மாங்காய் பச்சடி இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என ஆறு சுவைகளும் ஒருசேரக் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு.
தற்போது மாங்காய் மற்றும் வேப்பம்பூ சீசன் என்பதால் இதனை தயார் செய்து அடிக்கடி உண்ணலாம்.
தமிழ் புத்தாண்டு அன்று மாங்காய் பச்சடி செய்து உண்பது நம்முடைய வழக்கம்.
இதில் புளிப்பு-மாங்காய், இனிப்பு-மண்டை வெல்லம், உவர்ப்பு-உப்பு, துவர்ப்பு-மாந்தோல், கார்ப்பு-மிளகாய் வற்றல், கசப்பு-வேப்பம்பூ என அறுசுவை உணவுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இனி எளியமுறையில் சுவையான மாங்காய் பச்சடி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மாங்காய் – 1 எண்ணம் (சுமார் 200 கிராம் அளவுடையது)
மண்டை வெல்லம் (நன்கு தூளாக்கியது) – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 1&1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1 எண்ணம்
கறிவேப்பிலை – 1 கீற்று
வேப்பம் பூ – 1 டேபிள் ஸ்பூன்
மாங்காய் பச்சடி செய்முறை
முதலில் மாங்காயை நன்கு கழுவிக் கொள்ளவும்.
மாங்காயின் மேற்புற நுனியை மட்டும் வெட்டி நீக்கி விடவும்.
மாங்காயை சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வேப்பம் பூவினை அலசி உருவிக் கொள்ளவும்.
கருவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒடித்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடவும்.
அதில் நறுக்கிய மாங்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.
மாங்காய் தோல் நிறம் மாறும்வரை வதக்கிக் கொள்ளவும்.
அதில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கிளறி விடவும்.
அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் வற்றல் பொடி, உப்பு சேர்க்கவும். அடுப்பினை சிம்மிற்கும் சற்று கூடுதலாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தூளாக்கிய மண்டை வெல்லத்தைச் சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.
அதனை அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
5 நிமிடங்களில் மாங்காய் நன்கு வெந்துவிடும்.
தற்போது வடிகட்டிய மண்டை வெல்லக் கரைசலை மாங்காயில் சேர்த்துக் கிளறவும்.
இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் சர்க்கரைக் கரைசல் கெட்டியாகி பளபளப்பாகி விடும்.
இப்போது அடுப்பினை அணைத்து விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, வேப்பம்பூ சேர்த்து தாளித்து மாங்காயில் கொட்டிக் கிளறவும்.
சுவையான மாங்காய் பச்சடி தயார்.
இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம், இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு
வேப்பம்பூ காய்ந்த நிலையில் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கிப் பயன்படுத்தி பச்சடி தயார் செய்யலாம்.
மாங்காயை வேக வைக்கும்போது அடுப்பினை வேகமாக வைத்தால் அடிப் பிடிக்கும். எனவே சிம்மிற்கும் சற்று கூடுதலாகவே அடுப்பினை வைத்து அடிக்கடிக் கிளறி விடவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!