வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி

தன்முனைக் கவிதை எனும் வகைப்பாட்டில் உச்சத்தைத் தொட்ட நூலாகவும், இனி எழுத வரும் கவிஞர்களுக்கு முன் மாதிரியான நூலாகவும், காதலின் புது அகராதியாகவும் அமைந்திருக்கிறது கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’வலியின் புனைபெயர் நீ’ எனும் கவிதை நூல்.

‘தன்முனைக் கவிதை’ என்னும் புதுக் கவிதை வடிவம், தமிழ்க் கவிதையுலகில் தற்போது கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

புத்துணர்ச்சியோடு வலம் வரும் இவ்வகைக் கவிதைகளில் கவிஞர்கள் தரமிக்கக் கவிதைகளைப் படைக்கத் துவங்கி விட்டனர்.

சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கச் சிற்றிதழ்களும், பெரும்பாலான வணிக இதழ்களும் இவ்வகைக் கவிதைகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.

இவை மக்களிடம் வெகுவாய்ச் சென்றடைந்துள்ளன என்றால் அது மிகச் சரியானதாகும். அந்தளவிற்கு மக்களிடம் இவ்விதமான கவிதைகளுக்கு வரவேற்பு இன்று இருக்கிறது.

இக்கவிதைகளுக்கான இலக்கணம் காலத்திற்கு ஏற்ற இலக்கணமாய் அமைந்து எல்லோரையும் எழுத வைக்கின்றது எனலாம்.

தன்முனைக் கவிதையின் இலக்கணம் குறித்து அன்புசெல்வி சுப்புராஜ் கூறும்பொழுது,

“தன்முனைக் கவிதை என்பது ஒரு தவம். வாசித்தவுடன் ஒருநொடி வாசிப்பவரைச் சிந்திக்கச் செய்யும் வண்ணம் இருப்பின் அதுவே சிறந்த கவிதை.

உணர்வுமிகு வரிகளுக்குள் நாமும் பயணித்து உள்வாங்கிச் சொல்ல வரக்கூடிய கருத்துக்களைச் சிதையாமல் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.

வரிக்கு இரண்டு அல்லது மூன்று எளிய சொற்கள் கொண்டு நான்கு வரிகளில் எழுத வேண்டும். கூடுமான வரையில் கூட்டுச் சொற்களை தவிர்ப்பது நன்று.

முதலிரண்டு வரிகளில் ஒரு செயல் அல்லது செய்தி குறியீடாக வர வேண்டும். அடுத்த இரண்டு வரிகள் அதைச் சார்ந்தோ முரணாகவோ அமையுமாறு இருப்பின் சிறப்பு .

8-12 சொற்கள் என்பதால் தோன்றியதும் பதிவிடாமல் சிறுதெறிப்பு வருமாறு உருவாக்கம் செய்து பதிவிட்டால் ஆகச் சிறந்த கவிதையாக மிளிரும்” என்பார்.

பல தன்முனைக் கவிதை நூல்களும் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவ்வகையில் வெளிவந்த நூல்களில் தன்முனைக் கவிதை எனும் வகைப்பாட்டில் உச்சத்தைத் தொட்ட நூலாகவும், இனி எழுத வரும் கவிஞர்களுக்கு முன் மாதிரியான நூலாகவும் அமைந்திருக்கும் ஒரு நூல்தான் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’வலியின் புனைபெயர் நீ’ எனும் கவிதை நூலாகும்.

ஆரூர் தமிழ்நாடன்
ஆரூர் தமிழ்நாடன்

திரட்டி வைத்த காதல் வெண்ணை

உலகின் ஒட்டுமொத்த காதலர்களின் மனவுணர்வுகளை ஒரு கூட்டுக்குள் அடைத்து விடும் சாத்தியம் உண்டென்றால், அது இந்நூலுக்குள் இருக்கின்றது எனலாம்.

திரட்டி வைத்த காதல் வெண்ணை இந்நூலின் வெளிப்பாடாகும்.

உலகக் காதல் கோட்பாடுகளையெல்லாம் உள்ளடக்கி இருப்பதால், வேறு ஏதும் படிக்காமல், இந்த நூலை மட்டும் படித்துத் தெளிந்து, காதல் எனும் தலைப்பில் பல முனைவர் பட்டம் வாங்கி விடலாம்.

அந்த அளவிற்கு உணர்வுக்குக் குவியல்களாகக் காதல் உணர்வுகளின் ஒட்டுமொத்த கிடங்காக இந்த நூல் அமைந்திருக்கிறது.

