யானை யானை அழியும் யானை

யானை யானை அழகர் யானை என்றல்ல; யானை யானை அழியும் யானை என்றே இப்போது பாட்டுப் பாட வேண்டி இருக்கின்றது.

செயற்கையான காரணங்களால் யானைகள் இறப்பது என்பது தினசரிச் செய்தியாகி விட்டது.

தண்டவாளத்தைக் கடக்க முயற்சி செய்யும் போது இரயிலில் அடிபட்டு இறந்ததாக ஒரு நாள் செய்தி வருகின்றது. மனிதர்கள் வசிக்கும் ஊருக்குள் வந்துவிட்ட காரணத்தால் கொல்லப்பட்டதாக செய்தி வருகின்றது மறுநாள்.

இதுபோக மனிதர்கள் கட்டி வைத்த மின்வேலிகளால் யானைகள் பாதிப்படைவது ஒருபுறம் இருக்கின்றது. மனிதர்கள் வெட்டி வைத்த கிணற்றில் யானைக் குட்டிகள் விழுந்து பரிதவிப்பது என்றொரு தனிக்கதை இருக்கின்றது.

நம் நாட்டில் சிங்கம், புலி போன்ற விலங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதைப் போல, யானைகளின் எண்ணிக்கையும் ஆகி விடும் என்ற சூழ்நிலை நிலவுகின்றது.

யானை அதிகம் அறிவுள்ள மிருகம். அது மரம், செடி, கொடி என சைவ உணவையே உண்ணக் கூடியது. பெரிய உருவமுடையதாக இருந்தாலும் பிற விலங்குகளைத் தாக்குவதில்லை.

யானைகள் நிறைய இலை தழைகளைச் சாப்பிட்டாலும் ஒரு காட்டைப் பசுமையாக, செழிப்பாக வைத்திருப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. யானை ஒரு பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையைத் தனது சாணத்தில் வெளியிட்டால் அது கீழே விழுந்து சிறப்பாக முளைத்து வளரும்.

ஒரு காட்டில் யானைகள் நிறைய இருக்கின்றன என்றால் அந்தக்காடு நன்றாக செழிப்பாக இருப்பதாக அர்த்தம்.

ஒரு பெரிய சுமை தூக்கியாக, படைவீரனாக மேலும் திருவிழாக்கள், கோவில்களில் அலங்காரப் பொருளாக என மனிதனுக்கு யானை அதிகம் பயன்பட்டு வருகின்றது.

அழியும் யானை

அன்று ஆற்றல் மிக்க யானை; இன்று அழியும் யானை.

இன்றைய சூழலில் மனிதனின் பேராசை யானை இனத்தை அழித்து வருகின்றது.

நம்முடைய போக்குவரத்து வசதிக்காக என்று சொல்லி யானைகள்; நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் சாலைகள் மற்றும் இருப்புப்பாதைகளை அமைக்கின்றோம்.

சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலை போன்ற காட்டுப்பகுதிகளில், வாகனங்களில் செல்லும் போது, யானைகள் அடிக்கடிக் குறுக்கிடுவதாக நாம் சொல்கின்றோம்.

ஆனால் உண்மை என்ன?

நாம்தான் யானைகள் வாழும் இடத்திற்கு சென்று, அவற்றின் வாழ்க்கையில் தொல்லைகளைக் கொடுக்கின்றோம்.

காடுகளில் உள்ள ரயில் பாதைகளில், தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டுவிடுகின்றன. இவை தவிர தந்தத்திற்காக யானைகளைக் கொல்வதும் நடைபெறுகின்றது.

நாம் மிகப்பெரிய யானைகளை வேட்டையாடும் சமூகமாக மாறிவிட்டோம்.

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக, அனைத்து ஊர்களும் விரிவடைந்து கொண்டே போகின்றன. அதனால் காடுகள் அழிக்கப்படுகின்றன. மேலும் விவசாயத்திற்காகவும் காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்படுகின்றன.

இதனால் யானைகள் வழக்கமாக அலைந்து திரியும் பாதைகள் தடுக்கப்படுகின்றன. யானைகளுக்கு உணவு கொடுத்த காட்டின் எல்லை சுருங்கிவிடுகின்றது.

எனவே யானைகள் தங்களின் உணவு மற்றும் தண்ணீர் தேவைகளுக்காக, காட்டின் அருகே இருக்கும் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகளை நோக்கி வருகின்றன.

யானைகள் தங்கள் தோட்டத்திற்கு வந்தால், விவசாயம் முழுவதும் நஷ்டம் என்று விவசாயிகள் மின்வேலிகள் அமைக்கின்றார்கள்.

ஊருக்குள் வரும் யானைகளை மக்கள் பட்டாசு வெடித்து காட்டுக்குள் அனுப்புகின்றனர். அது மனிதனுக்கும் யானைக்குமான ஒரு பெரிய போராட்டமாகி விடுகின்றது.

யானை என்பது, வருங்காலத்தில் இணையத்தில் மட்டுமே படமாய் பார்க்கப்படும் ஒரு விலங்காக மாறிவிடுமோ என்ற எண்ணம் வருகின்றது.

தீர்வு என்ன?

அழியும் யானை இனம் மட்டுமல்ல‌ பல காட்டு விலங்குகளும் இந்தக் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றன. தங்களின் இந்தக் கஷ்டம் தீர அந்த விலங்குகளால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

ஆறறிவு படைத்த மனிதன்தான் தன்னுடைய செயல்கள் மூலம் இந்த துயரத்தை நீக்க முடியும். காடுகளின் பரப்பைக் கூட்டாவிட்டாலும் பரவாயில்லை. அவற்றைக் குறைக்கக் கூடாது.

யானைகள் மற்றும் பிற காடு விலங்குகள் அலைந்து திரியும் வழக்கமான பாதைகளில் மனித நடவடிக்கைகளால் இடையூறு வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முன்னேற்றம் என்ற பெயரில் காடுகளை அழிக்க அரசு துணை போகக் கூடாது.

விலங்குகளுக்கு தொல்லை தராமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என வனத்துறை அலுவலர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விலங்குகளுக்கு எதிராகக் குற்றம் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்களைப் பாதுகாப்பது மனித சமுதாயத்திற்கும் நல்லதுதான் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இறுதியில், மனிதன் மட்டும்தான் உலகில் இருக்கும் ஒரே உயிரினம் என்று மாறிவிடாமல் பாதுகாப்பது நமது கடமை.

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.