மெத்மெத் புல்வெளி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஒட்டகசிவிங்கி

புற்களை அதிகமாகக் கொண்ட வாழிடம் புல்வெளி என்று அழைக்கப்படுகின்றது. புல்வெளியானது நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். இவ்வாழிடம் உலகின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

புல்வெளியானது பொதுவாக காடுகள் மற்றும் பாலைவனங்களுக்கு இடையே அமையப் பெற்றுள்ளது.

இவ்வாழிடத்தில் காலநிலையானது பெரும்பாலும் புற்கள் மட்டும் நிலைத்து வாழும் தன்மையைக் பெற்றுள்ளது. இங்கு மழைப்பொழிவு பாலைவனத்தினை விட அதிகமாகவும், அதேசமயம் மரங்கள் கூட்டமாக வளர ஏற்றதாக இல்லாமலும் இருக்கிறது.

உலகில் அன்டார்டிக்காவைத் தவிர ஏனைய கண்டங்களில் புல்வெளியானது காணப்படுகிறது. இவை பெரும்பாலும் கண்டத்தின் உட்பகுதியில்தான் காணப்படுகின்றன.

புல்வெளிகள் அவற்றின் அமைவிடம் மற்றும் காலநிலைகளுக்கு ஏற்ப வெப்பமண்டலப் புல்வெளிகள், மிதவெப்பமண்டலப் புல்வெளிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெனிசுலா, கொலம்பியா உள்ளிட்ட இடங்களில் காணப்படுபவை சவானா என அழைக்கப்படுகின்றன. அர்ஜென்டினாவில் காணப்படுபவை பம்பாஸ் எனவும், ஆசியாவில் காணப்படுபவை ஸ்டெப்பி எனவும், வடஅமெரிக்காவில் காணப்படுபவை ப்ரிரீஸ் எனவும் அழைக்கப்படுகின்றன.

வெப்பமண்டலப் புல்வெளிகள்

வெப்பமண்டலப் புல்வெளி
வெப்பமண்டலப் புல்வெளி

 

வெப்பமண்டலப் புல்வெளிகள் உலகில் வெப்பமண்டலக் காடுகளை ஒட்டி அமைந்துள்ளன. இவை உலகின் தெற்கு அரைக்கோளப்பகுதியில் அமைந்துள்ளன. இவை சவானாப் புல்வெளிகள் என்றும் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

இவை பெரும்பாலும் புற்களையும் ஆங்காங்கே சிலவகையான குறுமரங்களையும் கொண்டுள்ளன. இவ்வாழிடத்தில் புற்கள் உயரமாகக் காணப்படுகின்றன.

அமைவிடம்

வெப்பமண்டலப் புல்வெளிகள் ஆப்பிரிக்காவில், பாதிப் பரப்பளவு (கென்யா, தான்சானியா, ஜிம்பாவே, போர்ட்ஸ்வானா, தென்ஆப்பிரிக்கா, நபீமியா), ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதி, தென்அமெரிக்கா (வெனிசுலா, கொலம்பியா), தெற்காசியப் பகுதிகளில் காணப்படுகிறது.

காலநிலை

இங்கு காலநிலை பொதுவாக வெப்பமாகவே இருக்கிறது. இவ்வாழிடத்தில் ஈரப்பதமான கோடைகாலம், வறண்ட குளிர்காலம் என இருவேறு காலநிலைகள் நிலவுகின்றன.

இவ்விடத்தில் வெப்பநிலையானது 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. இங்கு கோடைகாலத்தில் வெப்பநிலை 25 முதல் 30 டிகிரி செல்சியஸாகவும், குளிர்காலத்தில் வெப்பநிலை 20 முதல் 25 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.

இங்கு மழைப்பொழிவானது கோடைகாலத்தில் நிலவுகிறது. இங்கு மழைப்பொழிவானது ஆண்டிற்கு 25-75 செமீ ஆகும். இங்கு வறண்ட குளிர்காலத்தில் மின்னல் மூலம் நெருப்பு உண்டாகி சவானாவில் உள்ள பழைய புற்களை அழித்து புதிய புற்கள் வளர வழிவகை ஏற்படுகிறது.

மண்ணின் தன்மை

இங்குள்ள மண்ணானது நுண்துகளைக் கொண்டு வடிகட்டும் தன்மையைக் கொண்டுள்ளன. மண்ணின் மேற்புறமானது இறந்த தாவர மற்றும் விலங்குகளால் நுண்ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

தாவரங்கள்

இங்கு உள்ள புற்கள் இவ்வாழிடத்தில் நிகழும் காலநிலைகளுக்கு ஏற்ப தகவமைப்பினைக் கொண்டுள்ளன.

