மொழி வளம்

நம் பாரத நாட்டில் பேச்சு வழக்கில் மட்டுமிருக்கும் மொழிகள், எழுத்து வடிவிலும் இருக்கும் மொழிகள் என அநேகம் இருந்தன.

நம்மிடையே இரண்டாயிரத்திற்கும் மேம்பட்ட மொழிகள் இருந்துள்ளன. படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்பது நமது கொள்கை.

அம்மனிதர்கள் உருவத்தாலும், குணத்தாலும், நிறத்தாலும், திறமையாலும் வேறுபட்டிருப்பது போல் மொழிகளும் மாறுபட்டிருந்தன.

அதன்படியே நாமும் பிற மொழிகளின்பால் ஈர்ப்புடன் கற்று அதன் சிறப்பை நம்மவர்க்கும், நம்மொழி சிறப்பை மற்றவர்களுக்கும் எடுத்துக் காட்ட வேண்டும். இதுதான் வளர்ச்சி தரும். மொழி வெறுப்பால் நமக்கு நன்மை கிடைக்காது.

மொழிகளில் இலக்கண, இலக்கிய வளங்கொண்ட மொழிகள் உண்டு. பேச்சுவழக்கில் மட்டும் இருக்கும் மொழிகளும் உண்டு.

முன், பின் என்ற நோக்கில் பார்த்தால் முரண்பாடுதான் மிகும் வளர்ச்சி என்பது தடைப்படும். இது எம் நோக்கு.

மக்கள் பல்வேறு பகுதிகளில் குழுக்களாக வாழ்ந்த போது தற்காலம் போல் போக்குவரத்தும் சேர்தலும் இல்லாத காலத்தில், அங்கங்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழிகள் அவரவர்களுடனே இருந்தன. அவற்றில் கலப்பு இல்லை.

ஆனால் இக்காலத்தில் உலகமே விரல் நுனியில் இணைக்கபடுவதால் வேறுபாடுகளும் பிரிவுகளும் பேசிப் பயனில்லை. வளர்ச்சியையே முதன்மையாகக் கொள்ளல் வேண்டும். அறிவுப் பசிக் கொள்வோர் அனைத்து மொழியையும் ஏற்பர். தன் ஆற்றலையும் வளர்ப்பர்.

சில மொழிகளை ஆர்வத்தால் செத்த மொழி எனக் குறிப்பிட்டனர். அது ஏற்புடையதில்லை. தனித்தியங்கும் மொழிகளுமுண்டு. அவற்றைச் சார்ந்த மொழிகளும் உண்டு.

அவ்விதமாக இருக்கும் மொழிகளில் நம் பாரதத்திற்குச் சொந்தமான வடமொழி என்ற சமஸ்கிருதமும், தென்மொழி என்ற தமிழும் முதன்மையானது. இவ்விரண்டு மொழிகளை கற்றவர்களை ‘உபயவேதாந்தி‘ என்று இன்றளவும் குறிப்பிடுகின்றனர்.

இம்மொழிகளைச் சார்ந்ததும் இணைந்ததுமாக இருக்கும் மொழிகள், வடக்கிலும் தெற்கிலும் உள்ளன. இரண்டு மொழிகளையும் சார்ந்த மொழிகளும் உண்டு.

ஒரு சில பண்டிதர்களின் தனிப்பட்ட ஆர்வத்தினாலுண்டான எண்ணங்களினால் மொழி எதிர்ப்பு உருவாக்கப்பட்டது. வாய்ப்பிருப்பின் மற்ற மொழிகளையும் கற்றால் தம்மொழியின் சிறப்பை மற்றவருக்கும் எடுத்துக் காட்ட முடியும்.

வடமொழியாளர்கள் தமிழ் கற்கவில்லை எனவும், தமிழர்கள்தான் வடமொழி கற்றனர் எனவும் சொல்லுகின்றார்கள்.

இந்நிலைக்குக் காரணம் தமிழறிஞர்கள் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று தம் ஆற்றலை வளர்த்து வளமாகினர். எடுத்துக்காட்டாக பண்டைய தமிழ் இலக்கியங்களில் வேதங்களையும் அவற்றின் நெறிகளையும் அறிந்து எடுத்துக் காட்டியுள்ளனர். அவர்களுக்கு மொழி வெறுப்பு இருந்ததில்லை.

வேதங்களைப் படித்திருந்ததால் சங்க இலக்கியங்களில் வேதத்தை குறிப்பிட்டுள்ளனர்.

