ரசிகர் மன்றம் ஒரு நல்ல கதை. இன்றைய இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயத்தை அழகாக விளக்கும் கதை.
ரவியும், மணியும் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றனர். ஏன் என்றால் அன்று ரசிகர் மன்றம் திறப்பு விழா.
மணிதான் தலைவர்.
தோரணங்களும், கொடிகளும் கட்டி ஒலிப்பெருக்கியில் சத்தமாக பாடல் ஒலித்தது. இளைஞர்கள் கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது.
சினிமாவில் நடிக்கும் நடிகருக்காக இளைஞர்கள் இப்படி நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறார்களே என கந்தசாமி மனம் வருந்தியது.
கந்தசாமி அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியாற்றும் போதே பல ஏழை மாணவர்களுக்குத் தன் சொந்த பணத்தில் உணவிட்டு, பண்டிகை நாட்களில் புத்தாடைகளையும் கொடுத்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்.
இன்றும் கூடாரம் ஒன்று அமைத்து பசியால் வாடும் ஏழைகளுக்கும், உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் தினமும் இலவசமாக உணவிட்டு வருகிறார். அன்னை தெரசா உணவகம் என பெயரிட்டு இரண்டு வருடமாக அதனை நடத்தி வருகிறார்.
அவருடைய நண்பர் கோபு, பைனான்ஸ் தொழில் செய்பவர் என்பதால் கந்தசாமிக்கு அவ்வப்போது பலரிடம் பணம் பெற்று உதவுவார்.
உணவு கந்தசாமி வீட்டில் அவர் மனைவியால் சமைக்கப்பட்டு உணவகத்திற்கு வரும்.
அந்த கூடாரத்தின் எதிரில்தான் ரசிகர் மன்றம் என்ற பெயரில் திரைக்கு இரையான இளைஞர்கள், விழா நடத்துகின்றனர். கந்தசாமிக்கு உதவ ஒரு இளைஞன்கூட இதுவரை முன்வந்தில்லை.
மணி மன்றத்திற்கு வந்தான். திறப்பு விழா இனிதே தொடங்கியது. இளைஞர்கள் முன்னிலையில் தலைவர் மணி பேசினான்.
“நம்ம தலைவரோட படம் தீபாவளிக்கு வருது. அந்த படத்த வெற்றிப் படமா ஆக்கனும். அது ரசிகர்களான நம்ம கையிலதான் இருக்கு. அதுக்கு எல்லோரும் ஒத்துழைக்கனும்.
படம் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே தலைவரோட உருவத்த நிக்கிற மாதிரி பெரிய பேனர வைக்கனும். அதுக்கு மாலை போட்டு பால் அபிசேகம் பன்னனும். எல்லோரும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் ரசிகர் மன்றத்துக்குக் குடுக்கனும். அப்பதான் நாம நெனச்சத சாதிக்க முடியும்.” கூட்டம் கலைந்தது.
எதிரே உணவகத்திற்கு சாப்பாடு வந்தது. கேரட் துண்டுகள், மாங்காய் துண்டுகள், கருவேப்பிலை, மல்லி, புதினா சேர்த்து தாளித்த அருமையான தயிர் சாதம்.
அதற்கு துணையாக பூண்டு ஊறுகாய், பற்ற வைத்த பத்தி மணம் எங்கும் பரவுவது போல, கூடாரம் முழுவதும் தயிர் சாதத்தின் மணம் வீசியது.
வாழை இலையில் ஏழை, எளிய மக்களுக்கு உணவிடப்பட்டது. அனைவரும் கந்தசாமியை கையெடுத்து கும்பிட்டனர்.
பால் அபிசேகம்
சில நாட்களுக்கு பிறகு மணியும், ரவியும் மன்றத்து இளைஞர்களோடு பனை மரம்போல உயர்ந்து நிற்கும் நடிகரின் பேனரை பட்டாசுகள் வெடித்து, உருமிமேள சத்தத்தோடு, ஊர்வலமாக எடுத்து வந்தனர். பேனர் நிறுத்தி கட்டப்பட்டது.
மணி பால் பாக்கெட்டுகளோடு பேனர் மீது ஏறினான். உயரே வந்ததும் நடிகரின் தலையின்மேல் ஒவ்வொரு பால் பாக்கெட்டாக பிரித்து பாலபிஷேகம் செய்தான்.
கீழே நின்ற இளைஞர்கள் எல்லோரும் ஆரவாரம் செய்தனர். இறுதி பால் பாக்கெட்டை பிரித்தபோது நிலை தடுமாறி மணி கீழே விழுந்தான்.
அனைவரும் ஓடிச்சென்று மணியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். தரையில் பாலோடு மணியின் இரத்தமும் கலந்தது.
தகவல் அறிந்த கந்தசாமி உடனே மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு நின்றிருந்த மணியின் நண்பன் ரவியிடம் “என்ன ஆச்சு?” என்றார்.
சோகம் கலந்த குரலோடு “மணியோட வலது கால் முறிந்துவிட்டது” என்றான்.
கந்தசாமி மிகவும் வருந்தினார். அங்கு நின்றிருந்த இளைஞர்களிடம் உணர்ச்சி பொங்க பேசினார்.
“உங்களைப் பெற்று வளர்த்த அப்பா அம்மாவுக்கு என்றைக்காவது விழா எடுத்ததுண்டா? இல்ல பேனர்தான் வச்சதுண்டா?
உங்கள் பெற்றோர் உங்களுக்காக மட்டுமே வாழ்கின்றவர்கள், உங்களுக்காக மட்டுமே உழைப்பவர்கள்.
ஒரு நடிகர் திரையில் நடிப்பது அவருக்காக மட்டுமே.
அவர் உங்கள் பணத்தில் வாழ்பவர்; உங்களுக்காக வாழ்பவர் அல்ல.
அவரின் திறமை, நடிப்பு ஆகியவற்றை ரசியுங்கள்; மகிழுங்கள். அவரின் ரசிகனாயிருங்கள்; வெறியனாகி விடாதீர்கள்.
மணியின் எதிர்காலமே பாழாகிவிட்டாதே! இதுபோல் எத்தனை பேர் வாழ்க்கை வீணாகுமோ?” என ஆவேசமாக பேசிய கந்தசாமியின் கண்கள் குளமாகின.
மனவருத்தத்துடன் வீட்டிற்குச் சென்றார். என்ன ஆச்சரியம் ரசிகர் மன்ற கூடாரம் அங்கே இல்லை.
இளைஞர்கள் உணவகத்தின் வெளியே காத்திருந்தனர். கந்தசாமி எடுத்து வந்த உணவை இளைஞர்கள் ஏழை, எளிய மக்களுக்கு பரிமாறினர். கந்தசாமி மனம் மகிழ்ந்தார்.
உணவை உண்டவர்கள் இளைஞர்களை பார்த்து வணங்கினர். இளைஞர்கள் நெகிழ்ந்தனர். அவர்கள் கண்களில் இருந்து ஆனந்தமாய் கண்ணீர் முகத்தை நனைத்தது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!