இங்குள்ள தாவரங்கள் பூமியின் அடியில் உள்ள நீரினை உறிஞ்சும் பொருட்டு ஆழமான வேர்களையும், தண்ணீரைச் சேமிக்கும் தண்டுகளையும், காட்டுதீயினைத் தாங்கக்கூடிய தடித்த பட்டைகளையும் கொண்டுள்ளன.

மரங்கள் குளிர்காலத்தில் ஆற்றலைச் சேமிக்கும் பொருட்டு இலைகளை உதிர்த்துவிடுகின்றன.

யானைப்புல், சிவப்புஓட்புல், ரோட்ஸ்புல், எலுமிச்சைபுல், நட்சத்திரபுல், பெர்முடாபுல் போன்ற புல்வகைளையும், அகச்சி, பைன், பனை, மஞ்சகட்டிமரம், ஆற்றுபுஸ்வில்லோ, மங்கிஆரஞ்சு, ஏபில் உள்ளிட்ட மரவகைகளையும் இவ்வாழிடம் கொண்டுள்ளது.

இவ்வாழிடத்தில் நிகழும் காட்டுத்தீயினால் புற்கள் பாதிப்படைந்தாலும் மீண்டும் அவை வளரத் தொடங்குகின்றன. ஏனெனில் இவ்வாழிடத்தில் புற்கள் தரைப்பகுதியிலிருந்து வளரும் தன்மையை உடையவை.

விலங்குகள்

இவ்வாழிடத்தில் வளரும் புற்களை உண்டு வாழும் தாவரஉண்ணிகள் அதிகளவு காணப்படுகின்றன. பரந்த புல்வெளியில் உள்ள வேட்டை விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சிறிய தாவரஉண்ணிகள் ஓடுவதற்கு ஏற்ற நீண்ட கால்களைக் கொண்டுள்ளன.

யானைகள், ஒட்டகசிவிங்கிகள், வரிக்குதிரைகள், காண்டாமிருகங்கள், காட்டெருமைகள், சிங்கங்கள், சிறுத்தைகள், வேங்கைகள், பப்பூன்கள், முதலைகள், மறிமான்கள், எறும்புகள், கரையான்கள், கங்காருகள், நெருப்புகோழிகள், பாம்புகள், கழுதைப்புலிகள், கழுகுகள் ஆகியவை காணப்படுகின்றன.

 

சிங்கம்
சிங்கம்

 

மறிமான்கள்
மறிமான்கள்

 

யானைகள்
யானைகள்

மிதவெப்பமண்டலப் புல்வெளிகள்

மிதவெப்பமண்டலப் புல்வெளிகள்
மிதவெப்பமண்டலப் புல்வெளிகள்

 

இவை புவியின் வடஅரைக்கோளத்தில் காணப்படுகிறது. இவ்வாழிடத்தில் புற்கள் மற்றும் தரையை ஒட்டிய காட்டுப்பூக்கள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் புற்கள் உயரம் குறைவாக உள்ளன.

அமைவிடம்

இவை புவியின் மிதவெப்பமண்டலப் பகுதியில் அமைந்துள்ளன. அர்ஜென்டினாவின் பம்பாஸ், ஆசியாவின் ஸ்டெப்பி, வடஅமெரிக்காவின் ப்ரிரீஸ், தென்ஆப்பிரிக்காவின் வெல்ட், ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ் உள்ளிட்டவை மிதவெப்பமண்டலப் புல்வெளிகள் ஆகும்.

காலநிலை

இங்கு வெப்பமான கோடைகாலமும், குளிர்ந்த குளிர்காலமும் நிலவுகிறது. இங்கு கோடையில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குளிர்காலத்தில் 0 டிகிரி செல்சியஸாகவும் இருக்கிறது. மழைப்பொழிவானது இவ்விடத்தில் 55-95 செமீஆக இருக்கிறது.

இங்கு கோடைகாலத்தில் மழைப்பொழிவும், குளிர்காலத்தில் பனிப்பொழிவும் காணப்படுகிறது. கோடையில் புற்கள் வளர்ந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றன. குளிர்காலத்தில் புற்கள் உலர்ந்து காய்ந்து காணப்படுகின்றன.

மண்ணின் தன்மை

இங்கு மண்ணானது அடர்ந்த நிறத்துடன் ஊட்டச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இவ்வாழிடத்தில்தான் உலகின் அதிக ஊட்டச்சத்து மிகுந்த மண் உள்ளது. மண்ணின் மேற்புறமானது இறந்த தாவர மற்றும் விலங்குகளால் நுண்ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

தாவரங்கள்

இங்குள்ள தாவரங்கள் இவ்வாழிடத்தில் ஏற்படும் பருவகால வறட்சி, அவ்வப்போது ஏற்படும் தீ, விலங்குகளின் மேய்ச்சல் ஆகியவற்றை தாங்கி வளரக்கூடிய தன்மையைப் பெற்றுள்ளன.

