மூலதனம் – சிறுகதை

அன்று வெள்ளிக் கிழமை. அந்த பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் என்றும், எப்படிப்பட்ட வேண்டுதல்களும் விரைவில் நிறைவேற்றி விடுவதாகவும் மக்கள் பேசிக் கொள்வதை தினம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கணேசன் குருக்கள்.

பூஜை காலம் முடிந்து இரவு ஒன்பது மணிக்குக் கோவிலை பூட்டி வீடு திரும்பும் முன் வழக்கம் போல் மானசீகமாய் வேண்டிக் கொண்டார்.

“பிள்ளையாரப்பா, எல்லோருடைய வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றுவதாய் என் காதுபட தினம் கேட்க வைக்கிறாய்!

என் வேண்டுதல் மட்டும் நிறைவேறாமலே இருப்பது உனக்குத் தெரியலையா?

வருஷக் கணக்கில் உனக்கு பூஜை செய்கிறேன். என்றைக்குக் கண் திறந்து பார்க்கப் போறீயோ?”

கணேச குருக்களின் ஏக்கப் பெருமூச்சுடன் கூடிய பிரார்த்தனைக்கும் காரணம் இருந்தது.

அவரது ஒரே பெண்ணான இருபத்தெட்டு வயது சங்கரிக்கு ஐந்தாறு வருடங்களாய் வரன் தேடியும் அமையவில்லை.

எவ்வளவோ பேர் வருகிறார்கள். கணேச குருக்களின் குடும்ப நிலையைக் கண்டதும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழித்து விடுகிறார்கள். நொந்து போயிருந்தார்.

வீடு வந்து சேர்ந்தவர் அங்கே தனக்காகத் தரகர் காத்திருப்பதைக் கண்டதும் குழம்பினார்.

“ஐயா, நேரங்கெட்ட நேரத்தில் வந்திருக்கேனேன்னு குழப்பமாயிருக்கா? சூப்பர் வரன் ஒண்ணு வந்திருக்கு. நீங்க செய்கிற பூஜைக்குப் பலன் கிடைச்சிடுச்சுங்கையா. கவலையை விடுங்க” தரகர் கூறியதைக் கேட்டவர் விவரம் கேட்க,

“பையன் வேதம் படிச்சிருக்காருங்க. உங்களைப் பற்றியும், உங்க குடும்ப நிலை பற்றியும் விளக்கமாய் சொல்லிட்டேன்.

உங்க பொண்ணு பட்டப் படிப்பு படிச்சிருக்கிறதையும், அழகு, ஆரோக்கியம் பற்றியும் வீட்டு வேலையையும்கூட சூப்பரா செய்வாங்கன்னும் விவரமாய் சொல்லிட்டேன்.

இதுவரை வந்து பார்த்து விட்டுப் போனவங்கெல்லாம் கேட்டுட்டுப் போன வரதட்சணை, சீர்செனத்தி, நல்ல வேலை, சொந்த வீடு போன்றவைகளை, அவர்கள் எதிர்பார்ப்புக்கு நீங்க செய்ய முடியாத நிலையில் இருப்பதையும் சொல்லிட்டேன்.” எனத் தரகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கணேச குருக்கள் இடைமறித்தார்.

“எல்லாம் சரிப்பா. இந்த பையன் வேறு என்ன கேட்பானோ? எந்த மூலதனமும் இல்லாமல் எப்படி பிசினஸ் பண்ண முடியாதோ, அது மாதிரி தான் கல்யாணமும். காலம் இருக்கிற இருப்புல தம்பிடி செலவு வைக்காமல் பெண்ணை மட்டும் கட்டிக்க யாருப்பா முன் வருவாங்க?”

கவலையோடும், ஆதங்கத்துடனும் கணேச குருக்கள் இப்படிக் கேட்டதும்,

“ஐயா, உங்க பொண்ணுகிட்ட இருக்கிற படிப்பு, ஆரோக்கியம், வீட்டு வேலை, சமையல் வேலை செய்யும் திறமை, அழகு அனைத்துமே அவருக்குப் போதுமாம். இவைகளைவிட பெரிய சிறந்த மூலதனம் எதுவும் இல்லைங்கிறாரு.

வேதம் படிச்சிருக்கிறதுனால அவருக்கு நிறைய பேரைத் தெரியுமாம். தன்னால் உங்க பொண்ணுக்கு நிச்சயம் ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுக்க முடியும்ங்கிறாரு.

வேலை கிடைத்து சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு மத்தவங்க கேட்ட எல்லாமே தானாக வந்துடும்னு சொல்லி மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கச் சொல்லிட்டாருங்கைய்யா!”

தனது வேண்டுதலும் வீண் போகவில்லை என்பதை அறிந்த கணேச குருக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தளும்பியது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

One Reply to “மூலதனம் – சிறுகதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.