பதட்டப் படாதே – சிறுகதை

நள்ளிரவு ஒரு மணி இருக்கும். கரண்ட் கட் ஆனதும் உடல் வேர்வையால் நனைய, தூங்கிக் கொண்டிருந்த பிரதீப் கண் விழித்தான்.

எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. ‘என்ன இது? எல்லாம் இருட்டாக தெரிகிறது. கண்ணை மூடி இருக்கிறோமா! திறந்து இருக்கிறோமா?’ தன் கண்ணை தன்னாலேயே நம்ப முடியவில்லை. தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

‘கண் திறந்து தான் இருக்கிறது. அப்போ ஏன் பார்க்க முடியவில்லை? என்ன நடக்கிறது இங்கே?’ கண்களை கசக்கி கொண்டவனுக்கு எதிரே ஏதோ அசைவது போல் தோன்றியது.

அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்திருக்கவும் பயம். உடம்பெல்லாம் சில்லுற்று போனது. ‘சரக் சரக்’ என்று சத்தம் வேறு.

தனியாக இருக்கும் அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கத்திவிட வேண்டும் போல் தோன்றியது. வாயிலிருந்து சத்தம் எழவில்லை.

அப்போதுதான் அது நடந்தது. அருகே இருந்த டேபிளின் மீது ‘கொடக்’ என்ற சத்தத்துடன் வெளிச்சம் பரவியது.

உடலில் ஒரு புதிய தெம்பு உற்சாகத்துடன் எழுந்து அருகே செல்வதற்குள் வெளிச்சம் அணைந்தது. தட்டு தடுமாறி டேபிளை தொட, மேலிருந்த பிளவர் வாஸ் கீழே விழுந்து சிதறி பலத்த சத்தத்தை எழுப்பியது.

மேலும் டேபிளை தொட்டு தடவ, செல்போன் கையில் தட்டுப்பட, வெளிச்சத்தை துணைக்கு வரவழைத்துக் கொண்டான் பிரதீப்.

‘தன் எதிரே யார் நின்றது’ என்பதை அறிய செல்போன் வெளிச்சத்தை திருப்ப, நுழைவாயிலின் மறைப்பு காற்றில் பறந்து கொண்டிருந்தது.

‘சே! இதை பார்த்தா பயந்தோம்’ அசடு வழிய முகத்தை துடைத்துக் கொண்டான். அருகில் இருந்த பிரிட்ஜை திறந்து தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு கட்டிலில் உட்கார்ந்தான்.

‘நேற்று இரவு என்ன நடந்தது? நான் எப்போது இங்கே வந்து படுத்தேன் ஒன்றுமே புரியவில்லையே…’ என்று தலையை சொரிய தலைக்கு ஏறிய போதை மேகமூட்டமாய் மெல்ல விலக ஆரம்பித்தது. அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர ஆரம்பித்தது.

பிரதீப்புக்கு நாகை மாவட்டத்தில் உள்ள பனங்குடி என்ற கிராமம்தான் சொந்த ஊர். அந்த ஊரில் பிரதீபின் அப்பா பழனி விவசாயத் தொழில் பார்த்து வந்தார்.

அவருக்கு இருந்த வசதிக்கு பிரதீப்பை பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. பிரதீப்பும் தன் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு வேலை தேடத் தொடங்கினான்.

பெங்களூருவில் செயல்பட்டு வரும் வாடகை டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிய ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை நாளிதழ் ஒன்றில் கண்டு, அதனைத் தொடர்பு கொண்டு வேலையில் சேர்ந்தான் பிரதீப்.

வேலையில் சேர்ந்து 13 வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில் ஒருநாள் தன் வேலைகளை முடித்துக் கொண்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான் பிரதீப்.

நேரம் ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. வழியில் ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் ஒரு ஆக்சிடென்ட். அப்போதுதான் நடந்திருக்கும் போல் இருந்தது.

என்ஃபீல்டு வண்டி கவிழ்ந்து கிடந்தது. அதில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு ஆளுக்கு ஒரு திசையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

பிரதீப் தன் வண்டியை நிறுத்திவிட்டு ஓடினான்.