தொல்காப்பியம் பாயிரத்தில் 10வது வரியில் ‘அறம் கரை நாவின் நான்மறை முற்றிய’ என்றும்,

1413வது சூத்திரத்தில் ‘முதுமொழியான மறைமொழி கிளந்த மந்திரத்தான கூற்றிடை’, என்றும்

1426,வது சூத்திரத்தில் ‘நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப’ என்றும்

880வது சூத்திரத்தில் ‘இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே’ என்று சொல்லியவர், எங்கும் மொழிப் பாகுபாடு காட்டவில்லை.

மதுரைகாஞ்சி 656ல் ‘ஓதல் அந்தணர் வேதம் பாட’ என்று வேதத்தை குறிப்பிட்டுள்ளது.

புறநானூறு 1,ல் மறைநவில் அந்தணர் என்றும்

2,இல் நாஅல் வேத நெறி’ என்றும்

15,ல் ‘நற்பனுவல் நால்வேதத்து’என்றும்.

26ல் நான்மறை முதல்வர் என்றும்,

166ல் நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல்’ என்றும்.

362.ல் ‘அந்தணாளிர் நான்மறை’ என்றும்.224ல் ‘வேத வேள்வி’என்றும் வேதங்களைப் போற்றுகின்றது.

குறுந்தொகை 24ல் எழுதாக் கற்பு என்று வேதத்தை குறிப்பிடுகின்றது,

சிறுபாணாற்றுபடை204வது வரியில் அருமறை நாவின் அந்தணர் என்று காட்டியுள்ளது.

பட்டினப்பாலையில் 202வது வரியில் ‘நான்மறையோர் புகழ் பரப்பியும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

பரிபாடல் திரட்டில் 3ம் பாடலில் அருமறை என்று காட்டியுள்ளது. 7ம் பாடலில் நான்மறை என்று காட்டப்பட்டுள்ளது.

பரிபாடல் 1, மற்றும் 2ம் பாடலில் நாவல் அந்தனர் அருமறைப் பொருளே. என்று காட்டப்பட்டது.

3ம் பாடலில் மாயா வாய்மொழி என்றும், வேத மென்றும் சொல்லப்பட்டுள்ளது.

5ம்பாடலில் வேத மா பூண் வையம் என்று காட்டப்பட்டுள்ளது.

8ம் பாடலில் மேவரு முது மொழி விழுத்தவ முனிவரும் எனக் காட்டப்பட்டுள்ளது.

9ம் பாடலில் நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் எனக்காட்டப்பட்டுள்ளது.

13ம் பாடலில் வாய்மொழி அதிர்பு வான்முழக்குச் சொல் என்று காட்டப்பட்டுள்ளது.

கலித்தொகை. 1இல் ‘ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து’ என்று வேதத்தை காட்டுகின்றது

நற்றிணை கடவுள் வாழ்த்தில் ‘இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய வேத முதல்வன்’ என்று வேதத்தை காட்டுகின்றது

சீவகசிந்தாமணியில்

ஏலாதியில்

இவ்வாறு மொழி வெறுப்பின்றி நம்மிடைக் கலந்திருந்த ஒற்றுமையை வேற்று நாட்டினர் புகுந்து குழப்பி நம் ஒற்றுமையை சீர்குலைத்து, நம்மை அடிமைப்படுத்தினர்.

தமிழறிஞர்கள் வடமொழி அறிந்ததனால் ‘இராமயணம்’, ‘மகாபாரதம்’, ‘நைடதம்’, ‘கைவல்லிய நவநீதம்’, ‘ஞானவாசிட்டம்’. போன்ற நூல்களின் வாயிலாக இதிகாசங்களும், செய்திகளும், வேதாந்த நூல்களும், நமக்குக் கிடைத்தன,

மேலும் ‘காவியா தரிசம்’ என்னும் வடமொழி இலக்கண நூலின் மொழிபெயர்ப்பான, ‘தண்டியலங்காரம்’ என்ற அணியிலக்கண நூல் நமக்கு கிடைத்தது.

அக்காலத்தில் மொழி வெறுப்பு தூண்டப்படாததால் அரிய நூல்கள் நமக்குக் கிடைத்தன,

குறிப்பாக கைவல்ய நவநீதம் என்ற அத்வைத வேதாந்த நூலை அவற்றின் சிறப்பை உணர்ந்த கார்ல்க்ரோஸ் என்பவர் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நமக்கு நம் பாரதத் திருநாட்டுப் பெருமையை அழிக்க திட்டமிட்டு வேற்றுமையைப் புகுத்தி அந்நியர் நம்மை அடிமைப்படுத்தி அவர்களை துதி பாட வைத்தனர். அப்படி உருவாகியதே மொழி வெறுப்பு.

வடமொழி வேற்றுநாட்டு மொழி என்பது போல் காட்டினர். வடமொழியில் உள்ள வேதாந்தக் கருத்துகள் அந்நியரிடம் உண்டா? அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் போன்ற வேதாந்தக் கருத்துகள் மாற்றாருக்குத் தெரியுமா?

