வருடலின் சுகமறிந்த சிறு மனம்
வருடியதை வசப்படுத்திக் கொள்ள
வலை விரித்து காத்துக் கிடக்கிறது
வருடியது வசப்படும் வரை
வற்றியபடி!
தென்றலும் நிலவும்கூட அப்படித்தான்
வசமாக சிக்கி வளமான கவிதைகளை
சமைத்துக் கொடுத்திருக்கின்றன
சற்றும் சலிக்காமல்
சந்தர்ப்ப சமயம் பார்த்து…
எதிர்பார்த்து எப்போதோ பூத்துக் கிடக்கும்
நந்தவனமல்லாத தொட்டிச் செடியின்
ஒற்றை ரோசாவும் அப்படித்தான்
அறிமுகமாய் சொல்லிக் கொள்கிறது
யாரிடத்தும் தான் வசப்பட்டுபோன கதைகளை…
கடந்து போன பேருந்து ஒன்றின்
முந்தைய பயணங்களில்
மழலை சிரிப்பொன்றில்
மனம் வசப்பட்டு இருக்கக்கூடும்
பார்த்தவர்கள் யாவருக்குமே…
அதோ மெல்லிய தூறல் ஒன்று
குடையற்று கடப்போம்
நனைந்தே வீதியை!
வசப்படட்டும் வானம்!!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!