நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 8 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

கட்டிலில் கண்களை மூடிப்படுத்திருந்தாள் இந்து. வலதுகால் கணுக்காலிலிருந்து பாதத்தை மூடிக் கட்டுப் போடப்பட்டிருந்தது.

அருகே மர நாற்காலி ஒன்றில் விசனத்தோடு அமர்ந்திருந்தார் ரத்தினவேல்.

“இந்து, இந்தும்மா! ரொம்ப வலிக்குதாடா கண்ணு.”

“இல்லப்பா”

“இந்துக்குட்டி, .அப்பா நாந்தான் மணி கொத்தனார்ட்ட ‘பாத, ‘கொதகொத’ன்னு மோசமா இருக்கு இந்துவ இன்னக்கி காலேஜு போக வேண்டாம்’னு சொல்லச் சொல்லி அனுப்புனேன்ல. அப்டியும் அப்பா பேச்சக் கேக்காம நீ ஏம் போன இந்துக்குட்டி. இப்ப பாரு காலு பெசகி எப்பிடி வீங்கிப் போயிருக்குனு, வலிக்குதுல்ல?” தவிப்போடு புலம்பினார்.

முப்பது தடவைக்கு மேல் ரத்தினவேல் இந்துவை இப்படிக் கேட்டுப் புலம்பியிருப்பார்.

அவரின் பக்கத்தில் நின்றபடி அப்பத்தாவும் தூபம் போடுவது போல் “அப்டி கேளு. நானும் சுந்தரியும் போவேண்டாம் போவேண்டாம்னு கரடியா கத்துனோம். எங்க பேச்ச எங்க கேட்டா? அடம்னா அடம் அப்டியோரு அடம். ஆனாலும் ஒரு பொம்பள புள்ளைக்கு இத்தன அடம், பிடிவாதம் கூடாதும்மா. ஒத்தன் வீட்டுக்குப் போய் வாழப் போற பொண்ணு இப்டியா அடங்காபிடாரியா இருக்குறது.”

குரலை உயர்த்தி கத்த ஆரம்பித்த தாயை “அம்மா, சும்மா இருக்க மாட்ட. அவுளுக்குப் படிப்பு மேல இருக்குற அக்கற அவள கெளம்ப சொல்லிருக்கு. அதான் யார் பேச்சயும் கேக்காத அவ கெளம்பிட்டா. அவளே கால் பெசகி சுளுக்கிக்கிட்டு வலியால துடிச்சிக்கிட்ருக்கா. இதுல நீவேற தொண தொணன்னு” அம்மாவிடம் எரிந்து விழுந்தார் ரத்தினவேல்.

“ஆவூன்னா எங்கிடதான் கத்துவ. எப்பிடியோ போ. நீயுமாச்சு ஒம் பொண்ணுமாச்சு. படிச்சு கிழிச்சு கலெக்டராகப் போறா” கோபத்தோடு கத்திக் கொண்டே அறையைவிட்டு வெளியேறினார் அப்பத்தா.

அப்பத்தா கத்தினாரே தவிர, பேத்தி சொன்ன பேச்சைக் கேட்காமல் போய் சேற்றில் விழுந்து காலில் அடிபட்டக் கொண்டதும் வலியால் துடிப்பதும் அவரையும் வெகுவாகவே பாதித்துதான் இருந்தது.

கண்களை மூடிப்படுத்திருந்த இந்து அப்பத்தா பேசிய பேச்சுக்கு சாதாரணமாக இருந்தால் இந்நேரம் ‘படபட’வென்று பொரிந்து தள்ளியிருப்பாள். ஆனால் தான் இப்போது அமைதியாக இருப்பது ஏன் என்று அவளுக்கே புரியவில்லை.

புலம்பும் அப்பாவை கொஞ்சி, கெஞ்சி ஏதாவது சொல்லி சிரிக்க வைத்து சமாதானப்படுத்துவாள். ஆனால் இப்போது அப்பா தன்னை தனிமையில் விட்டுச் சென்றால் தேவலாம் போல் இருந்தது. எப்போதும் அப்பாவிடம் ‘தொண தொண’வென்று பேசிக் கொண்டே இருப்பவளுக்கு இப்போது அப்பாவின் அருகாமையும் புலம்பலும் கொஞ்சம் அலுப்பைத் தந்தது.

ஏனோ தெரியவில்லை சேற்றில் வழுக்கி விழுந்த தன்னை கைகொடுத்து தூக்கிவிட வந்த அவனின் முகம் ‘சட்சட்’டென மனதுக்குள் வந்து வந்து சென்றது.

“மிஸ் மிஸ் மேடம்” என்று தடுமாறி பின், “ஆபத்துக்குப் பாவமில்ல எங்கையப் புடிச்சுண்டு எழுந்திருங்க” என்று சொல்லி தன்னை நோக்கி தனது வலது கரத்தை நீட்டியனின் முகம் தானிருந்த அந்த நிலையிலும் களேபரத்திலும்கூட மனதில் பதிந்து விட்டதை அவளால் மறுக்க முடியவில்லை.

