ராகி / கேழ்வரகு பூரி ராகியைக் கொண்டு செய்யப்படும் சிற்றுண்டி வகைகளுள் ஒன்று. கேழ்வரகு சத்தான சிறுதானியம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு புட்டு, களி, தோசை என பலவகை உணவுப்பொருட்கள் ராகியில் தயார் செய்தாலும் பூரியையும் தயாரித்து அசத்தலாம்.
இனி சுவையான, சத்தான ராகி / கேழ்வரகு பூரி பூரி தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ராகி / கேழ்வரகு மாவு – ½ கப்
கோதுமை மாவு – ½ கப்
ரவை – 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
கல் உப்பு – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
ராகி / கேழ்வரகு பூரி செய்முறை
ரவையை பொடித்துக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோலுரித்து அரைத்துக் கொள்ளவும்.
கல் உப்பினை தேவையான அளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி / கேழ்வரகு மாவு, பொடித்த ரவை, அரைத்த வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கலக்கிக் கொள்ளவும்.

பின் நல்ல எண்ணெயை லேசாக சூடேற்றி மாவுக் கலவையில் சேர்க்கவும்.
கல் உப்பு சேர்த்த தண்ணீரினை சிறிது சிறிதாகச் சேர்த்து ஒரு சேரத் திரட்டவும்.
பத்து நிமிடம் திரட்டிய மாவினை அப்படியே வைக்கவும்.

பின் திரட்டிய மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

ஒரு உருண்டையை எண்ணெய் தடவிய சப்பாதிக் கல்லில் வைத்து சற்று தடிமனாக விரிக்கவும்.

இவ்வாறாக எல்லா உருண்டைகளையும் செய்யவும்.
வாயகன்ற வாணலியில் பொரிக்கும் எண்ணெயை ஊற்றி காய விடவும்.
எண்ணெய் காய்ந்ததும் அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.
பின் விரித்து வைத்துள்ள மாவினை எண்ணெயில் போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.

வெந்ததும் பூரியை வெளியே எடுத்து விடவும். சுவையான ராகி / கேழ்வரகு பூரி தயார்.

சுண்டல் குருமா, உருளைக் கிழங்கு குருமா ஆகியவற்றுடன் ராகி பூரியை உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் விழுதினை தேவையான அளவு மாவுக் கலவையில் சேர்த்து பூரி தயார் செய்யலாம்.
ராகி பூரிக்கு மாவினை பிசையும் போது சற்று தளர்வாக இருக்குமாறு பிசையவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!