சிறிது தூரத்தில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க பெண் தலையில் அடிபட்ட நிலையில் கால்களை உதைத்து கொண்டு கிடந்தாள். தலையில் அடிபட்டு முகம் எல்லாம் ரத்தம் வழிந்ததனால் சரியாக முகம் தெரியவில்லை.

அதையும் தாண்டி சிறிது தூரத்தில் என்ஃபீல்டு பைக்கின் அருகே ஒருவர் கிடந்தார். அவருக்கு 42 வயது மதிக்கலாம். கட்டு மஸ்தான மெருகேறிய உடம்பு. கருப்பு நிறம். முறுக்கேறிய மீசை.

பிரதீப்புக்கு ‘போலீஸ்காரரா இருக்குமோ?’ என்ற அச்சம் ஒரு பக்கம். உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

போலீஸ் நிலையத்திற்கும் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்துவிட்டு, தன் நண்பர்களுக்கும் நடந்தவைகளைத் தெரிவித்துக் கொண்டு இருந்தான்.

அதற்குள் கூட்டம் சேர தொடங்கியது. போலீஸ் ஜீப்பும் ஆம்புலன்சும் வந்துவிட, இருவரையும் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஓரத்தில் இருந்த புதருக்குள் இருந்து சத்தம் கேட்க, பிரதீப் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.

புதருக்குள் கைக்குழந்தை கை கால்களை உதைத்தபடி அழுது கொண்டு இருந்தது. பிரதீப் அதை தூக்கிக் கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தான்.

அப்போது பிரதீப்பின் நண்பர்கள் அங்கு வந்தனர். பதற்றத்துடன் காணப்பட்ட பிரதீப்பை அழைத்துக் கொண்டு பாருக்கு சென்றனர்.

அவ்வளவு தான் பிரதீப்புக்கு தெரியும். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியாது. வீட்டிற்கு எப்படி வந்தான் என்பதும் தெரியாது.

போதை தெளிய ஆரம்பித்ததும்தான், நடந்தவைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.

அப்போதுதான் சற்று முன் தன் செல்போனுக்கு ஏதோ மெசேஜ் வந்தது போன்று ஞாபகம் வர, செல்லை எடுத்து மெசேஜை ஆன் செய்தான் பிரதீப்.

அதில்’ பிரதீப் என்ன செஞ்சுகிட்டு இருக்க? நான் வெளியே காத்திருக்கிறேன் வா…’ என்று இருந்தது.

‘யார் இது? புதுநம்பரில் இருந்து மெசேஜ் வந்திருக்கிறதே! அதுவும் இந்த நேரத்தில்! யாராக இருக்கும்?’ என்று எண்ணிய பிரதீப் எழுந்து ஜன்னலை லேசாக திறந்து வாசலை பார்த்தான்.

வாசலில் யாரோ ஒரு பெண் நிற்பது போல் தெரிந்தது.

‘அட உண்மைதான்! யாராக இருக்கும்? யாரும் உதவி கேட்டு வந்திருப்பார்களோ? வெளிச்சம் வேறு இல்லை. முகத்தை அவனால் சரிவர பார்க்க முடியவில்லை.

அது சரி. ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். அவன் மட்டும் என்ன விதிவிலக்கா?

கதவைத் திறந்து பிரதீப் வெளியே வர, சிறிது தூரத்தில் அந்தப் பெண் திரும்பி நடந்து செல்வது தெரிந்தது .

‘அட! இவ்வளவு நேரம் நின்று இருந்த பெண் அதோ போறாங்களே. என்ன விஷயமா வந்தாங்கன்னு தெரியலையே…’ என்று நினைத்துக் கொண்டான்.

உடனே நேற்று இரவு நடந்த சம்பவம் சட்டென நினைவுக்கு வர, ‘சரி மணி ரெண்டு இருக்கும். எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக் கொள்வோம் அந்தப் பெண் தான் சென்று விட்டார்களே’ என்று நினைத்த பொழுதே கரண்ட் வந்தது. கதவை சாத்திவிட்டு உள்ளே சென்றான் பிரதீப்.

