மானே நீ நென்னலை நாளை வந்து

மானே நீ நென்னலை நாளை வந்து

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை என்ற இப்பாடல் திருவெம்பாவையின் ஆறாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை சைவ சமய குரவரர்களில் ஒருவரான திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அருளை வழங்குகின்ற இறைவரான சிவபெருமானின் மீது பாடப்பட்டது.

திருவெம்பாவை மாணிக்கவாசகரால் திருவண்ணாமலையில் தங்கியிருந்தபோது பாடப்பட்டது. இப்பாடல் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டில் பாடப்படுகிறது.

பாவை நோன்பு வழிபாட்டிற்காக நாளை வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிய தோழி தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

தூங்கும் அத்தோழியை இறைவனின் புகழினைப் பாட அழைப்பதாக திருவெம்பாவையின் ஆறாம் பாடல் அமைந்துள்ளது.

‘நாளை வந்து நானே உங்களை பாவை நோன்பிற்காக எழுப்புவேன் என்று கூறி சொன்ன சொல்லைக் காக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாய்.

உலக உயிர்கள் உய்யும் பொருட்டு தானே கருணை கொண்டு ஆட்கொள்ளும் இறைவரான சிவபெருமானின் திருவடிகளை பாடிக் கொண்டிருக்கிறோம்.

நீயோ உள்ளம் உருகாமலும், ஏதும் பேசாமலும் தூங்கிக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய தூக்கத்தை விடுத்து உலக உயிர்களின் தலைவரான சிவபெருமானை பாட வருவாயாக.’ என்று கூட்டத்தினர் அழைக்கின்றனர்.

சொன்ன சொல்லைக் காக்க வேண்டும். எப்போதும் சொல்லை செயலாக்கும் உறுதி வேண்டும். நிலையற்ற மனத்தை விடுத்து இறைபரம்பொருளின் மீது முழுமனத்தையும் செலுத்த வேண்டும் என்பவற்றை இப்பாடல் உணர்த்துகிறது.

இனி திருவெம்பாவை ஆறாவது பாடலைக் காண்போம்.

 

திருவெம்பாவை பாடல் 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலவே பிறவே அறிவரியான்

தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

விளக்கம்

மறுநாள் எல்லோரையும் பாவை நோன்பிற்காக எழுப்புவேன் என்று தோழி ஒருத்தி பெண்களிடம் முதல்நாள் கூறுகிறாள். ஆனால் மறுநாள் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

அத்தோழியிடம் பெண்கள் “மான் போன்ற மருட்சியான வழிகளைக் கொண்டவளே, நாளைக்கு நானே உங்களை காலையில் பாவை நோன்பு வழிபாட்டிற்காக வந்து எழுப்புவேன் என்று நேற்று கூறினாய்.

ஆனால் இன்றோ நாங்கள் வந்து உன்னை எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.

நீ நேற்று கூறிய உறுதிமொழி எந்த திசையில் போயிற்று?

உன்னுடைய சொல்லில் இருந்து மாறுபட்டு நடந்து கொண்டதற்காக நீ வெட்கப்படவில்லை என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.  எல்லோருக்கும் பொழுது விடிந்து விட்டது. உனக்கு இன்னும் விடியவில்லை போலும்.

விண்ணுலகத்து தேவர்களுக்கும், நிலவுலகத்தில் வாழ்பவர்களுக்கும், பிறஉலகத்தில் உள்ளோர்களுக்கும் அரிதானவராக இறைவரான சிவபெருமான் விளங்குகின்றார்.

அத்தகைய அரிதான இறைவனாரின் கழல் அணிந்த திருவடிகள் எளியவர்களாகிய நம்மீது கருணை கொண்டு தாமாகவே வந்து நம்மைக் காத்து ஆட்கொண்டு அருள்வன.

அந்த திருவடிகளைப் பாடி வந்த எங்களிடம் நீ வாய் திறந்து பேசவில்லை. நாங்கள் இறைவனாரின் புகழினைப் பாடிய போதும் உன்னுடைய உடலும் உள்ளமும் உருகவில்லை. உனக்குத்தான் இந்நிலை பொருந்தும்.

உலக உயிர்கள் அனைத்திற்கும் தலைவராக விளங்கும் சிவபெருமானின் புகழினைப் பாடுவாயாக.

நாம் சொல்லுகின்ற சொல்லை எப்போதும் செயலாக்க வேண்டும். நிலையற்ற மனத்தினை விடுத்து நிலையாக விளங்குகின்ற இறைபரம்பொருளிடம் உள்ளத்தை எப்போதும் செலுத்த வேண்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.