யோக சாத்திரங்கள் அந்நியரிடமிருந்ததா?

இராமனும், கண்ணனும், சிவனும், முருகனும், திருமகளும், கலைமகளும், மலைமகளும் அவர்களுக்குத் தெரியுமா?

பாலியும், பிராகிருதமும் போற்றிய பௌத்தமும், சமணமும் அந்நியருக்குத் தெரியுமா?

கங்கையும், காவிரியும் அந்நியருக்கு உண்டா?

எழுதாக்கிளவியாகப் போற்றப்பட்ட வேதங்களும், பிராம்மணங்களும், ஆரண்யகங்களும் அந்நியரிடம் நாம் பெற்றதா?

சிந்திக்கவும்.

வேதங்கள் எந்த மொழியில் இருக்கின்றது என்பது நமக்கு முக்கியமில்லை, வேதங்கள் நம் அனைவருக்கும் சொந்தமானதே. நமக்கு சொந்தான சொத்தை நமதில்லை என்று நம்மையே சொல்ல வைத்து நம்மிடமிருந்து பறித்து விடும் சூழ்ச்சியை நாம் முறித்தல் வேண்டும்.

அழியாக் காவியங்கள் நமக்கு வழங்கிய மாபெரும் கல்வியாளர்களான, வால்மீகி, கிருஷ்ணத்வைபாயன வியாசன், காளிதாசன், பரசா, ஹர்ஷா, பாணினி, பதஞ்சலி, ஆதிசங்கரர், கல்ஹணர், ஜெயதேவர், இன்னும் எத்தனையோ பேரறிஞர்கள் இருந்தனர் அவர்கள் எல்லாம் நம்மவரா? அந்நியரா? எண்ணிப் பார்த்தல் வேண்டும்

போலிகள் ஆராய்ச்சி என்ற பெயரில் நம்மை குழப்பி வேற்றுமையை விதைத்து விட்டார்கள். இன்று அவ்வேற்றுமை வளர்ந்து மரமாகி விஷக்கருத்துக்களை அறுவடை செய்கின்றோம்.

இதன் பலனாக கிடைக்க வேண்டிய அறிவு களஞ்சியங்கள் இல்லாமல் போயின. அந்நியர் வந்துதான் நமக்கு கல்வியை தந்தனர் என்று சொல்லும் அளவிற்கு நம்மை தாழ்த்தினர்; வரலாற்றை மாற்றினர்.

ஆயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன்பே பல்கலைக்கழகங்கள் வைத்திருந்தோம், எண்ணற்ற குருகுலங்கள் வைத்திருந்தோம்.(தக்ஷசிலா, நாளந்தா, விக்ரஷிலா)

தமிழகத்தில் இருந்த பெரும் கல்வியாளர்கள் தமிழையும், வடமொழியையும் கலந்து, முத்தும் மணியையும் கோர்த்தாற்போல் புதிய நடையில் (மணிப்பிரவாளம்) வ்யாக்யாண நூல்களைப் படைத்தனர். பின்னாளில் அந்நூல்களை படிப்போர் அரிதாகினர்.

தமிழகத்தில் பேசப்படும் தமிழ் மொழியானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாறுபடுகின்றது.(கொங்கு தமிழ், நெல்லை தமிழ், மதுரை தமிழ், ஈழத் தமிழ்) ஆகப் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் வேறாக உள்ளது. அப்படிப் பேசுவதில்கூட இசையுடைய நயம் இருக்கின்றது. ஆனாலும், எழுதும்போது அனைவரும் ஒரே மாதிரிதான் எழுதுவர்.

ஒரே மொழியை சிறப்பாகவும் அதற்கு மாறுபட்டும் பேசும் மக்கள் உள்ளனர். இவர்களை மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று பார்க்கும் நிலை கூட ஒரு காலத்தில் இருந்தது.

இன்றைய வளர்ச்சியடைந்த நாட்களில், நவீன உலகில் மற்ற மக்களின் மொழிகளை கற்பதும், நேசிப்பதும் அவசியமாகின்றது. இவற்றால் அன்பும் உறவுகளும் மேம்படுகின்றது. அறிவும் ஆற்றலும் வெளிப்படுகின்றது.

அறிவுக்கும், வணிகத்திற்கும் மற்ற மொழிகளைக் கற்று வளமாவதை தடுத்து, பகையை வளர்த்து சிறந்த சிந்தனைகளைச் சிதைத்துச் சீரழிப்பதை மக்கள் உணரவேண்டும்.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர் 602024
கைபேசி: 9444410450

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.