண்ணீர் பணம் கொடுத்து வாங்கும் நிலை இல்லை. இன்றைக்கு தண்ணீர் பணம் கொடுத்து, தேடி வாங்கும் நிலைக்கு வந்து விட்டோம்.
இதே நிலை இருந்து விட்டால் மண்ணைக்கூட அருங்காட்சிக் கூடங்களில் வைத்து விளக்கும் நிலை வந்துவிடும். அரசாங்கம் சாலை அமைக்கும் விதிமுறைகளில் மாற்றத்தை உருவாக்காமல் இருந்தால் பெரும் சிக்கலை எதிர்கொள்வோம்.
சாலைகளை மேடாக்குவதன் மூலம் பெரும் மலைகளை இழக்கின்றோம். எத்தனையோ குன்றுகளைக் காணாமல் செய்துவிட்டோம். இந்நிலை தொடர்ந்தால் பூமியின் சமன்பாடு கெட்டுவிடும்.
இயற்கை நமக்களித்தக் கொடைகளை கொள்ளையடித்தவர்களாவோம். எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்கள் நம்மை அச்சுறுத்தும்.
காற்றைத் தடுத்து மழை கொடுக்கும் நிலை பிறழும். ஆகவே காடு, மலை, ஏரிகள், குட்டைக் குளங்கள், ஆறுகள் என யாவற்றையும் காக்கவேண்டும் என்றால் சாலைகள் போடும் விதிகளை மாற்றினால் மட்டும் எண்பது சதவீதம் சரியாகும்.
வண்டல் மண், சரளை மண், சவுடு மண், பிஞ்சிக்கட்டு மண், களிப்பு மண், உவர்மண், செம்மண், மணற்பாங்காண மண், தனி மண் என இருந்த மண் வகைகளை எத்தனை பேர் அறிந்து பார்த்திருப்பார்கள்.
அக்காலத்தில் துணிகள் துவைக்க ஒருவகை மண்ணை (உவர் மண்) உபயோகித்தார்கள். இன்றைக்கு இரசாயனப் பொருட்களை உபயோகிக்கின்றார்கள். காரணம் அம்மண்ணே கிடைக்காமல் போய்விட்டது.
மண் வளத்தை நாம் அதிகமாக அழித்து விட்டோம். மண்வளம் காக்கத் தேவையான சட்டம் இன்றைய அவசரத் தேவை.
மேலே குறிப்பிட்ட கருத்தை அரசாங்கத்திற்கு உணர்த்தி ஏதோ மீதி இருப்பதையாவது பாதுகாப்போம்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!