‘ச்சே! என்ன இந்து இது. காலேல ஒம்பது மணிக்கு நீ சேத்துல விழுந்த. அவன் ஒனக்கு ஒதவ வந்தான். நீ அவன திட்டின. ஆனாலும் அவன் உனக்கு உதவி செஞ்சான்தான். வாழ்க்கேல பல சந்தர்பங்கள்ல பலபேர்க்கு நாம சின்ன அளவுலயோ பெரிசாவோ ஒதவுறோம். நமக்கு பலபேர் ஒதவுறாங்க. அத்தன பேரையும் மனசுல பிரிண்ட் போட்டு வெச்சுக்கறமா என்ன?. அவுங்குளுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு நகர்றதில்ல. அதுமாதிரி தானே காலேல ஒனக்கு ஒதவினவனும். ஒரு ரெண்டுநாளைக்கு அவன நெனவு வரும். அப்பறம் சாதாரணமா ஆயிடும்’ மனசு இந்துவை சமாதானப்படுத்தியது.

அடுத்த இரண்டு நாட்கள் இந்து கல்லூரிக்குச் செல்லவில்லை.

கால்வலி ஒரளவு சரியாகி விட்டிருந்தது. ஆனால், ஒனக்கு ஒதவியவனின் நினைப்பு ரெண்டு நாளில் குறைந்து மறைந்து விடும் என்று சமாதானம் செய்த மனசு தோற்றுப் போயிருந்தது.

எந்நேரமும் அவன் முகமும் பார்வையும் பண்பாட்டோடு அவன் உதவ முன் வந்ததும் வண்டியருகே தன்னையே பார்த்தபடி நின்றிருந்ததும் நெஞ்சில் மீண்டும் மீண்டும் வந்து இம்சை செய்தது.

இரண்டு நாள் அமைதியாக இருந்த மனசு மீண்டும் இந்துவை சீண்ட ஆரம்பித்தது.

‘இந்தூ! என்னாச்சு? மறுபடி மறுபடி அவனே நெனப்புல வரான் இந்தூ! அவன் யாரோ? எவனோ? நல்லவனோ கெட்டவனோ? ஏன் அவன இப்பிடி அடிக்கடி நெனைக்கிற? எத்தன வாலிப பசங்க ஒன்னப் பாத்து வழியறதும் நீ பேச மாட்டியான்னு தவிக்கிறதும் வலிய வந்து பேசி இளிக்கறதும், எத்தன பேர பாத்ருப்ப நீ? அப்பிடி பேசி இளிக்கிறவன எல்லாம் லெப்ட், ரைட் குடுத்து ஓட விடுறவ. இவன மட்டும் ஏன் இப்பிடி நெனச்சு நெனச்சுப் பாக்குற? விடுவியா! வந்தான் உதவி செஞ்சான் போனான்னு நெனச்சு போவியா ரொம்பத்தான் கொழப்பிக்கிற?’ அதட்டி அவளை அடக்கப் பார்த்தது மனசு.

தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி அவனின் நினைப்பை நினைவிலிருந்து அகற்றப் பார்த்தாள் இந்து. அவளின் முயற்சியில் அவள் ஜெயித்தாளா? தோற்றாளா? அவளுக்கே தெரியவில்லை.

விதி லேசாய்ச் சிரித்தது. தனக்கு மட்டுமே அது தெரியுமென்று.

                     ***

“ராகவ்! ராகவ்! என்ன கண்ணு ஒக்காந்தே தூங்கறியா? அதுவும் கண்ணத் தொறந்துண்டே” அம்மா கேட்டுக் கொண்டே தோளைப் பிடித்து உலுக்கியதும் சுயநினைவுக்கு வந்தான் ராகவ்.

“இ..இ..இல்லம்மா”

“என்ன? என்ன இல்லம்மா நொள்ளம்மா. நானும் ரெண்டு நாளா பாக்கறேன். நீ சரியா சாப்புடறதுமில்ல பேசறதுமில்ல. ஏதோ கனவுலகத்துல சஞ்சரிக்கிறாப்புல அப்பப்ப மௌனமா ஒக்காந்துடற. நா ஒன்னு சொன்னா நீ பத்து சொல்லுவ. ரெண்னாளா கேக்கற கேள்விகுக்கூட பதில் சொல்லாம மந்திரிச்சுவிட்ட சேவலாட்டம் முழிக்கிற. என்னாச்சு ஒனக்கு?”

“ஒ..ஒ..ஒன்னுல்லம்மா. ஆபீஸ்ல வேல அதிகம். அதான் அதே சிந்தனை” முதன்முதலாய்த் தாயிடம் பொய் சொன்னான் ராகவ்.

தாயிடம் பொய் சொல்வது தவறென்று அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் அம்மாட்ட, ‘இல்லம்மா. ரெண்டு நாள் முன்னாடி ஒரு பொண்ணப் பாத்தேம்மா. எத்தன அழகான பொண்ணு தெரியுமாம்மா? பாத்ததுலேந்து அந்தப்
பொண்ணோட நெனப்பாவே இருக்கு. அதான் இப்டி இருக்கேம்மான்னு சொல்ல முடியுமா?’ என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

“என்னமோ நீ சொல்ற. நா கேட்டுக்கறேன். காலாகாலத்துல ஒருபொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வெக்கனும் .சரி சரி ஆபீஸ்க்கு நேரமாகலியா? சாப்ட வா. மணியாகல, ஒக்காந்துருக்க” சொல்லிக் கொண்டே வெளியே போனார் மாமி.

‘காலாகாலத்துல ஒரு பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணி வெக்கனும்’ அம்மா சொல்லி விட்டுப் போன வார்த்தை ராகவின் மனதில் ரிபீட் ஆக, இதயத் தடாகத்தில் சின்னச் சின்னதாய் அலைகள் எழும்ப அலைகளுக்கிடையே இந்துவின் நிலவு முகம் மெல்ல எட்டிப் பார்த்தது.

மெல்லச் சிரித்தது விதி.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.