சதாசிவம் சுரத்தையின்றி காணப்பட்டதைப் புரிந்து கொண்ட அவரது மனைவி வேணி…
“என்னங்க உங்களுக்கு இந்த சம்பந்தத்தில் இஷ்டமில்லையா? நம்ம பொண்ணு வசுமதிக்கு எல்லா வகையிலுமே ஒத்துப் போகிற வரனாகத்தானே அமைஞ்சிருக்கு?”
“எல்லாம் சரியாத்தான் வேணி. ஒருவிஷயத்துல மட்டும் பையனின் தகப்பனார் ரொம்பவும் கறாராய் இருக்கிறார்.
ஒரே பெண்ணை நல்லா படிக்க வைச்சோம். ‘ஐ.டீ.ஃபீல்டு’ல அவளுக்கு நல்ல வேலையும் கிடைச்சு கை நிறைய சம்பளமும் வாங்கிக்கிட்டிருக்கா.
அவளோட சம்பாத்தியத்துலதான் கல்யாணத்திற்கு வேண்டிய நகை, பாத்திரங்கள் எல்லாம் வாங்கி சேர்க்க முடிஞ்சது.”
“ஆமாங்க. அதற்கென்ன இப்போ?”
“கல்யாணத்திற்குப் பிறகும் வசுமதி வேலைக்குப் போவதில் அவர்களுக்கு ஆட்சேபனையில்லைன்னு சொன்னதும், ரொம்பவும் சந்தோஷப்பட்டேன்.”
“சரி அதுக்கென்ன?”
“வசுமதியோட சம்பளத்திலிருந்து மாதா மாதம் ஐயாயிரம் ரூபாய் நமக்கு அனுப்பினால் சௌகரியமாய் இருக்கும்னு கேட்டதுக்கு சம்மந்தி மறுத்துட்டாரே…”
“என்னங்க நீங்க பேசுறது? ஊர் உலகத்துல கல்யாணத்திற்குப் பிறகு எந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் சம்பாத்தியத்திலிருந்து பெற்றோருக்குப் பணம் அனுப்ப சம்மதிப்பாங்க?
அதுவும் இன்னிக்குக் காலம் இருக்கிற இருப்புல எப்படி நமக்குப் பணம் அனுப்பச் சொல்லுவாங்க. நீங்க எதிர்பார்க்கிறது தப்புங்க.”
சதாசிவம் எதுவும் பேசவில்லை. மனைவி சொல்வது அவருக்குப் புரியாமலில்லை.
ஆனாலும்… கல்யாணத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக செய்ய வேண்டி வரும் பண்டிகை சீர், பிரசவம் போன்றவைகளுக்கு உதவியாயிருக்குமே என்னும் நினைப்பின் உந்துதலில் கேட்டதற்கு பிடிவாதமாக அவர்கள் மறுத்து விட்டதை நினைத்து மருகினார்.
வசுமதி திருமணம் இனிதே நடந்தேறி ஐந்து வருடங்கள் ஓடி விட்டன.
சதாசிவம் வேணி தம்பதிகளுக்கு இப்போது ஒரு பேரனும் பேத்தியும் இருக்கிறார்கள்.
சதாசிவமும் உள்ளுரிலேயே ஐயாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
திடீரென ஒருநாள் சதாசிவம் முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் அவரது சம்பந்தி அவரைத் தேடிக் கொண்டு மில்லுக்கு வந்துவிட்டார்.
“என்ன சம்பந்தி, திடீரென என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?”
“எல்லாம் நல்ல சமாச்சாரம்தான். உங்களோடு கொஞ்சம் மனம் விட்டுப் பேசணும். உங்க பொண்ணு சம்பாத்தியத்திலிருந்து நீங்க கேட்டுக்கிட்ட மாதிரி பணம் அனுப்ப நான் சம்மதிக்காதது உங்களை ரொம்பவும் பாதிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.”
“என்னங்க நீங்க? அதெல்லாம் எதுவுமில்லை சம்பந்தி”
“சம்பந்தி, என் பையன் ஒரு ஊதாரி. பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவழிப்பவன். பணத்தின் அருமையும் தெரியாது. அனுபவமும் பத்தாது. ரொம்பவும் டாம்பீகமாக இருக்கணும்னு நினைப்பவன்.
கல்யாணம் ஆன புதுசு இல்லையா? மனைவி சொல்லே மந்திரம்னு அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதும் அவள் மனம் கோணாமல் அவளை சந்தோசமாக வச்சுக்கணும்னும் நினைக்கிற வயசு.”
“தப்பில்லீங்களே … சம்பந்தி”
“அதே சமயம் பிற்காலத்துக்கு இப்போதே திட்டமிட்டுச் செயல்படணுமில்லையா? அதுக்காக, உங்க பொண்ணு சம்பளம் முழுவதையும் ஒருபைசா கூட எடுக்காமல் ‘ஃஎப்.டி.’யில் போட்டுக்கிட்டிருக்கேன்.
இந்த அஞ்சு வருஷசத்துல அவங்க சொந்தமாய் ஒருவீடு கட்டுகிற அளவுக்குக் கணிசமாய் ஒருபெரிய தொகை சேர்ந்திருக்கு.
உங்க பொண்ணு வாழ்நாள் முழுக்க எந்த ஒரு கஷ்டமும் தெரியாமல் மகாராணியாய் வாழ வழி செஞ்சிருக்கேன்.”
“நான் எப்படி உங்களுக்கு நன்றி சொல்றது…” கண்ணில் நீர் மல்க சம்மந்தியின் கையைப் பற்றிக் கொண்டார் சதாசிவம்.
“வரவு எட்டணாவும், செலவு பத்தணாவுமாக இருந்தால் வாழ்க்கை என்னும் ஓடத்தில் ஏறிய எவருமே ஒழுங்காகக் கரை சேர முடியாது.
ஆனா, வரவு பத்தணாவாகவும் செலவு எட்டணாவாகவும் இருக்கணும்ங்கிற ஒரே நோக்கத்தில்தான் கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க கேட்ட விஷயத்துல நான் கொஞ்சம் கண்டிப்பாய், பிடிவாதமாய் நடந்துக்கிட்டேன்.
நான் செஞ்சது தப்பாயிருந்தால் என்னை மன்னிச்சிடுங்க” என்று கையெடுத்துக் கும்பிட வந்த சம்பந்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டே….
“‘மனைவி அமைவது மட்டும் இறைவன் கொடுத்த வரமல்ல…. சம்பந்தி அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான்” என்றார் சதாசிவம் நா தழுதழுக்க.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!