காலத்தின் மாறுபாடுகளை இலக்கியம் முழுமையாய் தனக்குள் உள்வாங்கியிருக்கிறது என்பது வரலாறு.

21- ஆம் நூற்றாண்டின் காதல், காலத்தின் மாறுபாடுகளில் எவ்வாறு இனம் காணப்படுகிறதோ அவ்வாறு உருவமைக்கப்பட்ட ”காதல் அகராதி” தான், ’வலியின் புனைபெயர் நீ’ எனும் கவிதை நூலாகும்.

காதலிக்க மறந்தவர்கள், காதலிப்பவர்கள், காதலிக்கப் போகிறவர்கள் மற்றும் திருமணமாகி மனைவியைக் காதலிப்பவர்கள் அனைவருக்குமானக் கல்லூரிப் பாடத்திட்டம் இது.

இதைப் படித்தால் போதும், உலகையே காதல் வர்ணம் பூசி அழகு பார்க்கலாம்.

யாவரும் இதிலிருக்கும் கோட்பாடுகளை வாழ்வில் பயன்படுத்தி வாழ்ந்தால், தங்களது காதலுக்குப் பல நூறு தாஜ்மகால்கள் கட்டப்படும் சாத்தியம் உள்ளதாக அவரவர் வாழ்க்கை மாறிவிடும்.

கவிதையின் இரசவாதத் தன்மை கொண்ட வார்த்தைகளில் மூழ்கிப் போய், வேறு உலகில் மெய் மறந்து, காதல் இசை பாடிப் பறவையாய்ச் சிறகடிக்கும் நிலை வரும், இந்நூலைப் படித்து முடிக்கும்பொழுது.

எதிர்காலம், எவ்விதக் கவிதையும் சோடை போகாத நூல் ஒன்றைப் படித்ததுண்டா? எனக் காதல் கவிதைகளைப் படித்தவர்களிடம் கேட்டால், ’வலியின் புனைபெயர் நீ’ நூலைத் தவிர வேறு எந்த நூலை அவர்கள் காட்டுவார்கள்?

முடியாது.

இந்த நூல் ஒன்றே சிறு புள்ளி அளவு கருப்போ, மருவோ இல்லாத முழுக்க முழுக்க அழகு சொட்டும் புது ஓவியம்.

இந்த நூலின் தன்மையில், ஒவ்வொரு கவிதையும் ஒரு முழு நீளமான காதல் கதையை நீட்டிச் செல்கின்றது.

படிப்பவர் அதன் முடிவுவரை சென்று திரும்பப் பல மணி நேரமாகிறது மனதால். 100 தரமிக்க திரைக்கதை கொண்ட முழுப் படங்களின் முழுத் தொகுப்பு தான் இந்த நூல்.

ஆயிரம் கிளைக் கதைகள் நமக்குள் நம் அனுபவத்தை இணைத்து ஓட வைக்கும் திறன் கொண்ட ஊடுபொருளாகவும், ஊக்குவிக்கும் மையப் பொருளாகவும் இந்த நூல் விளங்குகிறது.

முடிந்தவரை, அதன் உலகத்தைத் தொட்டுவிட இந்தக் கட்டுரை முயற்சி செய்யும். ஆனால் கவிதைகள் கூறும் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் முழுக் கற்பனையையும், காதல் உணர்வுகளையும் கொண்ட காதல் உலகத்தை முழுமையுமாகத் தொட்டுவிட முடியுமா? என்றால் அதற்கு உறுதி கூற முடியாது.

உள்நுழைய முயற்சிக்கும் ஒரு சிறு முயற்சியே இக்கட்டுரையாகும்.

தீயணைப்பு நிலையமே

“படபடக்கிறது

சாளரத்துத் திரை

உனது ஒவ்வொரு

ஊர்வலத்தின் பொழுதும்”

எனும் ராஜ்மனோகரின் கவிதையில் வரும் காதலியின் ஊர்வலம் போன்றது தான், ஆரூர் தமிழ்நாடனின் ஒவ்வொரு கவிதைகயும்.

ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் படபடக்கிறது மனம். சுற்றிலும் உலகம் சுழல்கிறது. நான் மட்டும் காதலின் கைபிடித்து நடக்கின்றேன்.

பாரதி மோகனின் கவிதையைப் போல், முடிவில் காதலின் சுகத்தை அனுபவிக்கின்றேன். பாரதி மோகன் அதை மரணத்தின் சுகம் என்கிறார்.

