ராஜ்மா கிரேவி செய்வது எப்படி?

ராஜ்மா கிரேவி சுவையான தொட்டுக்கறி ஆகும். இது தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி மற்றும் சீரக சாதம் உள்ளிட்டவைகளுக்கு மிகவும் பொருத்தமானது.

ராஜ்மாவை கிட்னி பீன்ஸ் என்பர்.

கொண்டை கடலையைப் போலவே இதனையும் ஊற வைத்தே பயன்படுத்த வேண்டும்.

அசத்தலான சுவையில் இருக்கும் ராஜ்மா கிரேவி உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை கிரேவி போலவே சிறந்த சைடிஷ்.

இனி எளிய வகையில் சுவையான ராஜ்மா கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ராஜ்மா – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 100 கிராம்

பச்சை மிளகாய் – 1 எண்ணம்

மசாலா பொடி – 2 ஸ்பூன்

கொத்தமல்லி பொடி – 1 ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1ஃ2 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – 1 கொத்து

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கீற்று

ராஜ்மா கிரேவி செய்முறை

ராஜ்மாவை இரண்டு முறை கழுவி ராஜ்மாவைப் போல இரண்டு மடங்கு தண்ணீரில் சுமார் எட்டு முதல் பத்து மணி வரை ஊற வைக்கவும்.

ராஜ்மா ஊறியதும் இரண்டு மடங்கு பெரிதாகும்.

ராஜ்மா ஊறியதும்

பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை அலசி நேராகக் கீறிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி விழுதாக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

குக்கரில் ராஜ்மாவை ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு விசில் வந்ததும், சிம்மில் 10 நிமிடங்கள் வைத்து இறக்கிக் கொள்ளவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து ராஜ்மா நன்கு வெந்ததை உறுதிபடுத்தி ஆற விடவும்.

வேக வைத்த ராஜ்மா

ராஜ்மா ஆறியதும் ஐந்தில் ஒருபகுதியை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ராஜ்மாவை மிக்சியில் அரைத்ததும்

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் மற்றும் கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்ததும்

பின்னர் அதில் பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்த‌தும்

பெரிய வெங்காயம் நிறம் மாறியதும் அதில் தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி விழுதைச் சேர்த்ததும்

தக்காளி சுருள வதங்கியதும் அதில் மசாலா பொடி, கொத்தமல்லி பொடி மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

பொடி வகைகளைச் சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து அதில் அரைத்த ராஜ்மா மற்றும் முழு ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.

குக்கரை மூடும் முன்பு

ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் ஐந்து நிமிடங்கள் வைத்து அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்துக் கிளறவும்.

கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்

சுவையான ராஜ்மா கிரேவி தயார்.

குறிப்பு

ராஜ்மாவை முதலில் ஊற வைக்கத் தவறினால், தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் ராஜ்மாவைச் சேர்த்து ஹாட்பேக்கினுள் ஒருமணி நேரம் வைத்து அதனைப் பயன்படுத்தலாம்.

விருப்பமுள்ளவர்கள் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து கிரேவி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.