வீட்டிற்குள் வந்த பின்பும் அந்த பெண்ணின் நினைவாகவே இருந்தது அவனுக்கு.

இரவு என்பதால் பயம் வேறு அவனுக்கு பற்றிக்கொள்ள, டிவியை ஆன் செய்து இசையருவி சேனலை வைத்து திரைப்படப் பாடல்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

எப்போது அவன் தூங்கிப் போனான் என்பது அவனுக்கே தெரியாது.

பிரதீப் காலையில் வழக்கம் போல் எழுந்து தன் வேலைக்கு சென்றான். இருந்தாலும் அவனுக்கு இரவு நடந்த நிகழ்வு ஒரு யோசனையாகவே இருந்தது.

தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் வந்து சேர்ந்ததும், நண்பர்களிடம் விஷயத்தை சொன்னான்.

“என்னடா சொல்ற மச்சான் உண்மையாவா? என்றான் சுதன்.

“…ம்..ம்.ம் ஆமாண்டா.” என்று சுரத்தையில்லாமல் பதிலளித்தான் பிரதீப்.

” ஏய் பொண்ணு நல்லா பிகராடா …” என்றான் மதன்.

“ரொம்ப அழகா இருந்தாளா …” – இது வரதன்.

“ஏய்… ஏய்… ஏய்… சீ. ரொம்ப அலையாதடா… அவன் ஏதோ நேத்து நைட்டு நடந்ததை பார்த்து அரண்டு போய் வந்து சொல்லிக்கிட்டு இருக்கான்.” என்ற சுதன் பிரதீப்பின் தோள்மேல் கையை போட்டான்.

பின் “அது ஒன்னும் இல்லடா மச்சா. நேத்து நைட் அடிச்ச சரக்கு சரியா இல்லைன்னு நினைக்கிறேன். இன்னைக்கு வேற மாத்தி அடிச்சா சரியா போயிடும் கவலைப்படாதே ..ஹி.. ஹி ..ஹி ….”

“போங்கடா போங்க! நான் சொல்றது உங்களுக்கு விளையாட்டா தான் தெரியும்” என்று பிரதீப் விரட்டினான் .

நண்பர்கள் எல்லாம் “எதுவா இருந்தாலும் நைட்டு பார்த்து போடா மச்சி” என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தனர்.

பிரதீப் தன் சவாரியை முடித்து கொண்டு இரவு 11 மணி தன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தான்.

அப்போது பிரதீப் வண்டிக்கு எதிரே ஒரு பெண் ஓடி வந்தாள். வண்டியை நிறுத்திய பிரதீப் அந்த பெண்ணிடம் “ஏம்மா ஏன் இவ்வளவு அவசரம்?” என்று கேட்டான்.

“என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்க. நான் அங்கே போகணும்” அந்தப் பெண் அழுது கொண்டே சொன்னாள்.

பிரதீப் உடனே “வாங்கம்மா. வந்து வண்டியில ஏறுங்க. எந்த ஆஸ்பத்திரி? நான் கொண்டு போய் விடறேன்” என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டான்.

கார் ஆஸ்பத்திரியை நோக்கி புறப்பட்டது.

சிறிது தூரம் சென்றம் தன் நண்பனின் கார் எதிரே வந்ததைக் கண்டதும் பிரதீப் வண்டியை நிறுத்தினான்.

வண்டியிலிருந்து இறங்கிய வரதன் “ஏய் பிரதீப்! இங்கே எங்கேடா? நேற்று இரவு தூங்கல நான் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போனே…” என்று கேட்டான்.

“நான் வீட்டுக்கு போனேனா, போற வழியில பாவம் இந்த அம்மா அழுதுகிட்டு வந்தாங்க. குழந்தைக்கு உடம்பு சரியில்லையாம் ஆஸ்பத்திரியில வச்சிருக்கிறதா சொன்னாங்க” என்று கையை பின்னால் காட்டி, திரும்ப காருக்குள் அந்த பெண்ணை காணவில்லை.