”உன் விரல் பிடித்து

நடக்கையில்

அழகாக இருக்கிறது

மரணத்தின் பாதை”

ஆரூர் தமிழ்நாடன் கவிதைகளைப் படிக்கும்பொழுது, உலகக் காதல் கவிஞர்கள் அனைவரும் வரிசையாய் மனதில் தோன்றி வாழ்த்துக் கூறி மறைகின்றனர்.

இந்த அனுபவத்தைக் கவிதைகள் தொடர்ந்து ஏற்படுத்துகின்றன. உலக இலக்கியத் தரத்தைக் கொண்டு இருப்பதனால் ஏற்பட்ட வாசகனின் விளைவு தான் இது.

பாரசீகக் கவிஞன் ”ஜலாலுதீன் ரூமி” எழுதிய ’மீண்டெழுதல்’ கவிதை ஆரூர் தமிழ்நாடனின் கவிதைகளின் தரத்திற்கு இணையாக உள்ளன. கீழ்காணும் கவிதையில்,

”காணாத உன் கரங்களால்

என்னைக் கர்வமுற வைக்கிறாய்

கண்டடைய முடியாத உன் இதழ்களால்

என்னை நிறைக்கிறாய்

தெரியாத உன்னால் திரிகிறேன் நான்”

எனும் வரிகளில் இருக்கும் ஆழமும் பொருளும் அடேயப்பா! என்ன காதல் உணர்வு!!

காதலியின் இதழ் முத்தங்களால் காதலன் தன்னைக் கண்டு நிறைகிறார்.

இதே போல் கவிஞர் ஆரூர் தமிழ்நாடனின் பல கவிதைகளில் காதலியின் அல்லது மனைவியின் முத்தங்களும், தொடுதல்களும் உயிர் ஜீவிதத்தை எப்படி உயர்த்தி விடுகின்றன எனச் சிலாகித்து இருக்கிறார்.

அதில் மௌனமான பூர்ண முக்தி சுகம் இருக்கும் என்கின்றார். அதுவே வாழ்வின் ரசனையும்கூட என்கின்றார்.

மெல்லிய உணர்வுகளை, இயக்கங்களை இழப்புகளைக் கவிதையின் வார்த்தைகளில் செதுக்கி வைத்திருக்கிறார்.

காதலில் முத்தங்கள் இருவர் அன்பையும் இடம் மாற்றுகின்றன. அவ்வகையில் ஆரூர் தமிழ்நாடன் தம் கவிதைகளில்,

”முத்தக் காடே

உன்னிடம் தான்

அடைக்கலம் கேட்கின்றன

ஆசை மிருகங்கள்”

“ஐம்புலனும்

பற்றி எரிகிறது

என் தீயணைப்பு நிலையமே

அருகே வா”

என்று கூறுகின்றார். படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள், உவமை எனக் கவிதைகளில் முழு உச்சத்தைத் தொட்டு இருக்கின்றார் கவிஞர்.

காலத்தின் முன்னேற்றத்திற்குத் தகுந்தவாறு காதலன் காதலிக்கு இடையே உவமைகள் மாறி இருக்கின்றன.

ஆசை மிருகம் விரும்பும் முத்தக்காடாகக் காதலி மாறி இருக்கின்றாள். மற்றொரு கவிதையில் காதலி தீயணைப்பு நிலையமாக மாறி இருக்கிறாள். உவமைகள் காலத்திற்குத் தக நவீனமாகின்றன.

ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் காதலை உணர இன்னும் நிறையக் கட்டுரைகள் எழுத வேண்டும்.

வலியின் புனைபெயர் நீ கவிதை நூலை வாசிப்போம்.

காதலை என்றும் சுவாசிப்போம்!

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

6 Replies to “வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி”

 1. உலக உயிர்களுக்கு எல்லாம் அடிப்படையானது காதல். காதல் உணர்வுதான் மனிதனின் அன்பை மேலோங்கச் செய்கிறது.

  பாரதிசந்திரன் அவர்களின் விமர்சனம் காதல் உணர்வுகளின் ஒட்டுமொத்த சாராம்சமாக உள்ளது.

  ஆரூர் தமிழ் நாடன் அவர்களின் கவிதைகளைப் படிக்கத் தூண்டும் வகையிலும், காதலின் ஆழமான உணர்வுகளை வெளியிடும் எளிய வார்த்தைகளும் வெகுசிறப்பான பதிவாகும்.

