யானை எய்த படலம்

யானை எய்த படலம் இறைவனான சொக்கநாதர் வேடர் வடிவம் கொண்டு மதுரையை அழிக்க சமணர்கள் ஏவிய யானையின்மீது நரசிங்கக் கணையை எய்து அழித்த வரலாற்றைக் கூறுகிறது.

காஞ்சி மன்னனின் சூழ்ச்சி, சமணர்கள் ஏவிய யானையின் வலிமை, யானை அழிக்கவந்த இறைவனான வேடுவரின் நடவடிக்கைகள், யானை வீழ்ந்த விதம் ஆகியவை இப்படலத்தில் அழகாக விரித்துரைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் இன்றைக்கும் இருக்கும் யானை மலை, நரசிங்கர் கோயில் ஆகியவை உண்டான விதம் ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.

யானை எய்த படலம் திருவிளையாடல் புராணத்தில் மதுரை காண்டத்தின் 22 படலமாக அமைந்துள்ளது.

காஞ்சி மன்னின் சூழ்ச்சி

அபிடேகப்பாண்டியனின் மகனான விக்கிரமபாண்டியன் பாண்டிய நாட்டினை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய ஆட்சியில் சைவம் செழித்தோங்கி இருந்தது.

அவன் சோமசுந்தரர் சந்நிதிக்கு வடக்கே சித்தமூர்த்திகளின் திருவுருவத்தை நிறுத்தி நள்தோறும் வழிபட்டு வந்தான். இன்றைக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கநாதருக்கு அருகே எல்லாம் வல்ல சித்தரை நாம் தரிசிக்கலாம்.

விக்கிரமபாண்டியனிடம் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசன் ஒருவன் நீண்ட நாள் பகைமை கொண்டிருந்தான்.

சமண சமயத்தை தழுவிய அவ்வரசன் விக்ரமபாண்டியனை நேரடியாக போரிட்டு வெல்ல இயலாததால் விக்கிரமபாண்டியனை சூழ்ச்சியால் வெல்ல எண்ணினான்.

அதன்படி அவன் எட்டு மலைகளில் வாழ்ந்த சமணர்களின் தலைவர்களுக்கு தனித்தனியே ஓலை எழுதி அனுப்பினான். சோழனின் ஓலையின்படி சமணத்தலைவர்கள் அனைவரும் காஞ்சியில் ஒன்று கூடினர். மயில்தோகையால் விக்கிரமசோழனை அவர்கள் ஆசீர்வதித்தனர்.

சோழ அரசன் அவர்களிடம் “விக்கிரமபாண்டினை நேரில் வெல்ல இயலாததால் நீங்கள் அபிசார வேள்வியை (மரண வேள்வி) உண்டாக்கி அவனை கொன்று விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் நான் என்னுடைய நாட்டில் பாதியை உங்களுக்குத் தருவேன்.” என்று கூறினான்.

சமணர்களின் யாகம்

சோழனின் உடன்படிக்கு ஒத்துக் கொண்ட சமணர்கள் பாலியாற்றங்கரையில் பெரிய யாக குண்டத்தை அமைத்தனர்.

அதில் எட்டி உள்ளிட்ட தீய மரத்தின் விறகுகளையும், நச்சு உயிரிகளின் ஊன், மிளகுப்பொடி கலந்த எண்ணெயையும் ஊற்றி அபிசார வேள்வியைத் தொடங்கினர்.

அவ்வேள்வித் தீயினால் உண்டான நச்சானது அருகில் இருந்த காடுகள், சோலைகள், நந்தவனம் ஆகியவற்றை கருக்கி விட்டன.

கொடிய யானையின் தோற்றம்

சமணர்களின் அபிசார வேள்வித் தீயிலிருந்து ஒரு கொடிய யானை ஒன்று தோன்றியது.

சமணர்கள் கொடிய யானையிடம் “நீ விரைந்து சென்று விக்கிரம பாண்டியனையும், மதுரையையும் அழித்து விட்டு வா” என்று கட்டளையிட்டனர்.

யானையின் உடலானது பெருத்து அதனுடைய கால்கள் மண்ணில் பதிந்தும், உடலானது விண்ணைத் தொட்டும் இருந்தது. அது தன்னுடைய பெரிய காதுகளினால் சூறாவளியை உருவாக்கியும், கண்களில் நெருப்புப் பொறி சிந்தவும், உலகத்தினை உலுக்கும் இடிபோல் பிளிறிக் கொண்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டது.

சமணர்களும், சோழனுடைய படைகளும் யானையைப் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் மதுரையின் எல்லையை அடைந்த கொடிய யானை அங்கிருந்த காடுகள், வயல்வெளிகள், உயிரினங்கள் உள்ளிட்ட கண்ணில் பட்டவற்றை எல்லாம் அடித்து நாமாக்கியது. யானையின் செயலை மதுரை மக்கள் விக்கிர பாண்டியனுக்குத் தெரிவித்தனர்.

