அனுமதி கேட்கவுமில்லை அனுமதி கொடுக்கவுமில்லை
ஆனாலும் அத்துமீறி மண்மீது நீ பதிக்கும் முத்தம்…!
நீ பதித்த முத்தத்தின் கிளர்ச்சியோ
மனம் மகிழும் இந்த மண்ணின் மணம்..!
வருணனின் இசைவால் தான் உந்தன்
வருகை என்பது ஓர் ஐதீகம்..
ஆனால் நீயோ மதம் பார்த்தோ மாதம்
பார்த்தோ பெய்வதில்லை என்பதே நிதர்சனம்.. !
சிறுதுளி பெருவெள்ளம் எனும்
சேமிப்பின் ஆணிவேரே நீதான்..!
ஆனால் உன்னை சேமிக்கத்தான்
இங்குள்ளவர்களுக்கு வக்குமில்லை வழியுமில்லை..!
இதமாய் பொழிந்தால்
இயற்கையை காக்கும் அரணாகிறாய்..!
சற்றே கனமாய் பொழிந்தால்
இயற்கையையே அழிக்கும் அரக்கனாகிறாய்..!
உந்தன் சாரல்பட்டு சிலிர்க்கும் மேனிக்கு மட்டுமே
தெரியும் உந்தன் தண்மையின் தன்மை..!
சுரம் படர்ந்த பகுதிக்கு அமுத
சுரபியும் நீதான்..!
கரம் நீட்டி உனை இரசித்தால்
கரப்பிடியில் நழுவும் கவின் துளியும் நீதான்..!
உருவில்லா உன்னுருவின் வனப்பை நீ
இலைமீது வீற்றிருக்கும் தோரணையால் உணர்ந்தேன்..!
கடுங்காவலுக்கு கட்டுப்படா கார்முகிலின்
தவப்புதல்வியோ இந்த “மழைத்துளி”
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353
மறுமொழி இடவும்