வரதனிடம் திரும்பி “இப்போ இப்பதாண்டா அழைச்சிட்டு வந்தேன். இந்த சீட்டில் தான் உட்கார்ந்து இருந்தாங்க.” தட்டு தடுமாறி வேர்த்து விறுவிறுக்க சொன்னான் பிரதீப்.

“ஏய் எல்லாம் உன் மன பிரம்மைடா. நேத்து நடந்த ஆக்சிரண்டையே இன்னும் நெனச்சிட்டு இருக்கியா? போடா போக்கத்தவனே. நான் இப்போதான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரேன். ஒரு அர்ஜென்ட் சவாரி. சரி சரி மனச போட்டு குழப்பிக்கிட்டு இருக்காத. எதுவும் சரக்கு போட்டியா?” என்று கேட்டான் வரதன்.

“இல்லடா இன்னும். வாங்கி வச்சிருக்கேன் போய் குளிச்சிட்டு தான் சாப்பிடணும். எனக்கு பயமா வேற இருக்குடா. உண்மையிலேயே இப்போதான் அந்த அம்மாவை அழைச்சிட்டு வந்தேன். எப்படி காணாம போனாங்க தெரியலையே. நான் இன்னும் வீட்டுக்கு கூட போகல தெரியுமா?”

“சரி சரி சும்மா பினாத்திட்டு இருக்காத. வீட்டுக்கு போய் குளிச்சிட்டு சாப்பிடு.”

“எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. நீயும் வந்து என் கூட நைட்டுக்கு தங்கிடேன்”

“சரி அப்படின்னா நான் கடைக்கு போயிட்டு அப்படியே சாப்பிட வாங்கிட்டு வரேன். நீ வீட்டுக்குப் போய் இரு என்று வரதன் சொல்ல இருவர் வண்டியும் புறப்பட்டது.

வீட்டில் பிரதீப் குளித்துவிட்டு தன் நண்பன் வரதனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.

வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்க, கதவைத் திறந்து வரதனை உள்ளே அழைத்தான் பிரதீப்.

வரதனின் கைகளில் சாப்பாட்டு பொட்டலங்கள் இருந்தன. இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு உறங்க சென்றனர்.

இரவு ஒரு மணி.

பிரதீப்புக்கு தூக்கம் கலைந்தது. டேபிளில் இருந்த செல்போன் ஒலி எழுப்பி அடங்கியது.

எழுந்து சென்று செல்போனை கையில் எடுத்து ஆன் செய்தான். மெசேஜ் அப்போதுதான் வந்து இருந்தது. மெசேஜை சொடுக்கினான்.

‘வா வெளியே வா. நான் வாசலில் தான் இருக்கிறேன்’ என்றது அந்த மெசேஜ்.

பிரதீப்புக்கு ஒன்றும் புரியவில்லை. தன் நண்பன் வரதனை தட்டி எழுப்பினான்.

“டேய் வரதா எழுந்திருடா… யாரோ வாசல்ல வந்து நிக்கிறாங்கடா … டேய் வரதா! டேய்.”

“டேய் சும்மா பிணாத்திகிட்டு இருக்காம போய் படுடா. தூக்கம் வருது” என்று வரதன் புரண்டு படுத்தான்.

பிரதீப்புக்கு வரதனை எழுப்ப முடியாமல் போனது. ‘சரி நம் பிரச்சினையை நாமே தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னதான் நடந்து விடப் போகிறது? பார்த்து விடலாம்’ என்று ஒரு அசட்டையான துணிச்சலை மனதில் வர வைத்துக் கொண்டு தன் கையில் இருந்த செல்போனுடன் வாசல் கதவை திறந்தான் .

வாசலில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண், பிரதீப்பை கண்டதும் திரும்பி நடக்கலானாள்.

‘என்ன இது? நேற்றும் இந்த பெண் தான் வந்தாள். இன்றும் அந்த பெண் தான் வந்திருக்கிறாள். என்னை பார்க்க வந்தவள் ஏதும் சொல்லாமல் நடக்கிறாளே. சரி இதோ அருகில் தான் சொல்கிறாள். ஓடிச் சென்று என்ன என்று கேட்டு விடுவோம்’ என்று எண்ணியபடி பிரதீப் பின் தொடர்ந்தான்.