சொக்கநாதர் வேடுவர் வேடம் பூணுதல்

கொடிய யானையின் செயல்களை அறிந்த விக்கிரம பாண்டியன் “சொக்கநாதரைத் தவிர்த்து இவ்வாபத்தில் இருந்து நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். ஆதலால் வாருங்கள் நாம் அனைவரும் சென்று அவரை வழிபாடு செய்வோம்” என்று கூறி மதுரை மக்களுடன் சொக்கநாதரை தரிசிக்கச் சென்றான்.

சொக்கநாதரின் சந்நிதியை அடைந்த விக்கிரபாண்டியன் “கொடிய யானை மதுரையின் எல்லையில் நின்று கண்ணில் பட்டவற்றை நாசம் செய்தவாறே மதுரையை நோக்கி வருகிறது. இறைவா, எங்களை இத்துன்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள்” என்று மனமுருகி வழிபட்டான்.

அப்போது வானத்தில் இருந்து “பாண்டியனே, கவலைப்பட வேண்டாம். யாம், வேடுவர் வேடம் பூண்டு வில் ஏந்திய சேவகனாய் மதுரையை அழிக்க வந்த கொடிய யானையை அழிப்போம். நீ அதற்கு முன்பு மதுரைக்கு கிழக்கே ஓர் அட்டாலை மண்டபத்தை உண்டாக்கு” என்ற திருவாக்கு கேட்டது.

வேடுவர் கொடிய யானையை அழித்தல்

இறைவனின் திருவாக்கினைக் கேட்ட விக்கிரமபாண்டியன் மனதில் மகிழ்ச்சி கொண்டு மதுரையின் கீழ்திசை நோக்கி ஓடினான். கற்களையும், சாந்தினையும் கொண்டு பதினாறு கால் தூண்களுடன் கூடிய பெரிய அட்டாலை மண்டபத்தை உண்டாக்கினான்.

இறைவனான சொக்கநாதர் அரையில் சிவப்பு ஆடையைக் கட்டி தலையில் மயில்தோகை அணிந்து, அம்புக்கூட்டினை முகிலே கட்டி, பச்சைநிற மேனியராய் தோன்றினார். அட்டாலை மண்டபத்தில் ஏறி கொடிய யனையின் வரவிற்காக காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் கொடிய யானையானது அவ்விடத்திற்கு வந்தது. தமது வில்லை எடுத்து நாணினைப் பூட்டி வளைத்தார். பின் வில்லில் நரசிங்கக் கணையை வைத்து நாணினை இழுத்து விட்டார்.

அக்கணையானது யானையின் மத்தகத்தைக் கிழித்தது. கொடிய யானை நரசிங்க கணையின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. யானை மடிந்ததைக் கண்ட சமணர்கள் மிகுந்த மனவருத்தம் கொண்டனர்.

யானை மடிந்ததைக் கண்ட விக்கிரமபாண்டியன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். யானையின் பின்னால் வந்த சமணர்களையும், சோழனின் படைகளையும் பாண்டியனின் படைகள் அடித்து துரத்தினர்.

வேடுவ வடிவம் கொண்டு வந்த சொக்கநாதரின் திருவடிகளில் வீழ்ந்த விக்கிரமபாண்டியன் “எங்களைக் காத்த இறைவரே, தாங்கள் இத்திருக்கோலத்திலேயே இங்கேயே தங்கி இருக்க வேண்டும்” என்று விண்ணபித்தான். இறைவனாரும் அவனுடைய வேண்டுகோளை ஏற்று அருளினார்.

பின்னர் விக்கிரமபாண்டியன் இராஜசேகரன் என்னும் புதல்வனைப் பெற்று பாண்டிய நாட்டில் நல்லாட்சி நடத்தினான்.

யானை மலையும், நரசிங்கப் பெருமாளும்

மதுரையை அழிக்க வந்த யானையானது சோமசுந்தரரின் பாணம் பட்டு தரையில் வீழ்ந்த இடத்தில் மலையாக மாறியது. இதுவே யானை மலை ஆகும்.

 

 

இது பார்ப்பதற்கு யானை படுத்திருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். இது மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும்.

சோமசுந்தரர் யானையின் மீது விடுத்த நரசிங்கக்கணையானது உக்கிர நரசிங்கமாக யானை மலையின் அடிவாரத்தில் தோன்றியது.

 

 

இவ்நரசிங்கமூர்த்தியை உரோமசமுனிவர் வழிபாடு நடத்தி தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். பிரகலாதனும் இவ்விடத்திற்கு வந்து தவம் செய்து அழியாவரம் பெற்றான்.

இப்படலம் கூறும் கருத்து

வஞ்சகர்களின் சூழ்ச்சி இறுதியில் வீழ்த்தப்படும் என்பதே யானை எய்த படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் கல்யானைக்கு கரும்பருத்திய படலம்

அடுத்த படலம் விருத்த குமார பாலரான படலம்

2 Replies to “யானை எய்த படலம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.