இங்குள்ள புற்கள் ஆழமான, உறுதியான வேர்களால் மண்ணை இறுக்கிப் பிடித்துள்ளன. இதனால் இவ்விடத்தில் மண்அரிப்பு தடுக்கப்படுவதோடு நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்படுகிறது.

இங்கு ஊதாஊசிபுல், எருமைப்புல், கேலௌடா, நரிவால்புல் உள்ளிட்ட புல்வகைகளும், ஆஸ்டர்ஸ், கோன் ப்ளவர், கோல்டன்ராட்ஸ், சூரியகாந்தி உள்ளிட்ட காட்டுப்பூக்கள் காணப்படுகின்றன.

இவ்வாழிடத்தில் ஆற்றின் ஓரத்தில் வில்லோ, காட்டன்வுட், ஓக் வகை மரங்கள் காணப்படுகின்றன.

காட்டுப்பூ
காட்டுப்பூ

 

விலங்குகள்

இவ்வாழிடத்தில் தாவரஉண்ணிகள் அதிகளவு காணப்படுகின்றன. இங்கு காட்டெருமைகள், வெளிமான்கள், வரிக்குதிரைகள், காண்டாமிருகங்கள், காட்டுக்குதிரைகள், ஜாக்முயல்கள் போன்ற தாவரஉண்ணிகள் உள்ளன.

மேலும் இங்கு சிங்கங்கள், ஓநாய்கள், காட்டுநாய்கள், கயோட்டிகள். நரிகள், பேட்ஜர், சங்க் போன்ற விலங்குகளும் உள்ளன. கருப்பு பறவைகள், குருவிகள், காடைகள், பருந்துகள், வெட்டுக்கிளிகள், மெடோலார்க் முதலியவைகளும் இவ்வாழிடத்தில் உள்ளன.

 

பேட்ஜர்
பேட்ஜர்

 

கருப்பு பறவை
கருப்பு பறவை

 

புல்வெளியின் அரசன் காட்டெருமை
புல்வெளியின் அரசன் காட்டெருமை

புல்வெளிகளின் முக்கியத்துவம்

புல்வெளிகள் மேய்ச்சல் விலங்குகளுக்கு உணவினையும், உறைவிடத்தினையும் வழங்குகின்றன.
இவை இயற்கை கார்பன தொட்டி என்று அழைக்கப்படுகின்றன. இவை கார்பன் சுழற்சி என்ற இயற்கை நிகழ்விற்கு காரணமாகின்றன.

கார்பன் சுழற்சி என்பது வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை தேவையானஅளவு பெற்று பூமியின் வெப்பநிலையை சீராக வைப்பதாகும்.

புல்வெளிகள் எல்லா வகையான தாவரங்களும் வளர்வதற்கு ஏற்ற வளமான மண்ணினைக் கொண்டுள்ளன.

 

புல்வெளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

உலக வெப்பமாதல் நிகழ்வினால் புல்வெளியில் மழைப்பொழிவு குறைந்து அவை பாலவனங்களாக மாறிவிடும்.

மனிதனின் செயல்பாடுகளால் புல்வெளிகள் மனிதனின் வசிப்பிடங்களாக மாறிவிட்டன. இது அவ்விடத்தில் வாழும் தன்மையடைய உயிரிகளை பாதிக்கின்றன.

புல்வெளிகள் வளமான மண்ணினைக் கொண்டுதால் மனிதன் அவற்றை விளைநிலங்களாக மாற்றி விட்டான். வடஅமெரிக்காவின் ப்ரீரிஸ் புல்வெளியின் மொத்தப் பரப்பில் 2 சதவீதம் மட்டுமே எச்சி புல்வெளியாக உள்ளது. ஏனையவை விளைநிலங்களாக மாற்றப்பட்டு விட்டன.

ப்ரீரிஸ் புல்வெளியின் அரசனாக இருந்த காட்டெருமைகள் அதிகஅளவு மனிதரால் கொல்லப்பட்டுவிட்டன.

விளைநிலங்களாக மாற்றப்பட்ட புல்வெளியில் ஒரே மாதிரியான பயிர்கள் மீண்டும் பயிர் செய்யப்படவதால் மண்ணின் வளம் குறைகிறது.

மேலும் ஒரு பயிர் மட்டுமெ வளரக்கூடிய இடங்களில், பூச்சிகள் மற்றும் நோய்கள் எளிதில் பரவும். இதனைத் இவ்விடங்களில் பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்பட்டு மாசுபாட்டினை உருவாக்குகின்றன.

நாமும் நம்முடைய நடவடிக்கைகளால் உலகவெப்பமயமாதலைக் குறைத்து இயற்கைப் புல்வெளிகளைப் பாதுகாப்போம்.

– வ.முனீஸ்வரன்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“மெத்மெத் புல்வெளி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்” அதற்கு 4 மறுமொழிகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.