யாரோ முக்கிய பிரமுகர் வருவதால், அன்று ஊரே திருவிழா கோலம் கொண்டிருந்தது.
ஆங்காங்கே கரை வேட்டி கட்டிய தொண்டர்களும், மகளிரணி குழுக்களும்… என்று கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. வழிநெடுகிலும் கொடிகளும் பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன.
ஒருபுறத்தில் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மறுபுறத்தில் மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அந்த நேரத்தில் எங்கோ ஒரு சிறு வியாபாரியிடம் பேரம் பேசி ஆயிரம் மரக்கன்றுகள் வாங்கப்பட்டு வண்டியில் கொண்டு வரப்பட்டன.
காலை 10 மணிக்கு தலைவர் வருவதாக அறிவிக்கப்பட்டு மூன்று மணிநேரம் ஆகியும் இன்னும் வந்தபாடில்லை.
இந்நிலையில் ஊரில் உள்ள டீ கடைகள் அனைத்திலும் வடை, சம்சா, பஜ்ஜி, போண்டா என்று அனைத்தும் தீர்ந்து விட்டன.
பசியிலும் கால் கடுக்க நின்று கொண்டிருந்த தொண்டர் கூட்டம் மேடை பக்கம் திரும்ப, மேடையில் ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர்.
அப்போது பலத்த ஓசை எழும்ப காரில் வந்து இறங்கினார் மாவட்ட நிர்வாகி. கூடவே கார்களில் வந்து இறங்கின தொண்டர் படைகள். கோஷமிட்டனர் அடித்தட்டு தொண்டர்கள்.
தொண்டர்களுக்கு எல்லாம் கையசைத்துவிட்டு பலத்த பாதுகாப்புடன் மேடையேறினார் தலைவர். அமைதியானது கூட்டம்.
தலைவர் ஒரு பத்து நிமிடத்தில் பேசி முடித்துவிட்டு கீழே இறங்கி சாலையோரத்தில் பள்ளம் பறித்து இடுப்பளவு உள்ள ஜாதி மரக்கன்று ஒன்றை நடுவது போல் ஒரு செல்பி எடுத்துக் கொண்டிருக்கும்போது, மறுகரையில் ஒரு காரில் இருந்து பெட்டி கைமாறியது ரகசியமாக.
தலைவர் காரில் ஏறி அமர, கார் புறப்பட்டு சென்றது. கார் சென்ற திசையை நோக்கியவாறு நின்று கொண்டிருந்தது மரக்கன்று …
திட்டச்சேரி மாஸ்டர் பாபு
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!