கடமை – கதை

“என்னடா, சேத்தான் நம்ம பொழப்பு இப்படியே போய்கிட்டு இருக்குது. ஒரு பொழப்பையும் காணும். காலையில எந்திரிச்சு கடை தெரு பக்கம் வந்தா ஒரு பயலும் ஒரு பொழப்பும் தர மாட்டேன்றானுங்க.” என்று கேட்டான் பாபு.

“ஆமாம், இவரு பெரிய கலெக்டருக்கு படிச்சு இருக்காரு. கடைத்தெரு வந்து கையெழுத்து போட்டதும் வேலையை தூக்கி அப்படியே கையில கொடுத்துடுவாங்க. அட போடா! வீணா போனவனே. நானே என்ன பண்ணுறதுன்னு தெரியாமத்தான் முழிச்சுக்கிட்டு இருக்கேன்.” என்று பதில் கூறினான் சேத்தான்.

“ம் …இரு பாப்போம். ஆண்டவன் இன்னைக்கு நம்பளுக்கு என்ன படி அளக்கிறாணு. சரி, சரி வா. என்கிட்ட பத்து ரூபா இருக்குது. போய் ஒரு டீய வாங்கி ஆளுக்கு பாதி குடிச்சிட்டு வருவோம்” என்று பாபு சொல்ல இருவரும் புறப்பட்டார்கள்.

இருவரும் டீ குடித்துக்கொண்டு இருக்கும் பொழுது பஸ் ஸ்டாண்டில் பஸ் வந்து நின்றது.

ஹனிபு பஸ்ஸை விட்டு இறங்கி வேகமாக பஸ்ஸின் மீது ஏறி காய்கறி மூட்டைகளை கீழே தள்ளி விட்டார் .

“சேத்தான்”

“ம்.. ம்…”

“சீக்கிரம் குடிச்சிட்டு வாடா” என்று சொல்லிவிட்டு வேகமாக பஸ்ஸின் அருகே சென்றான் பாபு.

இருவரும் காய்கறி மூட்டைகளை தங்களுடைய தட்டு வண்டியில் ஏற்றி ஹனிபு காய்கறி கடையில் கொண்டு இறக்கி வைக்க ஹனிபு தன் டிராயர் பாக்கெட்டில் இருந்து 70 ரூபாய் பணம் எடுத்து சேத்தானிடம் கொடுத்தார்.

இருவரும் மீண்டும் வந்து தத்தம் தட்டு வண்டிகளில் உட்கார்ந்தனர்.

இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள். அதிகம் படிக்கவில்லை என்றாலும் கிடைத்த வேலையை வைத்து சிறப்பாக வாழ்பவர்கள்.

ஊரில் எந்த வேலையாக இருந்தாலும் இவர்கள் தான் முன் நிற்பார்கள். ‘களவும் கற்று மற’ என்பது போல் சமையல் முதல் சகல வேலைகளும் இவர்களுக்கு அத்துபடி.

சொந்தமாக தட்டு வண்டி வேறு வைத்திருக்கிறார்கள். எந்த வேலையும் கிடைக்காத பட்சத்தில் தட்டு வண்டியை வாடகைக்கு ஓட்டி வருமானம் ஈர்ப்பார்கள்.

“டேய் சேத்தான்! அங்க பாருடா, அவரு நம்ம வண்டியத்தான் அப்பையிலிருந்து பாத்துகிட்டு இருக்காரு . ஏதோ சவாரி வருது போல இருக்கு.”

“டேய்! செத்த சும்மா இருடா! அந்த ஆளு போன முறையே நம்பளுக்கு சரியா வாடகை கொடுக்கல. அந்த பாக்கிய கொடுத்தால்தான் இந்த முறை அவருக்கு வண்டி. தெரியுதா? பாக்காத மாதிரி இரு. நான் பார்த்துக்கிறேன்.”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே பெரியவர் அருகில் வந்தார்.

“தம்பி வண்டி வேணும்.”

“எங்க போகணும்?” என்றூ கேட்டான் சேத்தான்.

“ஒன்னும் இல்ல தம்பி! வீட்டுல கொஞ்சம் கட்டட வேலை நடக்குது. ஒருநாலு மூட்டை சிமெண்ட் அங்க போகணும்.”

“தப்பா நினைச்சுக்காதீங்க. வண்டி வராது. வண்டி காரைக்காலுக்கு போகுது. பீரோ ஏத்தணுமாம்.”