  கவிதைகளின் பொருண்மைக்குத் தகுந்த மற்றவர்களின் கவிதைகளைச் சான்று காட்டியிருப்பது நன்று.

  மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் காதலின் மெல்லிய உணர்வுகளைத் தட்டி எழுப்புவதாகத் தங்களின் விமர்சனம் உள்ளது.

  பாராட்டுகள்!

 2. வலியின் புனைபெயர் நீ நூல் காதலின் புது அகராதி என்பதைத் தங்கள் விமர்சனம் படித்ததும் உணர்ந்து கொண்டேன்.

  உன் விரல் பிடித்து
  நடக்கையில்
  அழகாக இருக்கிறது
  மரணத்தின் பாதை

  இது போன்ற கவிதைகளை நேரடியாக படித்து உணர்ந்ததைப் போல உங்களுடைய விமர்சனம் அமைந்துள்ளது.

  எட்கார் ஆலன் போ மொழி தான் எனக்கு நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

  சிறந்த இடத்தில் சிறந்த வார்த்தையை விடுவது கவிதை என்கிறார்.

  அது போன்று சிறந்த கவிதைகளை மக்கள் வாசகர் மத்தியில் எடுத்து வைத்து, நூலையே வாசிக்கத் தூண்டும் எண்ணத்தை உருவாக்கும் உங்கள் வசீகரமான எழுத்து தீர்க்க தரிசனமாக உள்ளது.

  ஒரு படைப்பாளியை விட வாசகனே படைப்பின் அத்தனை கோணங்களையும் அறிந்து வைத்துள்ளார் என்பதற்கு இணங்க, படைப்பாளியின் பார்வையில் இருந்து பார்க்காமல், நீங்கள் வாசகனாய்ப் பார்க்கும் பார்வை உண்மையில் பாராட்டத்தக்கது.

  இன்னொரு இடத்தில் நீங்கள் சான்றுக்காக எடுத்து கையாண்டுள்ள கவிதை

  “முத்தக் காடே
  உன்னிடம் தான்
  அடைக்கலம் கேட்கின்றன
  ஆசை மிருகங்கள்”

  “ஐம்புலனும்
  பற்றி எரிகிறது
  என் தீயணைப்பு நிலையமே
  அருகே வா”

  இந்த கவிதைகள் காதலின் படிமத்தை அத்தனை அழகாக எடுத்துக் கையாண்டு நூலைப் படிக்கும் ஆர்வத்தை உருவாக்குகின்றன.

  மகிழ்ச்சி

  வாழ்த்துகள் அய்யா

 3. நீண்ட நாளுக்குப் பிறகு பாரதிசந்திரன் அவர்கள் கட்டுரையை இன்று இனிதுவில் கண்டேன்.

  இவர் வாயால் விமர்சனம் பெற, நானும் எழுதினால் நலமாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றியது..

  ஆரூர் தமிழ்நாடன் கவிதைகளை எல்லோரும் வாசித்து விட்டுப் போய்விடலாம். அதை ஊடறுத்துத் தாக்கும் யுக்தி பாரதிசந்திரன் ஐயாவுக்கே உள்ள கைவந்த கலை…

  மொத்த புத்தகத்தையும் கரைத்துப் பிழிந்து கால் டம்ளர் பழ ரசமாக பின்வருமாறு எழுதி இருப்பது ஒரு விமர்சகரின் டச் என்று சொல்லலாம்…

  “காதலிக்க மறந்தவர்கள், காதலிப்பவர்கள், காதலிக்கப் போகிறவர்கள் மற்றும் திருமணமாகி மனைவியைக் காதலிப்பவர்கள் அனைவருக்குமானக் கல்லூரிப் பாடத்திட்டம்”

  சந்திரன் எப்போதும் போல ஒளிர்கிறது…

  வாழ்த்துகள்!

 4. உணர்வுக்குக் குவியல்களாகக் காதல் உணர்வுகளின் ஒட்டுமொத்த கிடங்காக இந்த நூல் அமைந்திருக்கும்.

  ஆரூர் தமிழ்நாடன் ஐயா அவர்களின் ‘வலியின் புனைப்பெயர் நீ’ நூலினை வாசித்த அனுபவத்தினைத் தருகிறது தங்களின் விமர்சனம்.

  மகிழ்வின் தருணங்கள் மலரட்டும் ஐயா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.