மறக்க முடியாத உதவி ஒரு சிறுகதை.
சிவகிரியிலிருந்து இராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு செல்வதற்காக காலை 8.00 மணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தான் குமணன்.
அன்றைக்கு வழக்கத்தைவிட தாமதமாக கிளம்பியதால் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.
அவன் தேசிய நெடுஞ்சாலை 208-ல் சென்று கொண்டிருந்தபோது, இடையில் கைலியை அணிந்து கலைந்த கேசத்துடன், ஒரு வாளியைக் கையில் வைத்துக் கொண்டு, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையை நீட்டினார்.
‘நானே இன்னைக்கு லேட்டா போய்கிட்டு இருக்கேன். இவர் வேறயா?’ எண்ணியபடி பைக்கை நிறுத்தினான்.
“ஐயா, சின்ன உதவி. நீங்க போற வழியில இருக்கற பெட்ரோல் பல்க்ல இறக்கி விடுங்க.” என்றார். எதிரே டீசல் இல்லாமல் நின்று போயிருந்த லாரியைக் காட்டினார்.
வழிமறித்த ஆளின் முகம் குமணனின் மனத்தை இளக்கியது.
வாளியிலா டீசல் வாங்கப் போறார் எண்ணியவாறே “நான் இப்ப போற வழியில 5 கிலோ மீட்டர் தூரத்தலதான் பல்க் இருக்கு. வந்த வழியிலதான் 500 மீட்டர்ல பல்க் இருக்கு. சரி ஏறுங்க” என்றான்.
அந்த நபர் பதில் ஏதும் கூறாமல் பைக்கில் அமர்ந்தார். குமணன் 500மீட்டர் தூரத்தில் இருந்த பல்க்கிற்காக, வண்டியைத் திருப்பி வந்த வழியிலே செல்லத் தொடங்கினான்.
அவரிடம் “வாளியில் ஏன் டீசல் வாங்குகிறீர்கள்?” என்று கேட்டான்.
உடனே அவர் “ஐயா, நான் நேற்று சென்னையில் இருந்து லாரில லோடு ஏற்றிக் கொண்டு தென்காசிக்கு கிளம்புனேன். மேல்மருவத்தூர் பக்கத்துல லாரியோட பின்வீல் இரட்டை டயர்ல ஒண்ணு வெடிச்சிடுச்சு. அனுசரிச்சு லாரியை ஓட்டிட்டு வந்தேன்.
காலை 4.00 மணிக்கு இராஜபாளையத்திற்கு பக்கத்துல வரப்ப டயர் பஞ்சர் ஆயிடுச்சு. விடியங்காலம்வரை காத்திருந்து டயர பஞ்சர் பாத்திட்டு கிளம்புனேன்.
இராஜபாளையம் தாண்டினதும் டீசல் இல்லாம வண்டி நின்னுடுச்சு. அதான் டீசல் வாங்க வாளிய எடுத்திட்டு லிப்டுக்காக காத்திருந்தேன்.
லாரிக்கு ரொம்பநாள் கழிச்சு நேத்துதான் ஆர்டர் கிடச்சுச்சு. எங்க முதலாளியும் கஷ்டப்படுறார். 500ரூபா வைச்சுருக்கேன். அதுக்கு டீசல் வாங்கி ஊத்தி எப்படியாவது வண்டிய தென்காசிக்கு கொண்டு போய்றனும். கடைக்காரங்க வேற லோடுக்காக போன் போட்டுகிட்டே இருக்காங்க.” என்றார்.
அதற்குள் பல்க் வரவே அவர் இறங்கிச் சென்று வாளியில் டீசல் வாங்கி வந்தார். மிகவும் கவனமாக அவரை ஏற்றிக் கொண்டு மெதுவாக வண்டி ஓட்டியவாறே லாரி நின்றிருந்த இடத்திற்கு சென்றான் குமணன்.
அவரின் கதை குமணனை மிகவும் வருத்தியது. குமணன் அவரிடம் “நீங்க ஏதாவது சாப்டீங்களா?. நான் வேணுனா உங்களுக்கு சாப்பிட 100ரூபா கொடுக்கேன்.” என்றான்.
“ஐயா, அதெல்லாம் வேணாம். எங்கிட்ட காலையில சாப்பிட காசு இருக்கு. லோட கொண்டு போய் இறக்கினா முதலாளிக்கு காசு வந்துரும். அவர் என்னோட சம்பளத்தக் கொடுத்திருவாரு. ரெண்டு வாரமா நான் வீட்டுக்குப் போகல; என் பொண்டாட்டி என் சம்பளத்த எதிர்பார்த்து கடன அடைக்கனும்னு இருக்கா” என்றார்.
மேலும் “ஐயா, நான் எப்படி டீசல் வாங்கி வந்து ஊத்தி வண்டி எடுக்கப் போறேன் நினைச்சேன். அடுத்தவர்களுக்கு கஷ்டம் என்கின்ற போது உதவுவதற்கு ஆட்கள் இருக்கின்றார்கள் என நினைக்கும்போது மகிழ்ச்சி. நீங்கள் செய்த உதவி மறக்க முடியாத உதவி என்றார்.
அலுவலகத்திற்கு லேட்டாய்ப் போய் திட்டு வாங்குவதை நினைத்தாலும், இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்க்கு உதவியதற்காக குமணனின் மனம் நிறைந்திருந்தது.
மறுமொழி இடவும்