“தம்பி இன்னும் கொஞ்ச நேரத்தில ஆளுங்க எல்லாம் வேலைக்கு வந்துடுவாங்க. சிமெண்ட் மூட்டை போனா தான் வேலை ஆரம்பிக்க முடியும். செத்த நேரம் சிரமம் பாக்காம உதவுங்க தம்பி. அப்புறம் போன தடவ உங்களுக்கு வாடகை வேற பாக்கி இருக்குது. அதையும் சேர்த்து தந்துடறேன்.”

“சரி நீங்க கடைக்கு போங்க. நான் வண்டி எடுத்துட்டு வரேன். சீக்கிரமா போங்க. நான் அடுத்த சவாரி போகணும்” என்று சேத்தான் சொல்ல இருவரும் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.

இப்படியே சில காலங்கள் சென்றன. சேத்தானுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள். பாபுவுக்கு இரண்டு குழந்தைகள்.

இருவரும் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்க, சேத்தானும் பாபுவும் சேர்ந்து தவணை முறையில் இரண்டு பிளாட்டுகள் வாங்கிப் போட்டனர்.

பாபு கரெக்டாக தவணை முறையைக் கட்டி வந்தான். சேத்தானால் கட்ட முடியவில்லை.

“டேய் பாபு என்னால் தவணை கட்ட முடியவில்லை. என்னோட பிளாட்டையும் சேர்த்து நீயே எடுத்துக் கொள். நான் இதுவரை 50,000 கட்டியிருக்கிறேன். இதையும் சேர்த்து நீயே கட்டு. உன்னிடம் பணம் இருக்கும் பொழுது என் பணத்தை கொடுத்து விடு” என்றான் சேத்தான்.

இதற்கு பாபுவும் ஒப்புக்கொண்டான். இந்நிலையில் சேத்தானின் உடல்நிலை சரியில்லாமல் போனது.

பாபுவும் நண்பர்களும் குடும்பத்தார்களும் தங்களால் முடிந்தவரை எங்கெங்கோ சேத்தானைத் தூக்கிச் சென்று வைத்திய முறைகளை பார்த்தனர்.

இருந்தும் சேத்தான் மருத்துவரர்களால் கைவிடப்பட்டான். சேத்தான் படிப்படியாக எப்படி முன்னேறினானோ, அப்படியே படிப்படியாக உடல்நிலை பாதித்து படுத்த படுக்கையாகி விட்டான்.

ஒருவருடம் குடும்பத் தலைவன் படுக்கையில் இருந்தால் அந்த குடும்பத்தின் நிலை என்னவாகும்? கல்யாணம் பண்ணும் வயதில் ஒரு பெண், இரண்டு சிறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பத்து வயது பையன் என்று அழகா இருந்த குடும்பம் இன்று பொலிவிழந்து காணப்பட்டது.

பாபுவால் எவ்வளவு முயன்றும் தன் நண்பனை காப்பாற்ற முடியவில்லை. சேத்தான் தவறி ஒரு வருடம் ஆகிவிட்டது.

சேத்தானின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சேத்தான் மூத்த மகளை கல்யாணம் முடித்து வைத்தனர். சேத்தானின் மகன் படிப்பை நிறுத்திவிட்டு ஸ்டோர் கடைக்கு வேலைக்கு சென்றான்.

அதுவரையில் பாபுவிடம் இருந்த சேத்தானின் பணம் பற்றி யாருக்கும் விவரம் தெரியாது. பாபு பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு சேத்தானின் நண்பர்களை எல்லாம் அழைத்து விஷயத்தை சொன்னான்.

நண்பர்கள் “சேதனின் மனைவியிடம் பணத்தை கொடுத்து விடுவோம்” என்று சொன்னார்கள். ஆனால் பாபுவுக்கு அதில் உடன்பாடு இல்லை.

“இன்று நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். சேத்தானின் முதல் மகளுக்கு கல்யாணம் முடித்தாகி விட்டது. இனி வரும் காலங்களில் யார் யார் எங்கே இருப்போம் என்று யாருக்கும் தெரியாது.

அதனால் இந்த பணத்தை சேத்தானின் சிறிய மகள் ஏழு வயது ஆகும் பெண் குழந்தை பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து விடுவோம்.

இந்த விஷயம் சேத்தானின் மனைவி உட்பட யாருக்கும் தெரிய வேண்டாம். இந்த பணத்தை இப்படி செய்தால் அந்த புள்ளைக்கு ஒரு கல்யாணம் என்று வரும்போது அது பெரிய உதவியாக இருக்கும்” என்று பாபு சொல்ல அனைவருக்கும் அது ‘சரி’ என்று பட்டது.

பாபு கூறியபடி பணம் டெபாசிட் செய்யப்பட்டது.

‘இது என்னுயிர் நண்பனுக்கு நான் செய்யும் கடமை’ என்று பாபு நினைத்துக் கொண்டான்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.