அதே நேரத்தில் வரதனும் எழுந்தான். கண்களைக் கசக்கி கொண்டு ‘பிரதீப்.. டேய் ..பிரதீப்’ என்று பிரதீப்பை தேடினான்,

‘என்ன இவன் எங்கு தேடியும் காணவில்லையே. சொல்லாமல் எங்கே சென்றான்? இரண்டு நாளாக மன உளைச்சலில் வேறு இருக்கிறான். இப்போது ஆளையும் காணோம்.

கதவை திறந்து போட்டுவிட்டு எங்கே சென்றான். இரவு வேறு ஏதோ பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக சொன்னான். பார்த்தா அங்கே வண்டியில யாரையும் காணோம். இங்கே என்ன நடக்கிறது? இவனுக்கு என்ன தான் பிரச்சனை.’ என்று எண்ணிய வரதன் தன் நண்பர்களுக்கு போன் செய்து அனைவரையும் வரவழைத்தான்.

நண்பர்கள் வந்ததும் வரதன் நேற்று இரவு நடந்ததையும் பிரதீப் மன உளைச்சலில் இருப்பதையும் சொன்னான்.

அப்போது மதன் குறுக்கிட்டு “அப்படி என்றால் நாம் ஏன் ஆஸ்பத்திரிக்கு போய் பார்க்க கூடாது?” என்று சொன்னதும், சுதன் “ஆமாம் ஆமாம். அங்கும் சென்று பார்த்து விடலாம்” என்று ஆமோதித்தான்.

‘சரி’ என்று அனைவரும் புறப்பட்டு அங்கே சென்றனர்.

பிரதீப் மார்ச்சுவரியை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அவனை பின் தொடர்ந்து நண்பர்கள் சென்று கொண்டிருந்தனர்.

பிரதீப் மார்ச்சுவரி வாசலில் நின்றான். அவனுக்கு முன்னால் மார்ச்சுவரி கதவு தானாக திறந்தது. நண்பர்கள் பிரதீப்பின் அருகே செல்ல, பிரதீப்பின் கை உயர்ந்து உள்ளே காட்டியது .

நண்பர்கள் அனைவரும் உள்ளே எட்டிப் பார்க்க, மார்ச்வரியின் உள்ளே ஒரு பெண் கூலர் பாக்ஸை ஒன்றன்பின் ஒன்றாக திறந்து திறந்து மூட, நால்வரும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அந்த பெண் அடுத்து ஒரு லாக்கரை திறக்கவும், அதில் இருந்து நல்ல வாட்ட சாட்டமான ஒரு ஆண் உடல் எழுந்து உட்கார இரண்டும் கைகளை கோர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தன.

அதுவரையில் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.

இந்த இரண்டு பிணங்களும் மாடியின் மேல் இருக்கும் குழந்தைகள் வார்டு நோக்கி நடந்தன.

வார்டின் உள்ளே சென்றதும் நைட் டூட்டி பார்த்துக் கொண்டிருந்த நர்ஸ் அப்படியே டேபிளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

அதில் பெண்ணின் பிணம் பதிவேட்டை புரட்டி தன் குழந்தையின் பெயர் உள்ள பக்கத்தைக் கிழித்தது எடுத்துக் கொண்டு குழந்தைகள் இருக்கும் அறையினுள் சென்று ஒவ்வொரு குழந்தையாக பார்வையிட்டது.

தங்கள் குழந்தையை அடையாளம் பார்த்துவிட்டு தோளில் தூக்கி போட்டுக் கொண்டு நடக்க, இரண்டு பிணங்களும் அறையை விட்டு குழந்தையுடன் வெளியே வந்தன.

அதற்குள் ஆஸ்பத்திரியில் இருந்த அனைவரும் ஒன்று கூடி வெளியே நிற்பதை கண்ட பிணங்கள் குழந்தையை தூக்கி வெளியே வீசிவிட்டு கீழே சாய்ந்தன.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.