கடற்கரையில் சுந்தரி பூ விற்றுக் கொண்டிருந்தாள். கடற்கரையில் அவள் வயதை ஒட்டிய சிறுவர்கள் தத்தம் தாய் தந்தையருடன் கடல் அலையோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.
பூக்களை விற்றபடி சுந்தரியும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. அவளின் இதயத்தில் ஏதோ ஒரு ஏக்கம்.
அவள் அந்த சிறுவர்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். வாய் முணுமுணுத்தது. உதடுகள் அசை போட்டன. இருந்தாலும் வார்த்தைகள் வெளிவரவில்லை.
கண்களில் நீர் வழிய கனத்த இதயத்துடன் கடற்கரை மணல் திட்டில் அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
‘ஏன்? என்னவாயிற்று அவளுக்கு?’
சுந்தரி அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். தந்தை இல்லை. தாய் தான் அவளுக்கு எல்லாமே.
தாய் தந்தை இருவதுமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆசை 30 நாள் மோகம் 30 நாள் என்பார்கள். அதுபோலவே அவர்களின் வாழ்க்கையும் அமைந்தது.
தந்தை வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரியவும், நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதுமாக இருந்தார்.
குடும்பம் என்றால் என்னவென்று தெரியாமல் அவர் வலம் வந்து கொண்டிருக்க, அவ்வப்போது அவருக்கும் அம்மாவுக்கும் இடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் நடப்பது வழக்கமாகி போனது.
இந்நிலையில் சுந்தரியும் பெண் குழந்தையாக பிறந்து விட, தந்தையால் இருவருமே கைவிடப்பட்டார்கள்.
சுந்தரியின் தாய் தான் சித்தாள் கூலி வேலைக்கு சென்று தலையில் கல் சுமந்து, மண் சுமந்து அரும்பாடு பட்டு அவளை வளர்த்தாள்.
ஆனால் இன்று சுந்தரி தன் தாயை வளர்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
சுந்தரியின் தாய் கட்டிட வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது கால் தவறி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து கால் உடைந்து நடக்க முடியாமல் போனதும் சுந்தரியின் தலையில் குடும்பச் சுமை.
சுந்தரி சின்னத்தாயாய் மாறி போனாள். அவள் தாய்க்கும் தாயாக அவளே இருக்க நேர்ந்தது.
காலை பொழுது விடிந்ததும் தன் தாய்க்கு செய்ய வேண்டியவை அனைத்தையும் செய்து வைத்துவிட்டு அருகில் இருக்கும் பள்ளிக்கு செல்வாள்.
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு பள்ளியை தொடர்வாள். நான்கு மணிக்கு பள்ளி விட்டதும் வீட்டிற்கு வந்து தன் தாய்க்கு செய்ய வேண்டியவை அனைத்தும் செய்துவிட்டு, தாய் கட்டி வைத்திருந்த பூவை எடுத்துக் கொண்டு கோயிலுக்கோ அல்லது கடற்கரைக்கு வந்து வியாபாரம் பண்ணுவது சுந்தரியின் வழக்கம்.
இன்றும் அப்படித்தான் வந்திருந்தாள். ஆனால் சிறுவர்கள் மீது அவர்களின் தாய் தந்தையர் வைத்திருந்த பாசமும் அன்பும் சுந்தரியை ஒரு கணம் கலங்கடிக்க செய்திருந்தது.
சுந்தரியின் மன ஓட்டத்தில்
‘இவர்களைப் போல் தனக்கும் தந்தை இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
தனக்கு வந்த நிலை இனி எந்த ஒரு குழந்தைக்கும் வரக்கூடாது.
எந்த ஒரு தந்தையும் இனி ஊரை விட்டு ஓடாமல் இருக்க வேண்டும் கடவுளே!‘
என்று நினைத்தவாறு கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நடக்கலானாள்.
மறுமொழி இடவும்